ஆளுமை:கணேசன், வைரமுத்து

From நூலகம்
Name வைரமுத்து கணேசன்
Pages வைரமுத்து
Pages பாலாத்தை
Birth 1953.05.16
Place சேனைக்குடியிருப்பு, அம்பாறை
Category நாட்டுப்புற பாடகர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


வைரமுத்து கணேசன் அவர்கள் அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேசத்தின் சேனைக்குடியிருப்பு கிராமத்தில் வைரமுத்து பாலாத்தை தம்பதிகளுக்கு மகனாக 1953.05.16 இல் பிறந்தார். இவர் கும்மி, காவியம், கோலாட்டம், வில்லுப்பாட்டு மற்றும் சிறுகதைகள் போன்ற பன்முகத்திறமை கொண்ட கலைஞர் ஆவார்.

இவர் தனது ஆரம்பக் கல்வியை சேனைக்குடியிருப்பு அரசினர் கலவன் பாடசாலையில் பயின்றார். இவருக்கு பிறவியிலே உள்ள திக்கு வாய் காரணமாக தரம் 6 வரையே கற்க முடிந்தது.அதன் பின் தந்தையுடன் சேர்ந்து உழவுத்தொழிலான விவசாயத்தை தொடர்ந்தார். 1974ஆம் ஆண்டு ஊரில் உள்ள நிறைய மன்றங்கள் நிகழ்த்தும் நாடகங்களை பார்த்து இவருக்கும் நாடகங்களில் நடிக்க ஆர்வம் வந்தது. அதனால் ஒரு மன்றத்தில் சேர்ந்து நாடகப் பயிற்சியில் ஈடுபட்டார். ஆனால் இவரின் திக்கு வாய் காரணமாக நாடகம் நடிக்க கஷ்டப்பட்டார். இவரது குருவான நல்லதம்பி குருக்கள் இவருக்கு பக்க பலமாக இருந்து இவரை நாடகமொன்றில் நடிக்க வைத்து பேச வைத்தார். இவரது முதலாவது நாடகத்தில் இருந்தே இவரது திறமையை ஏனையோரும் அறிந்தார்கள்.

1990 ஆம் வரை பல நாடகங்கள் நடித்து பல பாராட்டுக்களை பெற்றுள்ளார். 1990 ஆண்டுக்குப் பின் தானாகவே நாடகங்கள் எழுதுதல், வில்லுப்பாட்டு, கும்மி, கலாச்சார பாடல்கள் போன்றவற்றை எழுதினார். அதன் பின் 1990 ஆண்டு இனக் கலரவத்தில் பாதிக்கப்பட்டு அதன் அனுபவங்களை சேர்த்து வன்செயல் காவியமாக எழுதியுள்ளார். கலவரத்தின் பின் இவருக்கு ஆன்மீகத்தில் நாட்டம் ஏற்பட்டது. ஒவ்வொரு கோவில்களில் உள்ள இறைவனுக்கு இவரால் கும்மி, பத்து, காவியம் போன்றன எழுதியுள்ளார்.பின் அதனை எல்லாம் சிறு சிறு புத்தகங்களாக்கி கோவில்களுக்கு கொடுத்துள்ளார். அத்தோடு மரண சடங்குகளில் பாடும் பஞ்சபுராணத்திற்கு பதிலாக மயான பத்து எனும் ஆக்கத்தை எழுதி மக்கள் பயன்பாட்டிற்கு விட்டார்.

அதன் பின் இறந்த வீடுகளில் பாடும் மோட்சப் பத்து எனும் பாடல் தொகுப்பையும் வெளியிட்டார். சேனைக்குடியிருப்பு முத்துமாரியம்மனுக்கு முதலாவதாக ஊஞ்சல் பாடல் எழுதினார்.அதன் வரவேற்பால் கிட்டங்கிப் பிள்ளையார், நற்பிட்டிமுனை விஷ்ணு கோவில், 4ஆம் கிராமம் பிள்ளையார் கோவில் போன்ற பல கோவில்களுக்கும் எழுதியுள்ளார். அத்தோடு லண்டனில் உள்ள ஆஞ்சிநேயர் கோவிலுக்கும் எழுதிக் கொடுத்துள்ளார். கோவில் வரலாறு, வரலாற்றுக் கும்மி போன்றவையும் எழுதியுள்ளார். 2005ஆம் ஆண்டு கதிர்காம பாதயாத்திரை பற்றிய கும்மி பாடல்கள் எழுதி 2 பாகங்களாக வெளியிட்டார்.

பின் அதனை இசை வடிவாகவும் மாற்றியுள்ளார். தசாவதாரம் கும்மி பாடல்கள், கதிர்காம கந்தன் பெயரில் வள்ளிநடைக் கும்மி, கண்ணப்பநாயனார் கும்மிப்பாடல்கள், துறைநீலாவணை கண்ணகை அம்மன் ஊர்வலக் கும்மி, காளியம்மன் கும்மிப்பாடல்கள், சேனைக்குடியிருப்பு முத்துமாரியம்மன் பெயரில் ஊர்வலக் கும்மி போன்ற பாடல்கள் எழுதியுள்ளார். இவரது ஆக்கத்திற்காக பேராசிரியர் மெளனகுரு அவர்கள் வாழ்த்துக் கடிதமும் கொடுத்துள்ளார். கோவில்களிலும் நிகழ்ச்சிகளிலும் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டுள்ளார். கல்முனை பிரதேச கலை கலாச்சார விருதும் வாங்கியுள்ளார்.