நிறுவனம்: யாழ். இந்து மகளிர் கல்லூரி பழைய மாணவிகள் சங்கம் அவுஸ்ரேலியா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ். இந்து மகளிர் கல்லூரி பழைய மாணவிகள் சங்கம் அவுஸ்ரேலியா
வகை பழைய மாணவிகள் சங்கம்
நாடு அவுஸ்ரேலியா
மாவட்டம்
ஊர் -
முகவரி -
தொலைபேசி -
மின்னஞ்சல் -
வலைத்தளம் -



பழைய மாணவிகள் சங்கம் தனது 25 வருடங்களை நிறைவேற்றிய பெருமையில் வெள்ளிவிழா கொண்டாடி நிற்கின்றது. 1993 ஆம் ஆண்டு எமது தாயகத்தில் யாழ் நகரில் எமது பாடசாலை பொன்விழா கொண்டாடிய வேளையில் எம்மிடமும் அன்புக் கரம் நீட்டியது. இதன் பயனாக 29/08/1993 இல் திருமதி சேதா சண்முகஜோதி அவர்களால் சிட்னி வாழ் யாழ் இந்து மகளிர் கல்லூரி பழைய மாணவிகள் சிலருடன் கலந்தாலோசிக்கப்பட்டு எட்டுப் பேர் கொண்ட தற்காலிக குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக் குழுவினர் பொன் விழாவையொட்டி இலங்கை வீரகேசரிப் பத்திரிகையில் வாழ்த்துச் செய்தி அனுப்பியதுடன் சிட்னி முத்தமிழ் மாலை வானொலியிலும் தமிழ் முழக்கத்திலும் கல்லூரியின் வரலாறு, வளர்ச்சி பற்றிய சிறு நிகழ்ச்சியை ஒலிபரப்பி எம் மாணவரிடையே எமது பாடசாலை பற்றியும் எமது சங்கத்தைப் பற்றியும் ஒரு பரப்புரையை நிகழ்த்தினர். இதன் பயனாக 10/10/1993 இல் 28 அங்கத்தவர்களுடன் யாழ் இந்து மகளிர் கல்லூரி பழைய மாணவிகளின் சிட்னிக் கிளை உருவாகியது. திருமதி சேதா சண்முகஜோதி அவர்கள் இதன் முதல் தலைவியாகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இதன் போது வந்த எமது கல்லூரி பழைய மாணவிகள் தம்மை அங்கத்தவர்களாகப் பதிவு செய்ததுடன் மேலதிக மாணவர்களைத் திரட்டும் முயற்சியிலும் ஈடுபட்டனர். இன்று இக்கிளை நூற்றிற்கும் மேற்ப்பட்ட அங்கத்தவர்களுடன் கை கோர்த்து நிற்கின்றது. ஆரம்ப காலங்களில் எமது கல்லூரிக்கு நிதி திரட்டும் பொருட்டு நிர்வாகக் குழுவினர் இராப்போசன விருந்துகளை ஒழுங்கு செய்ததோடு, அங்கத்தவர்களே உணவுகளைத் தயார் செய்து குடும்பமாக கலந்து தம்மாலான நிதி உதவியினையும் வழங்கினர். இதன் பிரதிபலிப்பாக 1994ம் ஆண்டு யாழ் இந்து மகளிர் கல்லூரி பழைய மாணவிகள் சங்கக் கிளையின் பெயரில் அவுஸ்திரேலிய வங்கியில் சேமிப்புக் கணக்கொன்று ஆரம்பிக்கப்ட்டது. விருந்துகள், ஒன்று கூடல்கள் தொடர்ந்தும் பழைய மாணவிகள் சங்கம் இராப்போசன விருந்துகள், ஒன்று நிகழ்த்தியும், தழிழ்ப் திரைப்படங்கள் காண்பித்தும் நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டது. 1995ம் ஆண்டு முதன் முறையாக கல்லூரி மாணவர்களுக்குத் தேவையான கற்றல் உபகரணங்கள் மற்றும் விஞ்ஞான உபகரணங்கள் வாங்குவதற்காக பணம் அனுப்பி வைக்கப்பட்டது. 1998ம் ஆண்டு எமது கல்லூரி வளாகத்தில் அமைந்திருக்கும் நடுத்தோட்ட வரதராஜப் பிள்ளையார் ஆலய கும்பாபிஷேகத்தினை நடாத்த எமது சங்கம் உதவியது. மேலும் 2001 ஆம் ஆண்டு மாணவர்களின் கல்வி செயற்பாட்டிற்காக கணனிகள் வாங்குவதற்காக பணம் அனுப்பி வைக்கப்பட்டது. 2002ம் ஆண்டு யாழ் இந்து மகளிர் கல்லூரி பழைய மாணவிகள் சங்க சிட்னி கிளையினரின் அடுத்த முக்கிய படிக்கட்டாக, முதன்முறையாக "மலரும் மாலை" என்ற பெயரில் இயல் இசை நாடகம் என்ற முத்தமிழும் இணைந்த கலை நிகழ்ச்சி மேடையேறியது. இந் நிகழ்ச்சியை முற்று முழுதாக மகளிர் மாத்திரமே தயாரித்து வழங்கியமை பேராதரவைப் பெற்றது. இரண்டு வருடங்களிற்கு ஒருமுறை மலரும் இம்மாலை இன்று எமது சங்கத்தின் வெள்ளிவிழாவைக் கொண்டாடி நிற்கின்றது. கலை நிகழ்ச்சியாலும் பழைய மாணவிகளின் உதவியினாலும், நன்கொடைகளாலும் கிடைத்த பணத்தினால் கல்லூரிக்கு நிரந்தர புலமைப் பரிசில் திட்டத்தினை 2003ம் ஆண்டு உருவாக்க முடிந்தது. இந் நிலையான வைப்புக்கான உறுதியை (Trust Deed) உருவாக்குவதில் வழக்கறிஞர் திரு சதாசிவம்பிள்ளை ஜெயானந்தராஜா (Jeya Solicitors) அவர்கள் பேருதவி புரிந்தார். இத்திட்டத்தின் மூலம் எமது பாடசாலையின் மறைந்த அதிபர் செல்வி பத்மாவதி இராமநாதன் அவர்களின் நினைவாக நான்கு பாடப் பிரிவுகளிலும் (கணிதப்பிரிவு, வர்த்தகப்பிரிவு, கலைப்பிரிவு) மிகச் முதலாவது பரிசும் 2ம் தரத்தில் வரும் மாணவிகளுக்கு எமது அவுஸ்திரேலிய சங்கத்தின் பெயரில் இரண்டாம் பரிசும் வழங்க ஆரம்பித்து, எமது கல்லூரிக்கு ஒரு நிரந்தர சொத்தாக்கிய மாணவிகள் சங்கத்தையே சாரும். இப் பரிசுத் திட்டத்தினால் 60க்கும் மேற்பட்ட மாணவிகள் இதுவரை பயனடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து 2003 ல் கல்லூரி ஆலய குருக்களிற்கு அவருக்குரிய ஊதியத்தை அதிகரிக்கரிப்பதற்கும் எமது சங்கம் பணம் அனுப்பி வைத்தது. 2006ம் ஆண்டு எமது பாடசாலை மாணவர்கள் போஷாக்கின்மை கற்றல் செயற்பாடுகளில் முழுமையாக ஈடுபட முடியாத நிலையில் இருப்பதாக எமது பாடசாலையின் அதிபரிடமிருந்து தகவல் கிடைக்கப் பெற்றது. ஒரு தரமான சிற்றுண்டிச் சாலை இல்லாததால் மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை அறிந்த எமது சங்கம் 2007ல் சின்னஞ் சிறுவர்களின் கலை நிகழ்வாக மலர்ந்த ‘மலரும் மாலை'யினால் பெற்ற பணத்தின் மூலம் சிற்றுண்டிச்சாலை ஒன்றினை அமைப்பதற்கான முதற் கட்டப் பணியை ஆரம்பித்து வைத்தது.

2011ல் முதன் முதலில் எமது சங்கம் அரங்கேற்றிய Karaoke இசைப் போட்டியானது சிட்னியிலுள்ள 12 வயதிற்குட்பட்ட பாடகர்களிற்கு இடமளித்து அவர்களது கலையார்வத்தை வளர்ப்பதிலும் முன்னின்றது. இதன் மூலம் பெற்ற பணத்திலிருந்து கணனி அறையின் திருத்தப் பணிகளை மேற்கொண்டதோடு ஆரம்பிக்கப்பட்டிருந்த சிற்றுண்டிச் சாலையின் கட்டிடப் பணியும் முடித்து வைக்கப்பட்டு மாணவிகளுக்கு ஆரோக்கியமான உணவுக்கான வழி செய்யப்பட்டது. இதே ஆண்டு எமது சங்கத்தின் தரத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தினோம். இவ்வாண்டில் எமது சங்கத்திற்கென ஒரு யாப்பு எழுதப்பட்டது. இது வழக்கறிஞர் திரு சதாசிவம்பிள்ளை ஜெயானந்தராஜா அவர்களால் மீளாய்வு செய்யப்பட்டு எமது வருடாந்த பொது கூட்டத்தில் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது. அது மட்டுமன்றி இலாப நோக்கமற்ற சங்கமாக முறைப்படி பதிவு செய்யப்பட்டு ABN இலக்கமும் Tax file number உம் எடுக்கப்பட்டது. அன்றிலிருந்து எமது சங்கக் கணக்குகள் கணக்காளர் திரு வைத்திலிங்கம் ஈழலிங்கம் அவர்களால் கணக்காய்விற்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. 2012 ல் இரண்டாவது முறையாக நடைபெற்ற பாடல் போட்டியான மலரும் மாலையின் மூலம் சேகரிக்கப்பட்ட பணம் எமது நாட்டின் சூழ்நிலை காரணமாக எமது பாடசாலையின் தேவைகளுக்கு அனுப்ப முடியாத ஒரு நிலை ஏற்பட்டதால் அதனை அவுஸ்திலிேய வங்கி சேமிப்பில் சேர்த்துக் கொண்டோம். 2013ஆம் ஆண்டு நடைபெற்ற எமது வருடாந்த பொதுக் கூட்டத்தில் தாய் நாட்டில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வாழும் பெண்கள் சிறுவர்களின் அடிப்படைத் தேவைகளிற்கு எமது லாபத்தின் ஒருபகுதியை அனுப்ப வேண்டும் என்ற தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதன் பயனாக இக்கால கட்டத்தில் எமது தாயகத்தில் பல சமூகப் பணிகளை யாழ் இந்து மகளிர் கல்லூரி பழைய மாணவிகள் சங்க சிட்னிக் கிளையினர் முன்னெடுத்தனர். 2012 ம் ஆண்டு இரண்டாவது தடவையாக பாடல் போட்டி நிகழ்வாக நடைபெற்ற மலரும் மாலை நிகழ்விலிருந்து பெறப்பட்ட லாபத்திலிருந்து ஒரு பகுதி கிளிநொச்சி திருநகர் தெற்கு மாதர் அபிவிருத்தி சங்க பெண்களுக்கு வழங்கப்பட்டது. ஊனமுற்றவர்களுக்கும், தாய் தந்தையை இழந்தவர்களுக்கும் பெண்களுக்குமாக கணவனை இழந்த இந்நிதி பகிர்ந்தளிக்கப்பட்டதோடு அவர்களுக்கு சுழற்சி முறையிலும் கடன் பெறுவதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது. 2015 ல் உள்ளுர் வாத்திய கலைஞர்களும் பாடகர்களும் இணைந்து சிறப்பித்த மலரும் மாலை மூலம் சிறுவர் அபிவிருத்தி முன்னெடுப்பு அமைப்பிற்கு குழாய் கிணறு வெட்டுவதற்கு உதவியதோடு, நீர் இயந்திரம் வாங்கிக் கொடுத்தமை, வெற்றிலைக்கேணி அலையோசை மாலை நேர கல்வி நிலைய சிறுவர் கழகத்திற்கு மதிய நேர உணவு வழங்கியமை. மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்திற்கான அன்பளிப்பு என சமூகநலத் திட்டங்கள் பல எமது சங்கத்தால் தொடர்ந்து செய்யப்பட்டு வருகின்றது. 2016ல் யாழ் இந்து மகளிர் கல்லூரியின் ஆண்டு 6 முதல் ஆண்டு 9 வரையான மாணவர்களுக்கு கணிதம், ஆங்கிலம், விஞ்ஞானம் பாடங்களின் ஆகிய நிலைமாணவர்களுக்கான புலமைப் பரிசில் முதல் வழங்க ஆரம்பித்தோம். 2016ம் ஆண்டு எமது மலரும் மாலை உள்ளுர் கலைஞர்களுடன் இந்திய பாடகர்களும் இணைந்த நிகழ்வாக அரங்கேறியது. இதன் மூலம் பெற்ற பணத்திலிருந்து 2017ம் ஆண்டு சிவபூமி அறக்கட்டளை சிறுவர்களுக்கு ஒரு வருட காலை உணவுக்கான பணம் அனுப்பப்பட்டது. கடந்தகாலங்களில் நடைபெற்ற போர் அனர்த்தங்களால் எமது பாடசாலையின் கட்டிடங்கள் பல பாதிப்படைந்திருந்தன. இதனால் எமது மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளிலும் குறிப்பிடத்தக்க யாழ் இந்து மகளிர் கல்லூரியின் பவளவிழா (1943 - 2018) ஞாபகார்த்தமாக யாழ்ப்பாண பழைய மாணவ சங்கத்தினதும் கொழும்பு, கனடா, அவுஸ்ரேலியா, இலண்டன் கிளைச் சங்கங்களினதும் பின்னடைவைக் காணக்கூடியதாக இருந்தது. எனவே யாழ் இந்து மகளிர் கல்லூரியின் ஐந்து பழைய மாணவிகள் சங்கங்கள் அதாவது யாழ்ப்பாணம், கொழும்பு, கனடா, லண்டனுடன் இணைந்து நாமும் மூன்று மாடிக் கட்டிடம் ஒன்றை கட்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்டோம். அதன் விளைவாக 2015ஆம் ஆண்டு எமது கல்லூரிக்கு மூன்று மாடிக் கட்டடம் அமைக்கும் திட்டத்திற்கு மற்றைய நாட்டு சங்கங்களுடன் இணைந்து நிதி அனுப்பும் முயற்சியில் சங்கம் ஈடுபட்டது. வங்கியிலிடப்பட்டிருந்த 2012 ம் ஆண்டு மலரும் மாலை நிகழ்வின் மூலம் கிடைத்த பணத்தையும் 2015ம் ஆண்டு மலரும் மாலை மூலம் பெற்ற பணத்தையும் சேர்த்து மூன்று மாடிக் கட்டிடத்தின் ஆரம்ப கட்ட பணிக்காக எம்மால் அனுப்ப முடிந்தது. அதனைத் தொடர்ந்து இடம் பெற்ற 2016ம் ஆண்டு மலரும் மாலை நிகழ்வின் மூலம் பெற்ற பணமும் அனுப்பி வைக்கப்பட்டு கட்டிடம் பூர்த்தி செய்யப்பட்டு எமது கல்லூரியின் பவளவிழா ஆண்டில் 'பவளவிழா மண்டபம்' என்ற பெயரில் திறந்து வைக்கப்பட்டது. பவளவிழா மண்டபத்திற்கு நாம் வழங்க வேண்டிய மேலதிக சிறு தொகைப் பணத்தை 2018ம் ஆண்டு 'மலரும் மாலை' நிகழ்விலிருந்து அனுப்பி வைக்கப்பட இருக்கின்றது. அத்துடன் இவ்வருடம் எமது வெள்ளிவிழா ஆண்டில் எமது எமது தாயகக் கலைஞர்களுடன் இணைந்து மலர இருக்கும் மலரும் மாலையின் மூலம் பெறப்படும் மிகுதிப் பணத்திலிருந்து பாடசாலை மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் எமது தாயக மக்களின் சமூக நலத்திட்டத்திற்காகவும் பயன்படுத்தப்பட இருக்கின்றது. இவ்வாறாக நாம் கற்ற கல்லூரிக்கும் நாம் பிறந்த நாட்டிற்கும் எம்மாலான உதவிகளைச் செய்வதற்கு எமக்கு அனுசரணையாக இருக்கின்ற சிட்னி வாழ் மக்களுக்கு எமது சங்கத்தின் சார்பில் எமது மனமார்ந்த நன்றிகள். இதே போல தொடர்ந்தும் நமது தாய் நாட்டிற்கு உதவ உங்கள் அனைவரதும் ஆதரவை வேண்டி நிற்கின்றோம்.