ஆளுமை:உமாதேவி, ரதீஸ்பரன்

From நூலகம்
Name உமாதேவி ரதீஸ்பரன்
Pages உடையார் நடராஜபிள்ளை
Pages இலெட்சுமிப்பிள்ளை
Birth 1958.07.01
Pages -
Place சேனையூர், திருகோணமலை
Category ஆன்மீகச் செயற்பாட்டாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


உமாதேவி ரதீஸ்பரன் அவர்கள் திருகோணமலை புண்ணிய பூமியிலே, சேனையூர் கிராமத்தில் 1958.07.01 ஆம் திகதி உடையார் நடராஜபிள்ளை மற்றும் இலெட்சுமிப்பிள்ளை தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார்.

தனது கல்வியை சேனையூர் மத்திய கல்லூரியிலும் அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் பெற்றுக் கொண்டார். இவர் 1984ஆம் ஆண்டு ஆசிரியராகப் பணியில் சேர்ந்து பின்னர் தமிழ்ப்பாட ஆசிரிய ஆலோசகராகவும், தொலைக்கல்வி போதனாசிரியராகவும், பாடசாலை அதிபராகவும் தனது சேவையைத் தொடர்ந்தார்.

அத்தோடு தான் கொண்டிருந்த ஆன்மீக நாட்டம் காரணமாக ஆலயங்களில் திருவாசக முற்றோதல், பஜனைகள் செய்தல், சமயச் சொற்பொழிவுகளை மேற்கொள்ளல், அறநெறிப் பாடசாலைகளை வலுவூட்டும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருதல் போன்ற செயற்பாடுகளில் அடியார்கள் பலரையும் இணைத்துக் கொண்டு ஈடுபட்டு வருவதைக் காணலாம்.

உமாதேவி அவர்களைப் போலவே அவரது கணவர் இராசரெத்தினம் ரதீஸ்பரன் அவர்களும் ஆன்மீகச் செயற்பாடுகள் பலவற்றில் ஈடுபட்டு வருவதோடு, திருவாசக முற்றோதல், சைவசமய அறநெறிச் செயற்பாடுகள் போன்ற பலவற்றுக்கு தன்னாலான பங்களிப்புகளை வழங்கி வருகின்றார்.

அறநெறிக் கல்வியின் மூலமே எமது சமுதாயக் குழந்தைகளை நல்வழிப்படுத்தி ஒழுக்கமானவர்களாக வாழ வழியேற்படுத்த முடியும் என்பதற்கிணங்க பல அறநெறிப் பாடசாலைகளை ஒருங்கிணைத்து சைவசமய நிகழ்வுகளை நடாத்துதல், வகுப்புகளை எடுத்தல். மாணவர்களின் வருகையை ஊக்குவிக்கும் செயற்பாடுகளை மேற்கொள்ளல் போன்றவைகளில் ஈடுபட்டும் வருகின்றார். மேலும் சேனையூர் புவனகணபதி அறநெறிப் பாடசாலை ஆரம்பித்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. இந்து சுயம்சேவா சங்கத்தின் திருகோணமலை மாவட்ட இணைப்பாளராக இருந்து கடந்த காலங்களில் 6 மாணவர்களை இந்திய பல்கலைக்கழகம் சென்று கல்வி கற்க வழியேற்படுத்தினார்.

விஷ்வ இந்து பரிசத் சங்கத்தின் மூதூர் கிளைத் தலைவராகவும், தென் கயிலை ஆதீன உறுப்பினராகவும், சிவனருள் பவுண்டேசன் அமைப்பின் நீனாக்கேணி இளந்தளிர் கல்வி நிலையத்தின் ஆலோசகராகவும் இருந்து சமய செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்ற இவரது சேவைத் தொண்டை பாராட்டி திருகோணமலை இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் பாட்டாளிபுரம் இளைஞர் வள நிலையத்தினால் 2022 ஆம் ஆண்டு 'சிவப்பணி தேவி' என்னும் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.