ஆளுமை:கெங்காதரானந்தா, சிவசங்கரன்

From நூலகம்
Name சுவாமி கெங்காதரானந்தா
Pages சிவசங்கரன்
Birth
Pages 1921.06.22
Place திருப்புரியூர், கேரளா
Category சைவ சமய துறவி
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவசங்கரன் கெங்காதரானந்தா இந்தியாவின் கேரளத்தில் திருப்புரியூர் என்னுமிடத்தில் (1921.06.22) இல் பிறந்தார். இவருடைய தந்தை சிவசங்கரன், இப் பெயர் ஒரு மகா தபசியினால் வைக்கப்பட்டது. இளமைக் காலங்களிலே செல்வங்களிலும், பிராமணர் குல ஆசாரங்களிலும் நாட்டமற்று இறையிலும், இறையடியார்களிடத்திலும் நாட்டம் கொண்டதாகவே இவரது செயற்பாடுகள் காணப்பட்டன. பாடசாலைக் கல்வியோடு வேதங்கள், சாத்திரங்கள், சங்கீதம், ஆயுர்வேதம், வாள் பயிற்சி, சிலம்பாட்டம் போன்றவற்றை "கோவிந்தகுரு" என்பவரிடம் கற்றுக் கொண்டார்.சில காலங்களின் பின்னர் வீட்டைவிட்டு வெளியேறி இமயமலை வரை சென்று பல தலங்களையும் வழிபட்டார். இவ்வாறான நாட்களில் "சாந்தகிரி பாபா" என்னும் சித்தர் மூலம் திருக்கோணமலைக்கு வரும் எண்ணம் ஏற்பட்டது. இவருடைய இளமைக்காலத்தில் வெள்ளை நாகம் ஒன்று கழுத்தைச் சுற்றியவாறு ஓர் இரவு முழுவதும் இருந்தது எனவும், இதனால் கழுத்தில் ஏற்பட்ட அடையாளமும், நெற்றியில் இயற்கையாகவே ஏற்பட்ட பிறை வடிவும் 1940 ஆம் ஆண்டு இவர் திருக்கோணமலைக்கு வந்த போது இவரை விட்டு நீங்கியதாகவும் செல்வி. தா. சியாமளாதேவி அவர்களின் குறிப்புகள் மூலம் அறியக் கூடியதாகவுள்ளது.

1940ஆம் ஆண்டில் இலங்கைக்கு வந்து வெருகலம்பதி, அகத்தியதாபனம் முதலான பல தலங்களையும் தரிசித்து விட்டு, திருக்கோணமலை நகரின் வடகரை வீதியில் இருப்பிடம் ஒன்றையும் அமைத்துக் கொண்டு தினமும் திருக்கோணேஸ்வரப் பெருமானைத் தரிசித்து வந்தார். திருக்கோணேஸ்வரத்திலுள்ள குகைகளில் தினமும் தியானத்தில் ஈடுபட்டார். சிலவேளைகளில் இவரது தியானம் நாட்கணக்கிலும் சென்றதுண்டு. இவ்வாறாக 18 வருடங்களாக கடுந்தவம் புரிந்து ஞானநிலையை அடைந்து மக்கள் சேவையே மகேசன் சேவை என மக்கள் பணியாற்றினார். பல்வேறு வகையான இறைச் செயற்பாடுகளுக்காக வடகரை வீதியில் ஆரம்பிக்கப்பட்ட "சிவயோகசமாஜம்" என்னும் நிலையத்தில் அன்பர் கூட்டம் அதிகரித்தமையால், 1959 ஆம் ஆண்டு இந்நிலையத்தை பிரதான வீதிக்கு மாற்றினார். இச் சமாஜ காணியை ஆரம்பத்தில் குத்தகையாகப் பெற்று, பின்னர் விலையாக வாங்கிக் கொண்டார். இங்கே வாசிகசாலையும், சிறுவர் இல்லமும் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது. தூய வெள்ளை வேட்டியும் மேல் துண்டும் அணிந்து பின்னர் கதிர்காமம் சென்று காவியுடை தரித்த சுவாமி கெங்காதரானந்தாவின் அருளுரைகள் பல நூல்களிலும் தினசரி பத்திரிகைகளிலும் இடம் பெற்றுள்ளன. இவை கடமை, தூய்மையான இருதயம், தெய்வசரணாகதி என்னும் மூன்றையும் மிக அழுத்தமாகக் கூறுவதாக பெரியோர்கள் குறிப்பிடுகின்றனர். சுவாமியின் அருளுரைகள் பல எமது சிந்தனையையும் தூண்டுபவையாக உள்ளன.

அந்தரத்தில் படுத்தல், நீரின்மேல் மிதத்தல், பாம்பைக் கையால் பிடித்தல் போன்ற சித்துத் தன்மை கைவரப் பெற்ற சுவாமி அவர்கள் எதிர்காலங்களையறியும் ஓர் தீர்க்கதரிசியாகவும் விளங்கியுள்ளதை பல சம்பவங்கள் மூலம் அறியக்கூடியதாகவுள்ளது. சுவாமியின் உன்னதமான பணிகளில் ஒன்று கன்னியாவில் சிவயோகபுரம் நடேசர் ஆலயத்தை அமைத்தமை. முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் திரு. ந. இராஜவரோதயம் அவர்கள் மூலம் இரண்டு ஏக்கர் நிலத்தைப் பெற்று 1972 ஆம் ஆண்டில் இவ் ஆலயத்தையும் அமைத்து, அதைச் சூழவர தமிழ் மக்களுக்கான குடியேற்றத்தையும் தீர்க்கதரிசனத்துடன் அமைத்து, அங்கே ஓர் சைவ ஆத்மீக சூழல் உருவாக வழியேற்படுத்தினார். சுவாமியே நேரடியாக மக்களுடன் நின்று இக்காணியைக் காடு வெட்டித் துப்பரவு செய்து கோவில் அமைத்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. இவ் ஆலயத்தின் மகிமை பற்றி சுவாமி அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார். "எனது சைத்தன்யம் அனைத்தையும் இந்தக் கோயிலில் தான் குவித்து வைத்துள்ளேன். பெறவேண்டியவர்கள் இங்கிருந்து அதைப் பெற்றுக் கொள்ளலாம்." சுவாமி அவர்களுக்கு இலங்கையின் பல பாகங்களிலும் வெளிநாடுகளிலும் பல சீடர்கள் இருந்துள்ளனர். மலையகத்தின் பண்டாரவளையில் இருந்து சுவாமியைத் தேடி திருக்கோணமலைக்கு வந்து அவரின் ஞான நிழலில் வளர்ந்த பிரதான சீடர் சுவாமி ஜெகதீஸ்வரானந்தா ஆவார். இவர் திருகோணமலை மக்களால் சின்னசுவாமி என அழைக்கப்பட்டார். தன்னுடைய குரு மீது மிகவும் அபரிதமான நம்பிக்கை கொண்டவராக விளங்கினார்.

சுவிஸ் நாட்டைச் சேர்ந்த பீலிக்ஸ் என்பவர் சிறுவயது முதல் முற்பிறப்பு தகவல்களைக் கூறும் அபூர்வ சக்தியைக் கொண்டவராகத் திகழ்ந்தார். அடிக்கடி சிவயோக சமாஜத்துக்கு வந்து சுவாமி செங்காதரானந்தாவைத் தரிசிப்பார். சுவாமியின் மேல் அன்பும் பயபக்தியும் கொண்டிருந்தார். இவர் ஒருமுறை சுவாமியின் வார்த்தையின்படி நடேசர் ஆலயம் வந்து இறைவனை வழிபட்டார். அப்போது இவ் ஆலய சூழலில் ஏனைய இடத்தைக் காட்டிலும் அதிக அதிர்வலைகள் உள்ளதாகக் கூறி ஆனந்தமடைந்த செய்திகளுமுண்டு. இவ்வாறே 2008 ஆம் ஆண்டில் இங்கு வருகை தந்த தென்னாபிரிக்க காயத்திரி பீட ஸ்தாபகர் சுவாமி சங்கரானந்தா அவர்களும் நடேசர் கோயிலின் மகிமையை விபரித்துள்ளார்.

உள்ளவர்களிடம் பெற்று இல்லாதவர்களுக்கு கொடுக்கும் உண்ணதமான பிறவி சுவாமியவர்கள். இதே கொடுத்தவருக்கும் தெரியாது யாருக்குக் கொடுத்ததென்று வாங்கியவருக்கும் தெரியாது யாரிடம் பெற்றதென்று இவ்வாறு அடியவர்களுக்கு வீடுகளைக் கூட பெற்றுக் கொடுத்ததாக மக்கள் கூறுகின்றனர். சுவாமி கெங்காதரானந்தாலின் மக்களுடனான ஆத்மீக வாழ்வின் ஓரங்கமாக விவசாய வேளாண்மையும் ஆரம்பிக்கப்பட்டு ஆச்சிரமத்தின் உணவுத் தேவை பூர்த்தி செய்யப்பட்டது. பன்மதவாச்சி என்னுமிடத்தில் பெற்றுக்கொண்ட 25 ஏக்கர் காணியில் சுவாமியின் நேரடி கண்காணிப்பில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டது. அங்கிருந்த விவசாய தொழிலாளர்களைக் கொண்டு "நெல்மணிக் கழகம்" என்னும் விவசாய அமைப்பை ஏற்படுத்தினார். அவ் வயல்வெளியில் "புஜங்க விநாயகர்" ஆலயத்தையும் உருவாக்கினார். இத் தொழிலாளர்களுக்கு நடேசர் ஆலயத்துடனான இணைப்பையும் ஏற்படுத்தினார். சுவாமியின் சிந்தனைகள், பஜனைகள், அருளுரைகள், ஆசிச்செய்திகள் என ஏராளமான நூல்கள் உள்ளன.

திருக்கோணமலையில் இனக்கலவரம் உச்சம்பெற்ற வேளையில் (1983) நடேசர் ஆலயமும் தகர்க்கப்பட்டது. இவ்வாறு கோயில் அழிக்கப்பட்டு பொருட்கள் கொள்ளையடிக்கப்படுவதற்கு ஒரு கிழமைக்கு முன்னமே யாருமதியாமல் சமாஜ தொண்டரான திரு. பாக்கியநாதன் அவர்களுடன் நடேசர் கோயிலுக்குச் சென்று அங்கிருந்த அனைத்து விக்கிரகங்களையும் ஒரு பையிலிட்டுக் கட்டி ஆச்சிரமத்துக்குக் கொண்டு வந்து பாதுகாத்ததை பின்னாட்களில் அறிந்துகொண்ட சுவாமியின் பக்தர்கள் அவரின் தீர்க்கதரிசனத்தை எண்ணி வியந்தனர். பல சிரமங்களுக்கு மத்தியில் மீண்டும் புனருத்தாரணம் செய்யப்பட்ட நடேசர் கோயிலில் 2010.02.03 அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான வன்செயல்கள் திருக்கோணமலையில் 1979 ஆம் ஆண்டு தொடக்கம் அடிக்கடி இடம்பெற்றுள்ளன. இதனால் ஆத்மீக சூழலும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. பெருமளவிலான மக்கள் உயிர் பாதுகாப்புத் தேடி தமது வாழ்விடங்களை விட்டு இடம்பெயர்ந்திருந்தனர். சிவயோக சமாஜத்தையும் சில காலங்கள் மூட வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டது. இருந்தாலும் சுவாமி கெங்காதரானந்தாவின் இறைபணி மீதான தீவிரம், திருமலை மக்களின் வேண்டிய ஒத்துழைப்பு காரணமாக வெவ்வேறு இடங்களில் சமாஜ நிகழ்வுகள் இடம்பெற்றன. குறிப்பாக 1990 ஆனி மாதத்தில் ஏற்பட்ட கலவரத்தினால் சுவாமியின் இருப்பிடமும் திரு. விமலநாதன், திருமதி. துரைநாயகம் ஆகியோரின் இல்லங்களுக்கு மாற்றம் பெற்றிருந்தது. அங்கேயே பஜனை முதலான நிகழ்வுகளும் நடைபெற்றன.

"கர்ம ரகசியம், ஆத்ம அனுபூதி என்பதை மற்றவர்களுக்கு தெளிவுபடுத்த முடியாது. மன்னனும் மனிதனும் உனக்கு மன்னிப்பு அளித்தாலும் உனது தீவினைப் பயன் உன்னை மன்னிப்பதில்லை." என்பது சுவாமியின் வாசகங்கள். சுவாமி கெங்காதரானந்தா அவர்கள் நோய் காரணமாக கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளையில் நோயின் தீவிரத்தன்மை காரணமாக உடனடியாக இந்தியாவுக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு கெஸ்ற் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மறுநாள் காலை 1991.02.16 அன்று இறைவனது திருவடி நிழலைச் சேர்ந்தார். மறுநாள் சுவாமியின் பூதவுடல் திருக்கோணமலைக்குக் கொண்டுவரப்பட்டது.

சுவாமியின் இறுதி ஊர்வலமானது பூரண கும்பங்கள் வைத்து, தோரணங்கள், வாழைமரங்கள், மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட வீதிகளினூடாக நடைபெற்று, புகழுடல் திருக்கோணமலை இந்துமயானத்துக்குக் கொண்டுவரப்பட்டு தீயுடன் சங்கமமாகியது. அஸ்தியின் ஒரு பகுதியானது திருக்கோணேஸ்வரர் ஆலய கடலிலும், கதிர்காமம் மாணிக்க கங்கையிலும் கரைக்கப்பட்டது. மிகுதி சிவயோக சமாஜத்திலும், நடேசர் ஆலய வளாகத்திலும் வைக்கப்பட்டன. சுவாமியின் சீடரும் அவரது மறைவின் பின்னர் சிவயோக சமாஜத்தைப் பொறுப்பேற்று நடாத்தியவருமான சுவாமி ஜெகதீஸ்வரானந்தா அவர்களால் சிவயோக சமாஜத்தில் சுவாமி கெங்காதரானந்தாவின் அஸ்தி வைக்கப்பட்ட பீடத்தின் மீது 1991.06.07 அன்று லிங்கதாபனம் செய்யப்பட்டது. இச் சுயம்பு லிங்கமானது கொழும்பு மௌனாச்சிரம சுவாமி ஸ்ரீமத் உமாசங்கரானந்த சரஸ்வதி ஷி ஓம் ஷர் அவர்களால் இந்தியாவில் இருந்து எடுத்து வரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறாக இந்தியாவில் இருந்து திருகோணமலைக்கு வந்து, பல ஆத்மீகப் பெரியார்களையும் ஏராளமான மக்களையும் ஒருங்கு சேர்த்து, பல ஆண்டுகளாக இங்கு ஆத்மீகச் சூழலை ஏற்படுத்தி, எமது மக்களின் வாழ்வுக்காகவே தன்னை அர்ப்பணித்து மகாசமாதியடைந்த மகான் பிரம்ம ஞானி ஸ்ரீமத் சுவாமி கெங்காதரானந்தா அவர்கள் இன்றளவும் எம்முடனேயே வாழ்ந்து வருகிறார். தற்காலத்தில் சிவயோகசமாஜத்தை சுவாமி கெங்காதரானந்தாவின் ஆசிபெற்று திரு இரா. இரவிச்சந்திரமோகன் அவர்களின் தலைமையில் ஒரு நிருவாகக் குழுவினர் சிறந்த முறையில் நடாத்தி வருகின்றனர்.

பின்னரான காலத்தில் இங்குள்ள சிறுவர் இல்ல கட்டடம் அமெரிக்க வாழ் சைவ அன்பர்கள் தங்களது பெற்றோரின் நினைவாக நிர்மானித்துக் கொடுத்திருந்தனர். அத்தோடு அருள்மிகு இலண்டன் முத்துமாரி அம்மன் திருக்கோயிலைப் பராமரிக்கும் சிவயோகம் அறக்கட்டளையால் இங்குள்ள சிவயோக சமாஜ மண்டபம் அன்பளிப்பாக நிர்மாணிக்கப்பட்டு உயர்திரு. பொ. கந்தையா (காந்தி ஐயா) அவர்களால் 31.08.2005 திகதியன்று திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

"சுவாமி கெங்காதரானந்த ஞானமண்டலம் ஆலயம் வஜனாம்ருதம்", செல்வி தா.சியாமளாதேவி அவர்கள் தொகுத்து வெளியிட்ட "வாழ்வை நெறிப்படுத்தும் சுவாமி கெங்காதரானந்தா", "பிரம்ம ஞானி ஸ்ரீமத் சுவாமி கெங்காதரானந்தா அவர்கள் வழங்கிய அமிர்தத் துளிகள்", "பிரம்மஞானி ஸ்ரீமத் சுவாமி கெங்காதரானந்தா அவர்களின் அமிர்த வர்ஷம்" போன்றன சுவாமியின் அருட்கருத்துக்களைத் தாங்கி வெளிவந்த நூல்களில் சிலவாகும்.