நிறுவனம்:யாழ்/ சீனன்கலட்டி ஞானோதயா வித்தியாலயம்

From நூலகம்
Name யாழ்/ அளவெட்டி சீனன்கலட்டி ஞானோதயா வித்தியாலயம்
Category பாடசாலைகள்
Country இலங்கை
District யாழ்ப்பாணம்
Place அளவெட்டி
Address சீனன்கலட்டி, அளவெட்டி, யாழ்ப்பாணம்
Telephone
Email
Website

சீனன்கலட்டி ஞானோதயா வித்தியாலயமானது யாழ்ப்பாண மாவட்டத்தின் அளவெட்டிப் பிரதேசத்தில் சீனன்கலட்டி எனும் இடத்தில் அமைந்துள்ளது. வைத்தியர் த.தாமோதரம்பிள்ளை அவர்களது காணியில் சமூக சேவையாளர்களான சரணமுத்து செல்லையாவும் அப்பாச்சாமி கணபதிப்பிள்ளையுஞ் சேர்ந்து ஒரு வாசிகசாலையை அமைத்து மக்களின் அறிவுப்பசியைப் போக்கினர். பின்னர் இச் சூழற் சிறார்கள் கல்வியறிவின்றித் தவிர்ப்பதைப் போக்கத் திருவுளங் கொண்ட அவ் ஊர் பெரியார்கள் இதைக் கல்வி நிறுவனமாக மாற்றியமைத்தனர். 1907ஆம் ஆண்டு ஆவணி மாதம் 28ஆம் திகதி இப்புனித கைங்கரியத்தை ஆரம்பித்தனர். திரு.வே.சபாபதிச் சட்டம்பியார் வைத்திலிங்கச் சட்டம்பியார், கணபதிப்பிள்ளைச் சட்டம்பியார் இளையதம்பிச் சட்டம்பியார் ஆகியோர் தொடக்கத்தில் இலவசமாக மாணவர்கட்குக் கல்வியை நல்கினர்.

1912இல் உதவி நன்கொடை பெறும் பாடசாலையாக்கப்பட்டது. 1961 டிசம்பர் 15ஆம் திகதி அரசாங்கம் பாடசாலையைப் பொறுப்பேற்கும் வரை திரு.வை.இராசதுங்கம் இவர்களே முகாமையாளராக இருந்து பாடசாலை வளர்ச்சிக்கு வேண்டியனவற்றைச் செய்தார். 20.08.1992இல் அளவெட்டி வடக்கில் ஏற்பட்ட இராணுவ நடவடிக்கை காரணமாக இடம்பெயர்ந்து யா/உடுவில் மான்ஸ் கல்லூரியிலும் 10.03.93இல் இருந்து உடுவில் அ.மி.பாடசாலையிலும் பின்னர் யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட இராணுவ நடவடிக்கையால் தென்மராட்சிக்கு இடம் பெயர்ந்து 01.02.1996 இலிருந்து யா/விக்னேஸ்வரா வித்தியாலயம் கைதடியிலும் மாலை நேரப் பாடசாலையாக இயங்கியது. 19.05.96 இன் பின் யாழ் வரக்கூடிய சூழ்நிலை உருவானதும் மீண்டும் யாழ் அமெரிக்கன் மிஷன் பாடசாலையிலும் பின்னர் கல்விப் பணிப்பாளரின் பணிப்பின் பேரில் 10.06.96இல் இருந்து யாழ் மகாஜனக் கல்லூரியுடன் கற்றல் கற்பித்தலில் இணைந்தும் செயற்பட்டது. மகாஜனக் கல்லூரியில் இயங்கிய வேளையில் அக்கல்லூரியின் ஆசிரியர் பற்றாக்குறையை எமது பாடசாலை ஆசிரியர்கள் நீக்கியதுடன் எமது மாணவர்கள் பெரும் பயன் அடைந்தனர்.

இராணுவ நடவடிக்கையால் முற்றாக அழிக்கப்பட்ட இப் பாடசாலைக்கு U.N.H.C.R. நுண்கலைத்திட்ட நிதியில் புதிய கட்டடத்திற்கு நிதி ஒதுக்கப்பட்ட பின் 06.09.1999 அன்று பிரதேச செயலர் திருமதி. ப.திலகநாயகம்போல் அவர்களும், செயலக அலுவலர்களும் தெல்லிப்பழை உதவிக்கல்விப் பணிப்பார் திரு.ஆ.வ.கணேசலிங்கம் அவர்களும் கல்வித்திணைக்கள அலுவலர்களும் பாடசாலைச் சமூகமும் அடிக்கல் நாட்டி திரு.க.ஸ்ரீதரன் அவர்களின் கட்டட மேற்பார்வையின் கீழ் சிறப்பாகக் கட்டப்பட்டு 27.01.2000 வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

Resources

  • நூலக எண்: 13940 பக்கங்கள் 84-85

வெளி இணைப்புக்கள்