ஆளுமை:அரசரெத்தினம், அருணாசலம்

From நூலகம்
Name அருணாசலம் அரசரெத்தினம்
Pages அருணாசலம்
Pages வள்ளிப்பிள்ளை
Birth 1944.04.16
Pages -
Place சேனையூர், திருகோணமலை
Category கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


திருகோணமலை மாவட்டம், மூதூர் கிழக்கு சேனையூரைப் பிறப்பிடமாக் கொண்ட நாடறிந்த புரட்சிக்கவி கவிக்குயிலன், உண்மை விளம்பி, சேனையூரான் கலாபூஷணம் சிவஸ்ரீ அருணாசலம் அரசரெத்தினம் அவர்கள் இற்றைக்கு சுமார் ஐந்து தசாப்த காலமாக "கலை இலக்கிய சமயாசாரத் துறையில்" கால்பதித்து ஆற்றிவரும் கலைத் தொண்டர்.

1944.04.16 சேனையூரில் அருணாசலம், வள்ளிப்பிள்ளை ஆகியோருக்கு மூன்றாவது பிள்ளையாக பிறந்த இவர் இலங்கை போக்குவரத்து சபையில் நடத்துனர் மற்றும் சாலைபரிசோதகராகப் பணிபுரிந்துள்ளார். இவரது அக்கா காளியாச்சி, அண்ணன் இராசரத்தினம் ஆவார்கள். ஆரம்பக் கல்வியை மருதடிச்சேனை மெதடிஸ்த மிஷன் பாடசாலையிலும், சேனையூர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் சாதாரண தரத்தையும் கற்று பின்னர், 1967 காலப்பகுதியில் கிளிநொச்சியில் விவசாய பயிற்சி நெறியினை பூர்த்தி செய்தார். 1969இல் அன்னலெட்சுமி என்பவரை திருமணம் செய்தார்.

கவிக்குயிலன், சேனையூரான், உண்மை விளம்பி என்னும் புனைப் பெயர்களில் ஆக்கங்கள் பலவற்றை 1963 முதல் தினபதி, சிந்தாமணி, சுடரொளி, வீரகேசரி, மலைமுரசு போன்ற பத்திரிகைகளுக்கு எழுதி வருகின்றார். ஆன்மீகம், சோதிடம், வைத்தியம், அழகியல், வில்லுப்பாட்டு, விமர்சனம், கவிதைகள், காவியங்கள், கட்டுரைகள், சந்தம்மிக்க பாடலாக்கம் போன்றவற்றில் புலமையுள்ள இவர் ஒரு பூசகராவார். இவரின் "எதிர் நீச்சலடிப்போம் ஏமாறாதிருப்போம்" (2011), "ஏக்கம்" (2015) போன்ற நூல்கள் வெளிவந்துள்ளன.

1967 காலப்பகுதியில் "உழைப்பாலுயர்ந்தோன் கந்தசாமி" என்ற தலைப்பில் வில்லுப்பாட்டை தயாரித்து அரங்கேற்றி இலங்கை வானொலியிலும் ஒளிபரப்பு செய்து சாதனை படைத்தார்.

பல்துறைக் கலைஞரான படைப்பாளி சிவஸ்ரீ அ. அரசரெத்தினம் அவர்கள் தான் கொண்ட எழுத்துப்பணியில் கவிதைகள் மட்டுமல்ல பல்துறை அம்சங்கள் அடங்கிய சிறுகதை, சமய, சமூகம் சார்ந்த கட்டுரைகள், சோதிடம் சம்பந்தமான ஆக்கங்களையும் அவ்வப்போது மக்களறியச் செய்து இம்மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளார். அந்த வகையில் எம்போன்ற நெஞ்சங்கள் அவரை என்றும் நினைவில் கொள்ளும்.