நிறுவனம்: தி/ திரியாய் தமிழ் மகாவித்தியாலயம்
Name | தி/ திரியாய் தமிழ் மகாவித்தியாலயம் |
Category | பாடசாலை |
Country | இலங்கை |
District | திருகோணமலை |
Place | திரியாய் |
Address | திரியாய், திருகோணமலை |
Telephone | |
Website |
திருகோணமலை மாவட்டத்தின் வடக்குப் பகுதியிலமைந்துள்ள தமிழ் கிராமமே திரியாய் ஆகும். இக்கிராமம் நெற் செய்கைக்கும், கால்நடை வளர்ப்பிற்கும் பேர் பெற்றது. பாலும் தேனும் குறைவுபடாத, செழிப்புமிக்க இக்கிராமம் நீண்ட கல்வி வரலாற்றையும் கொண்டுள்ளது. திருக்கோணமலை நகருக்கு வெளியே மெதடிஸ்த மிஷனால் பாடசாலையொன்று நிறுவப்பட்ட மிகத் தொலைவிலுள்ள கிராமமாக இதைக் கருதலாம். மெதடிஸ்த திருச்சபையின் வரலாற்றுப் பதிவுகளில் 1884 இல் திரியாய் பாடசாலைக்கு ரூபா 170/- செலவில் கட்டிடம் அமைக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே பாடசாலை அதற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டிருக்கக் கூடும் எனக் கருதவும் இடமுண்டு.
ஆரம்பத்தில் மெதடிஸ்த மிஷன் பாடசாலை அமைந்திருந்த இடம் தற்போதுள்ள பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னாலுள்ள பகுதியாகும். பின்னர் அரசாங்கம் பொறுப்பேற்ற பின் "தி/திரியாய் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை" என்ற பெயருடன் தற்போதுள்ள இடத்தில் நிரந்தரமாக இயங்கத் தொடங்கியது. மகாவித்தியாலயமாகத் தரமுயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து "தி /திரியாய் தமிழ் மகாவித்தியாலயம்" எனப் பெயர் பெற்றது. 01.03.1977 இலிருந்து 1 C தரப் பாடசாலையாகத் தரமுயர்த்தப்பட்டது.
கடந்த மூன்று தசாப்த யுத்த காலத்தில் திரியாய் கிராமம் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டது. பாடசாலையும் இடப்பெயர்வுகளையும் மூடப்பட வேண்டிய சந்தர்ப்பங்களையும் சந்தித்து வந்துள்ளது. 1985இல் ஒரு தடவை மூடப்பட்டு, 1987இல் மீளத் திறக்கப்பட்டது. மீண்டும் 1990இல் மூடப்பட்டு 31.04.2003இல் மீள ஆரம்பிக்கப்பட்டது.
இன்றைய சூழலில் குறைவான வளங்களுடன் சிறப்பான சேவையை வழங்கி வருகின்றது. இப் பாடசாலையில் சமீபகால மீள் குடியேற்றத்தின் பின் கட்டிடங்கள் புதிதாக நிர்மாணிக்கப்பட்டன. புதிய தோற்றத்துடனும், புதிய பொலிவுடனும் மீண்டும் புதிய கல்வி வரலாறு படைக்கத் தொடங்கியிருக்கும் இப்பாடசாலையின் வரலாறு தெரிந்த இக்கிராமத்தின் மூத்ததலை முறையினர் மெதடிஸ்த மிஷனின் பங்களிப்பை என்றென்றும் நன்றியுடன் நினைவு கூறுகின்றனர்.