ஆளுமை:சந்திரலிங்கம், காளிக்குட்டி

From நூலகம்
Name காளிக்குட்டி சந்திரலிங்கம்
Pages காளிக்குட்டி
Pages அழகம்மா
Birth 1951.10.13
Place சேனைக்குடியிருப்பு, அம்பாறை
Category பல்துறை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


காளிக்குட்டி சந்திரலிங்கம் அவர்கள் அம்பாறை மாவட்டம் சேனைக்குடியிருப்பு கிராமத்தில் காளிக்குட்டி மற்றும் அழகம்மா தம்பதிகளுக்கு மகனாகப் 1951.10.03 இல் பிறந்தார். இவருக்கு 3 சகோதரிகள். இவருடைய அப்பா யோக கலை கற்று தேர்ந்தவர்.

ஆரம்பக் கல்வியை சேனைக்குடியிருப்பு கணேசா மகா வித்தியாலயத்தில் தரம் 4 வரையும் கற்று பின்னர் தரம் 5 இனை நற்பிட்டிமுனை கணேசா வித்தியாலயத்திலும் தரம் 6 லிருந்து உயர்தரம் வரை கல்முனை கார்மேல் பாத்திமா தேசிய பாடசாலையிலும் கற்றார். உயர்தரத்தில் பொருளியல் பாடத்தை தெரிவு செய்து அதில் சித்தியடைந்து பல்கலைக்கழகம் சென்று பட்டம் முடித்த பின்னர் கொழும்பில் உள்ள பாடசாலையில் ஆசிரியர் தொழிலில் சேர்ந்தார்.

ஆசிரியர் தொழிலில் இணைவதற்கு முன்னர் கல்முனை பலநோக்கு கூட்டுறவு சங்கத்தில் இலிகிதராக இணைந்து தொடர்ச்சியாக கணக்காளராகவும் பணியாற்றியுள்ளார். அதன் பின்னர் காத்தான்குடி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தில் கணக்காளராகவும் சமூக மேம்பாட்டு உத்தியோகத்தராகவும் பணியாற்றினார். ஆசிரியர் தொழிலில் 5 வருடங்கள் சேவையாற்றி பின் அதிபர் பரீட்சையில் சித்தி பெற்று முதலாம் தர அதிபராக நற்பிட்டிமுனை கணேசா வித்தியாலயத்தில் கடைமையாற்றி ஓய்வு பெற்றார். 1970 ஆம் ஆண்டளவில் ஶ்ரீ சிதானந்த சரஸ்வதி யோகி அவர்களிடம் யோகக் கலையை கொழும்பிலே 10 வருடங்கள் குரு சிஷ்யன் முறையில் கற்றார்.

இவருக்கு பெங்களூர் விவேகானந்தா கேந்திர யோகா ஆராய்ச்சி நிலையத்தில் கற்பதற்கான ஒரு புலமைப்பரிசில் கிடைத்தது. அதனூடாக தொடர்ச்சியாக யோகக் கலையை மேலும் திறம்படக் கற்று இந்திய துணைத் தூதரகத்தின் கீழ் இயங்குகின்ற இந்திய கலாச்சார நிலையத்திலே 10 வருடங்கள் யோகா ஆசிரியராக பணியாற்றியுள்ளார். அத்தோடு தனிப்பட்ட ரீதியாகவும் மாணவர்களுக்கும் முக்கிய பிரமுகர்களுக்கும், Mental health association பணிமனையில் உள்ளவர்களுக்கும் யோகக் கலையை பயிற்றுவித்துள்ளார். பல்வேறு கருத்தரங்குகள், விழாக்கள், பாடசாலைகள் போன்றவற்றிலும் யோகக்கலையை நிகழ்த்தியுள்ளார்.

அதன் பின்னர் பிறந்த ஊரில் காணப்படுகின்ற பாடசாலைகள், ஆன்மீக அமைப்புக்கள் போன்றவற்றில் யோகக்கலையை பயிற்றுவித்தார். ரூபவாஹினி அலைவரிசையில் உதயதரிசனம் நிகழ்ச்சியில் ஆரோக்கிய வாழ்வு தரும் யோகா எனும் தலைப்பில் பல மாதங்கள் இவரது நிகழ்ச்சி தொடர்ச்சியாக ஒளிபரப்பப்பட்டது. சக்தி தொலைக்காட்சியில் காலைக்கதிர் நிகழ்ச்சியில் இரண்டு தடவை நேரடி ஒலிபரப்பில் கலந்துகொண்டு உரையாடியுள்ளர். இவர் யோகக் கலை மட்டுமல்லாது பொலி ரோபட் ஆசிரியர் அவர்களிடம் சோடோகான் கலையை 4 வருடங்களும் வூடோகான் கலையை ஸூசுசூட் ஆசான் மற்றும் போதனாசிரியர் ராமசந்திரன் அவர்களிடம் திருகோணமலையில் கற்றார். சர்வதேச ரீதியாக சோடான், நீடான், சன்டான் போன்ற ஆகிய 3 கறுப்பு பட்டிகளை (Black belt) பெற்றிருக்கின்றார்.

சர்வதேச ரீதியான ஒரு தற்காப்பு கலை போதனாசிரியராகவும் விளங்குகின்றார். தற்போது இலங்கை கராத்தே சம்மேளத்தினால் 4ம் கறுப்பு பட்டிக்கு அடுத்ததாக 5,6 ஆம் கறுப்பு பட்டிகளையும் பெற்றுள்ளார். இப்போது ராம் கராத்தே சங்கத்தில் ஆலோசகராகவும் கிழக்கு மாகாணத்தின் தலைவராகவும் கடமையாற்றிக் கொண்டிருக்கின்றார். கலை இலக்கிய துறையில் 1967 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து கலை இலக்கியம், வில்லுப்பாட்டு, கோலாட்டம், நாட்டுக்கூத்து போன்றவற்றில் பங்குபற்றி பல சரித்திர இலக்கிய நாடகங்களில் நடித்தும் உள்ளார்.

1973 ஆண்டில் இலக்கியவாதிகளான சண்முகம் சிவலிங்கம், சடாச்சரன், இரத்தினவேல் போன்றோர் நடித்த பூசாரி புதிது எனும் நாடகத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நாடகம் பாண்டிருப்பு திரெளபதி அம்மன் ஆலய முன்றலில் மேடையேற்றப்பட்டது. 1979 இல் வானொலி அறிவிப்பாளர் எ. ஆர். எம். ஜிப்றியுடன் இணைந்து நடித்த ‘விதியின் வழியே’ என்னும் நாடகம் கல்முனை சாஹிறாக் கல்லூரியில் நடைபெற்றது. சேனைக்குடியிருப்பு கலைவாணி கலாமன்றம், பாண்டிருப்பு உதய சூரியன் கலாமன்றம் போன்றவற்றிலும் காசிய மன்னன் கந்தக்குட்டி குழுவினருடனும் இணைந்து நூற்றுக்கணக்கான நாடகங்களில் நடித்துள்ளார்.

இவரது முதலாவது கவிதை பாண்டிருப்பு அக்கினி கலைவட்டத்தின் கையெழுத்துப்பிரதியில் வெளிவந்தது. கொழும்பு மிகுந்து மாவத்தை முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் இவரது முயற்சியால் விடிவெள்ளி பத்திரிகை வெளியிடப்பட்டது. இவர் யோகரெத்தினா, யோகாச்சாரியார், யோகாசன கலாநிதி போன்ற பட்டங்களைப் பெற்றுள்ளார். கிழக்கு மாகாண சபையால் வித்தகர் விருதினை பெற்றுள்ளதுடன் பொதுச் சேவைக்காக தேசபந்து பட்டமும் பெற்றுள்ளார்.