ஆளுமை:இராமநாதன், சின்னத்தம்பி

From நூலகம்
Name சின்னத்தம்பி இராமநாதன்
Pages முத்துப்பிள்ளை சின்னத்தம்பி
Pages கந்தவனம் தெய்வானைப்பிள்ளை
Birth 1949.08.20
Place காரைதீவு, அம்பாறை
Category நாட்டுப்புறக் கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


சின்னத்தம்பி இராமநாதன் அவர்கள் (பி.1949.08.20) அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேசத்தைச் சேர்ந்த முத்துப்பிள்ளை சின்னத்தம்பி மற்றும் கந்தவனம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளுக்கு 1949ம் ஆண்டு ஆவணி மாதம் 20ம் திகதி மகனாகப் பிறந்தார். இவருக்கு 3 பெண் சகோதரிகள் உண்டு.

இவர் தனது ஆரம்பக்கல்வியை காரைதீவு இராமகிருஷ்ணன் ஆண்கள் பாடசாலையிலும் உயர்கல்வியை காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியிலும் பயின்றார். இவருக்கு க.பொ.த சாதாரண தரத்திற்கு மேல் கல்வி கற்க முடியாமல் போனது.

அதன் பின்பு இவருக்கு இலக்கிய கலைகளில் அதிக ஆர்வம் ஏற்பட்டது. கவிதைகள் பலவற்றை அந்நேரங்களில் வீரகேசரி, சிந்தாமணி, நவமணி போன்ற பத்திரிகைகளில் எழுதியுள்ளார். இவரது முதல் கவிதை பெண்கள் தங்கமல்ல பொன் முலாம் என்ற கவிதை தினபதியில் வெளிவந்தது. அதன் பிறகு இவர் எழுதிய அம்பிகாபதி நாடகம் மிகுந்த வரவேற்புக்களை பெற்றதனால் தொடர்ந்து பொற்கிழி, கூலிக்கு கட்டிய தாலி, யார் மனிதன், எவன் பிச்சைக்காரன், திருமாவளவன் போன்ற நாடகங்கள் எழுதி மேடையேற்றியுள்ளார்.

அத்தோடு நாட்டுக் கூத்து இலக்கியத்திலும் இவருக்கு ஆர்வம் அதிகம் உண்டு. முதலாவது படைப்பாக 1979ம் ஆண்டு இலட்சுமி கல்யாணம் எனும் சமூக கதையை மையமாக வைத்து உருவாக்கி மேடையேற்றினார். இந்த நாட்டுக் கூத்து இவருக்கு பெரிய பல பாராட்டுக்களை பெற்று கொடுத்தது. இவரது இந்த நாட்டுக் கூத்தை அப்போது இருந்த மாவட்ட அமைச்சர் எம். சி. கனகரெத்தினம் அவர்கள் பார்த்து பாராட்டி இவரது தகைமைக்கு ஏற்றாற் போல் காரைதீவு வீடமைப்பு அதிகாரசபையில் வேலை பெற்று கொடுத்தார். அங்கு மூன்று வருடம் பணியாற்றிய பின் 1983ம் ஆண்டு பொத்துவில் ஊறணியில் மாற்றம் கிடைத்தது. 1983ம் ஆண்டு கலவரத்தினால் தொழில் தொடர முடியாமல் போனதால் தன் ஊரிலேயே மீன்பிடித் தொழிலை செய்து வந்தார்.

இவரது 2வது நாட்டுக்கூத்தாக அரிச்சந்திரன் நாடகம் எனும் கூத்து காரைதீவு பாலையூற்று பிள்ளையார் கோவிலில் மேடையேற்றப்பட்டது. அதன் பின் ஏழு பிள்ளைகள், வள்ளி திருமணம் போன்ற ஏழு நாட்டுக்கூத்துக்களை படைத்துள்ளார். அது மட்டுமல்லாது 6 வில்லுப்பாட்டுக்களையும் எழுதியுள்ளார். அவை ஶ்ரீ பத்திரகாளி, ஶ்ரீ முருகன், ஶ்ரீ சித்தானைக்குட்டி, தெய்வீகக்காதல் போன்றனவாகும்.

இவருக்கு பிரதேச மட்டத்தில் 2009ம் ஆண்டு விபுலமணி பட்டமும், பல பாராட்டுக்களும் கெளரவிப்புகளும் கிடைத்தது. 2011ம் ஆண்டு கலாபூசணம் விருதும், 2015ம் ஆண்டு வித்தகர் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.