ஆளுமை:கைலாசநாதக்குருக்கள், ஐயாத்துரைக் குருக்கள்.

From நூலகம்
Name கைலாசநாதக்குருக்கள்
Pages ஐயாத்துரைக் குருக்கள்
Pages காமாட்சி அம்மையார்
Birth 1912
Place நயினாதீவு
Category சமயப் பெரியார்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவஶ்ரீ கைலாசநாதக் குருக்கள், ஐயாத்துரைக் குருக்கள் (1912 - ) நயினாதீவில் பிறந்த சமயப் பெரியார். இவரது தந்தை ஐயாத்துரைக் குருக்கள்; தாய் காமாட்சி அம்மையார். தற்போது நாகபூசணி வித்தியாலயமாகத் திகழும் அன்றைய தில்லையம்பல வித்தியாலயத்தில் இவர் தனது ஆரம்பக் கல்வியைத் தொடங்கினார். பதினோராவது வயதில் பூணூல் சடங்கைப் பூர்த்தி செய்துகொண்ட கைலாசநாதர் உயர் கல்விக்காக வண்ணை வைதீஸ்வரன் கோவில் குருக்களான பகவதீஸ்வரா சாஸ்திரிகளிடமும் வித்துவான் கணேசையரிடமும் வேலணை தம்பு உபாத்தியரிடமும் புராண பாடங்களைக் கற்றுத் தேர்ந்த பின் மேல் படிப்புக்காக இந்தியா சென்று அங்கு திருநெல்வேலியில் வேத சிவாகமங்களை முறைப்படி கற்றுத் தேர்ந்து நாடு திரும்பினார்.

யாழ்ப்பாணம் பொன்னம்பலவாணேசர் கோவிலில் இவரது சிறிய தந்தை சாமிநாதக் குருக்களினால் இவருக்கு ஆசாரி அபிஷேக விழா நடத்திக் குருப்பட்டமளிக்கப்பட்டது. குருபீடத்தில் ஏறிய இவர் அப்பீடத்தின் தகைமைகள், திறமைகள் பெற்றதோடு சைவ உலகின் தலைமகனாய் உயரத் தொடங்கினார். நீர்கொழும்பில் பிள்ளையார் கோயில், மாரியம்மன் கோயில் ஆகியவற்றில் பன்னிரெண்டு வருடங்களுக்கு மேலும், நல்லூர் கந்தசுவாமி கோவிலில் ஏழு வருடங்களும் பிரதம குருவாகவிருந்து தனக்கென்று ஒரு இடத்தை யாழ்ப்பாணத் தமிழர்கள் மத்தியில் பெற்றுக் கொண்டார். பின்னர் தன் தகப்பனார் காலமாகி விட்டதால் நயினை அம்பாள் ஆலயத்தின் பரம்பரை பூசையுரிமையையும் புங்குடுதீவு கந்தசுவாமி கோவிலில் தனது மாமனாரின் பஞ்சாட்சரக் குருக்களின் பூசை உரிமையையும் பெற்றுக் கொண்டார்.

1969 ஆம் ஆண்டு நடைபெற்ற புள்ளிருக்கு வேளூர் வைதீஸ்வரன் கோவில் சொர்ண பந்தன மகாகும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட குருமணியின் திறமையைக் கண்ட சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் இவரைப் பாராட்டிக் கௌரவித்ததோடு சிறந்த நூல்களையும் பரிசளித்தார். பிரதிஷ்டா பூசணம், சிவாகமஞானபானு, சிவஞான சாகரம், சிவஞான பாஸ்கரன் பட்டங்களைப் பெற்ற இவர், ஈசான சிவாச்சாரியார் என்ற தீட்சா நாமம் பெற்றுப் பிறந்த நாட்டுக்குப் பெருமை சேர்த்துக்கொண்டார்.

Resources

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 127-128