நிறுவனம்:யாழ்/ வல்வெட்டித்துறை சிவன் கோவில்

From நூலகம்
Name யாழ்/ வல்வெட்டித்துறை சிவன் கோவில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District யாழ்ப்பாணம்
Place வல்வெட்டித்துறை
Address வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
Telephone
Email
Website

வல்வெட்டித்துறை சிவன் கோவில் (அருள்மிகு வாலாம்பிகை சமேத வைத்தீஸ்வர சுவாமி கோயில்) இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமராட்சி பிரதேசத்திலமைந்த வல்வெட்டித்துறையில் "இராசிந்தான் கலட்டி" எனும் காணியில் அமைந்துள்ளது. யாழ்ப்பாணப் பகுதியில் அக்காலத்தில் வாழ்ந்த முன்னணி பிரமுகர் வரிசையைச் சேர்ந்த வல்வெட்டித்துறை ஐயம்பெருமாள் வேலாயுதத்தின் பேரனான திருமேனியார் வெங்கடாசலம்பிள்ளை என்பவரே இவ் ஆலயத்தின் ஸ்தாபகர்.

இவர் கடலில் மூழ்கியிருந்த 'அத்திலாந்திக் கிங்' என்ற கப்பலை மூழ்கிய நிலையிலேயே விலை கொடுத்து வாங்கி அதனை மீட்டெடுத்து வேண்டிய திருத்தங்களைச் செய்து அதன் மூலம் கடல் வணிகம் செய்து கிடைத்த செல்வத்தில் ஒரு பகுதியைக் கொண்டு 1867 ஆம் ஆண்டு சங்கத்தாபனம் செய்து இக் கோயிலைக் கட்டினார்.

இச்சிவன் கோவிலின் மூலஸ்தானத்தில் பிரதிஸ்டை செய்யப்பட வேண்டிய மூலலிங்கமான பாணலிங்கத்தை காசியில் இருந்து நேரடியாக கடல்வழி மூலம் வல்வெட்டித்துறைக்கு கொண்டுவந்து பிரதிஸ்டை செய்தார். சிதம்பரம் கோயிலினை அடியொற்றியதாக மூன்று வீதிகள் கொண்டதாகவும் பிருதிவிலிங்கம், தேயுலிங்கம், அப்புலிங்கம், வாயுலிங்கம், ஆகாயலிங்கம் என்றும் ஐவகை லிங்கங்களை தனித்தனியாக அமைத்தார்.

மூலஸ்தானத்தில் பாணலிங்கம் உட்பட மற்றும் அண்ணாமலை ஈஸ்வரர் மகாவிஸ்ணு என பல வகைத்தெய்வங்களுடன் நவக்கிரகங்களும் சைவ நாயன்மார்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்திநாயனார் என்பவர்களுடன் மாணிக்கவாசக சுவாமிகள் என்பவர்களுக்கும் தனித்தனியாக விக்கிரகங்களை பிரதிஸ்டை செய்தே இக்கோயிலினை பெரியவர் வெங்கடாசலம்பிள்ளை அவர்கள் அமைத்தார்.

காசியில் இருந்து பாணலிங்கமாக கொண்டுவரப்பட்ட இலிங்கேஸ்வரர் வல்வெட்டித்துறை கோயிலில் பிரதிஸ்டை செய்யப்பட்ட பின் “வைத்தீஸ்வரப்பெருமான்” என்னும் பெயரைப்பெற்றார். இவருடன் எப்பொழுதும் கூடஎழுந்தருளியிருக்கும் அம்பிகையின் பெயர் "வாலாம்பிகை" இதனால் “வாலாம்பிகா சமேத ஸ்ரீவைத்தீஸ்வரபெருமாள்” தேவஸ்தானம் என இக்கோயில் அழைக்கப்படலாயிற்று.

கோயில் கட்டிமுடித்தபின் 08.06.1883 (சுபானுவருடம் வைகாசிமாதம் 27ம் திகதி வெள்ளிக்கிழமை) முதலாவது நூதனபிரதிஸ்டா கும்பாபிஷேகம் நடத்தப்பெற்றது. சைவ ஆகமவிதிப்படி நடைபெறும் இப்பூசைகளை “ஆறுகாலப்பூசைகள்” என்பர். மகோற்சவம் எனப்படும் பிரமோற்சவம் 16 நாட்கள் என கணிக்கப்பட்டதெனினும் மகோற்சவம் எனப்படும் இத்திருவிழாக்காலம் முழுமையாக முடிவுற மூன்று வாரங்களாகும்.

Resources

  • நூலக எண்: 5274 பக்கங்கள் 115