நிறுவனம்:யாழ்/ வேலணை பெருங்குளம் முத்துமாரியம்மன் கோயில்

From நூலகம்
Name யாழ்/ வேலணை பெருங்குளம் முத்துமாரியம்மன் கோயில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District யாழ்ப்பாணம்
Place வேலணை
Address பெருங்குளம், வேலணை, யாழ்ப்பாணம்
Telephone
Email
Website

வேலணை பெருங்குளம் முத்துமாரியம்மன் கோயில் இலங்கையின் வடக்கே, யாழ்ப்பாண மாவட்டத்தில் வேலணை எனும் இடத்தில் அமைந்துள்ளது.ஈழவள நாட்டிலே அமைந்திருக்கின்ற ஆலையங்களில் மிகவும் பழமை வாய்ந்தனவும் புராதனமானமானவையுமான ஆலயமாக பெருங்குளம் முத்துமாரி அம்மன் ஆலயம் விளங்குகிறது.

அன்னை பராசக்தியை பற்பல திருக்கோலங்களிலும், காளி, துர்க்கை, ஈஸ்வரி எனப் பற்பல நாம கரணங்களிலும் பக்தர்கள் வழிபடுவது வழக்கம். அவற்றுள் முத்துமாரி என்ற மூர்த்தமும் ஒன்று. மக்கள் மிகப் புராதன காலம்தொட்டு தொற்றுநோய், பஞ்சம், வரட்சி போன்ற துன்ப நிகழ்வுகள் தம்மை அடையாது பாதுகாக்க முத்துமாரி அம்மனை வழிபட்டு வருகின்றார்கள்.

தமிழரசர் காலத்து இவ்வாலயம் போர்த்துக்கேயர் காலத்தே அழிக்கப்பட்டு அம்மன் சிலை எங்கென்று தெரியாது மறைந்திருந்தது. ஒல்லாந்தர் ஆட்சிகால நடுப்பகுதியளவிலே பெருங்குடிவேளாளன் கட்டமாதன் என்பான் ஒருவன் வேலணை பெருங்குளத்து வடகரையில் உலாவி வரும்நேரம், கற்புலம் என்ற பகுதியில் ஆவரசம், நொச்சி பற்றை ஒன்றினுள் முத்துமாரி அம்மன் கற்சிலை ஒன்றை கண்டெடுத்தார் என்றும், அந்த கட்டமாதனும் ஊர் மக்கள் சிலரும் சேர்ந்து அந்த கற்சிலையை அவ்விடத்தில் இருந்து தூக்கி சென்று தற்போது ஆலயம் உள்ள பகுதிக்கு தெற்கே. நெடுங்கேணி என்று பெயருடைய காணித் துண்டில் குடிசை அமைத்து அதனுள் அம்மன் சிலையை பிரதிட்டை செய்து வழிபட்டு வந்ததாகவும் அதன் பின் பெரிய ஆலயம் அமைக்கும் கருத்துக்கொண்டு தற்போது உள்ள இடத்துக்கு கொண்டு வந்ததாகவும் ஒரு கர்ண பரம்பரைக் கதை சொல்கின்றது. அக்கண்டெடுக்கப்பட்ட அம்மன் சிலை பழைய ஆலய சிலையாய் இருக்கலாம்.

1885-1890 காலத்தே, காசித்தம்பி ஆலயம் அமைத்து ஏறத்தாள எண்பது ஆண்டுகளின் பின்னர் யாதவராயர் இராமநாதன் என்பார் பழைய கோயிலை இடித்துவிட்டு, அவ்விடத்தே ஆகம விதிப்படி தூபி அர்த்த மண்டபம், சபா மண்டபம், மகா மண்டபத்தோடு கூடிய கோயிலை எழுப்பினார். கல்லால் கட்டப்பட்டு ஒலையால் வேயப்பட்டிருந்த இவ்வாலயத்திற்கு அதே காலத்தே கதிர்காமம் ஆறுமுகம் என்பார் ஒடு வேய்ந்ததோடு கொடித்தம்பம் ஒன்றையும் அமைத்தார். வயிரமுத்தர் என்பார் யாக மண்டபம் ஒன்றும் கட்டினார். அதேகாலப்பகுதியில் வேலணையூர் விஸ்வகரும குலத்தார் முன்வந்து அம்பாளுக்கு வசந்த மண்டபம் ஓன்றை அமைத்து கணிக்கை ஆக்கினார்கள்.

1930ம் ஆண்டளவில் கோயிலை புனருத்தாரணம் செய்ய தீர்மானித்து ஊர்ப் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து பணம் திரட்டி இராமலிங்க உடையார் தலைமையில் பழைய கோயினை இடித்துவிட்டு புதிய கோயில் ஒன்றைக் கட்டினார்கள். கர்ப்பக்கிரகம், அர்த்தமண்டபம், சபாமண்டபம், மாமண்டபம், பலிபீடம், ஆகிய சகலதும் வெள்ளைக்கல் திருப்பணியாகச் அமைக்கப்பட்டன. திருப்பணி யாவும் நிறைவேறி 1936ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது.

இவ்லாயத்திற்கு ஏழுதள இராஜ கோபுரம் அமைக்கப்பட்டு 2010ம் ஆண்டு கும்பாபிடேகம் நடைபெற்றுள்ளது.இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலம் வரை இவ்வாலயத்தே மிருகபலி நடைபெற்றதாய் கூறப்படுகின்றது.


வெளி இணைப்பு