நிறுவனம்:மகா தேவா ஆச்சிரம சைவச்சிறுவர் இல்லம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மகா தேவா ஆச்சிரம சைவச்சிறுவர் இல்லம்
வகை சைவச்சிறுவர் இல்லம்
நாடு இலங்கை
மாவட்டம் கிளிநொச்சி
ஊர் ஜெயந்திநகர்
முகவரி கிளிநொச்சி
தொலைபேசி
மின்னஞ்சல் -
வலைத்தளம் -


யாழ்ப்பாண ஆன்மீகப் பாரம்பரியம் மிகவும் தொன்மையானது. 18 ஆம் நூற்றாண்டு, 19 ஆம் நூற்றாண்டு முற்பகுதியில் அந்நிய அரசியல் ஆதிக்கத்தின் தாக்கத்தினால் இந்து சமயப் பண்பாட்டு விழுமியங்களைப் பேணிப் பாதுகாப்பதில் பாரிய இடரை எம் மக்கள் சந்தித்தனர். இந்நிலையில் நமது சமய பண்பாட்டு விழுமியங்கள் மீட்சி பெற உழைக்கும் ஆன்மீக ஞானிகளும், பேரறிவாளர்களும் காலத்தில் யாழ்ப்பாணத்தில் தோன்றினார்கள்.

இவர்களது தோற்றமும் வருகையும் ஆன ஆன்மீக நிலைகளைத் தொடர்ந்தும் நிலை நிறுத்தும் நிலையினைத் தோற்றுவித்தது. இதில் ஒன்றுதான் கரம்பொனில் பிறந்து தமிழர் கல்விக்கும், சைவ ஒழுக்கத்துக்கும் புத்துயிர் கொடுக்க வணக்கத்துக்கும், போற்றுதற்குமுரிய மகாதேவா சுவாமிகளால் ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீ சிவகுருநாத பீடமாகும்.

இந்நாளில் இது யாழ்ப்பாணஆன்மீக ஈடேற்றத்தின் உயர் நிலையமாக விளங்கியது. எண்ணற்ற சீடர்களும் ஞானிகளையும் இல்லாதவராகக் கொண்ட நிலையமாக இது வளர்ச்சிய டைந்து புகழ்பெற்றது. மகாதியாகியும்,உழைப்பாளியும்,துறவியும் பரம ஞானியுமான வண மகாதேவா சுவாமிகளது வேதாந்த மடத்தில் இணைந்து வன மகாதேவா சுவாமிகளிடம் வேதாகம சாத்திரத்தை பல ஆண்டுகாலம் கற்று சமய வாழ்க்கை வாழ்ந்து பலருக்கு அருள் மழை பொழிந்த தவத்திரு வடிவேல் சுவாமிகளும் ஒருவராவார். இவர் தான் கிளிநொச்சி ஜெயந்தி நகரில் தனது குருநாதரின் பெயரில் மகாதேவா ஆச்சிரமத்தினை 1952 ஆவணியில் நிறுவினார்.

இவரை கிளிநொச்சி சென்று மக்களுக்குச் சேவை செய்யுமாறு தவத்திரு யோகர் சுவாமிகள் இட்ட கட்டளையை ஏற்று கிளிநொச்சியில் தவக்குடில் அமைத்து சிவப்பணிக்கும்,சமய எழுச்சிக்கும், ஆன்மீக எழுச்சிக்கும் வித்திட்டு வழிகாட்டினர்.

எனது இருபதாவது வயதில் துறவு போன்றவர் தவத்திரு வடிவேல் சுவாமி, யோகர் சுவாமிகளிடத்திலே சென்ற போது இவர் சிறுவனாகவும், தவத்திரு மகாதேவா சுவாமிகளிடம் சென்று துறவு பூண்ட போது இளைஞனாகவும் இருந்தார்.

தவத்திரு மகாதேவா சுவாமிகளது கொள்கைகளை அமுலாக்க நெருக்கடியான பல துன்பத்தின் மத்தி யிலும் மக்களோடு மக்களாக வாழ்ந்து வழிகாட்டி செயல்படுத்திய ஞானி வடிவேல் சுவாமிகள் இவர் தனது இசைச் சொற்பொழிவால் யாவரையும் தன்பால் ஈர்த்தார்.

சமய ஆன்மீக பணிகளோடு மட்டும் நின்று விடாது தவத்திரு வடிவேல் சுவாமிகள் துன்பத்தோடு துன்பமாக வாழும் மக்கள் துயர் துடைக்கும் பணியிலும் நேரடியாக ஈடுபட்டதுடன் நிறுவனங்களையும் ஊக்குவித்தார். வேறு காலத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு நலனுக்காக குருகுலம், காந்தி நிலையம் ஆகியன தோற்றுவிக்கப்பட்டன. வரலாற்று பெருமைமிக்க நாற்சதுர ஆவுடையார் கொண்ட உருத்திரபுரீசுவரர் கோவில் புனரமைக்க பேருதவி புரிந்ததுடன் உருத்திரபுரீசுவரர் உடன் உறை உருத்திரபுர நாயகி மீதும் திருப்பள்ளி எழுச்சியைச் சுவை சொட்டச் சொட்ட அழகுற பாடினார்.

தவத்திரு வடிவேல் சுவாமிகளது வருகையால் பல பகுதியில் சைவமும் தமிழும் உணர்வுடன் வளர ஆக்கமும் ஊக்கமும் இவரால் அளிக்கப்பட்டது. பெருமைக்குரியது. இவ்வாறாக நலிவுற்ற மக்களுக்கு அவர்கள் தம் சொந்தக்காலில் நின்று தங்களது பொருளாதார நடவடிக்கையில் ஈடுபட்டு முன்னேற முடியும் என்பதை தவத்திரு யோகர் சுவாமிகளது அடியில் நின்று சிந்தனையை ஊட்டினார்.

தவத்திரு வடிவேல் சுவாமிகள் வன்னி காட்டில் சிவப்பொலிவும், இறையருட் செல்வமும், வேளாங்கவம் இப்பகுதி சிவபூமியாகத் திகழவும், இப்பகுதியில் சமயநெறிக் கடமைகள் பெருகவும் சமய பணியுடன் சமூகப்பணி முன்னேறவு ம் அயராது உழைத்தார்.

ஆதரவற்ற சிறுவர்கள், முதியோர்கள்,அனாதைகள் இவரது பணியால் அரவணைக்கப்பட்டனர். இப் பணிக்கு வன்னியில் வித்திட்டவர் தவத்திரு வடிவேல் சுவாமிகள் இவரின் தவப்பணி யாவராலும் போற்றி மதிக்கப்பட்டது.

02.06.1990 அன்றிய சுபதினத்தில் பரிபூரணத்துவம் அடைந்ததால் மறு தினமே மகாதேவா ஆச்சிரமத்தில் எங்கள் குருநாதன் சமாதி வைக்கப்பட்டு பூசை வழிபாடுகள் செய்யப்பட்டு வருகிறது.


வணக்கத்துக்குரிய கணேசானந்தா மகா தேவா சுவாமிகளது சமய சமூகப் பணியும் சைவச் சிறுவர் இல்லத்தின் தோற்றம் தவத்திரு வடிவேல் சுவாமிகளுடன் இணைந்து இருந்து பணியாற்றிய வண கணேசானந்த மகாதேவா சுவாமிகள், தவத் திரு வடிவேல் சுவாமிகளின் பின் மகா தேவா ஆச்சிரமத்தின் குருபீடத்தலைவராக நியமிக்கப் பெற்றார். இருக்கு இவரது குருநாதரான வடிவேல் சுவாமிகளுக்கும் காலத்தில் ஏற்பட்ட நெருங்கிய தொடர்பு காரணமாகவும் ஆசிரமத்தில் குருநாதருடன் இணைந்து பணியாற்றிப் பெருமை பேற்றாலும், குருநாதரைச் தரிசித்து அவரது அன்புக்கு ஆட்படும் பெரும் பேற்றைப் பெற்றார்.இவர் தவத்திரு வடிவேல் சுவாமிகளைத் தொடர்ந்து இவரும் கிளிநொச்சி சைவசமையஆன்மீகப் பணியில் பெருமளவு ஈடுபட்டார்.

இவரும் உருத்திரபுரத்தில் பாழடைந்து கிடந்த உருத்திரபுரீசுவர் கோயிலைத் தூய்மைப்படுத்தி தலைமை தாங்கி சிவ வழிபாட்டை நிலை நிறுத்துவதற்கு அயராது பாடுபட்டார். இவர் தனித்துவம் ஒருமித்தும் சமயப்பணிக்கு அர்ப்பணிப்புடன் உழைத்தார். இவரது அயராத கடுமையான உழைப்புக்கு நிகரில்லை. இவரது அயராத கடுமையான உழைப்பும், அசையாத நம்பிக்கையும் பலரைத் தட்டியெழுப்பியது.

இவரது காலத்தில் சமய ஆன்மீகப் பணிகளை விரிவுபடுத்தி பல்வேறு நிறுவனங்களை நிறுவியும் அவற்றின் ஊடாகவும் ஆச்சிரமத்தின் ஊடாகவும் பன்முகப் பணியாற்றினார். இவரால் ஆரம்பிக்கப்பட்ட சிறிய கோவில்களுக்கான ஆதரவு சமய பிரசங்கங்கள் ஆன்மீகத்தினை மக்கள் தொய்ய விடாது தொடர உதவியது.

இவ்வாறான நிறுவனங்களில் திருநெறிக்கழகம்

யோகர் சுவாமிகளது திருவடி நிலைய முதியோர் இல்லம், குருகுலச் சிறுவர் இல்லம், காந்தி நிலையச் சிறுவர் இல்லம், மகாதேவா ஆச்சிரமச் சிறுவர் இல்லம், உருத்திரபுரீசுவரர் ஆலய திருப்பணி ஆகியவை குறிப்பிடத்தக்கவை. பலவற்றிற்கு பல வருடங்கள் தலைமை தாங்கியும் ஆலோசனை கூறியும் வழி நடத்துகிறார்.

கணேசானந்தா மகாதேவா சுவாமிகள் அளப்பரிய பணியாற்றியும் தற்போதும் ஆற்றியும் வருகிறார். இவர் குருநாதரான வடிவேல் சுவாமிகள் மீது கொண்ட அளவற்ற பற்றினாலும் சைவ சமய நெறியைப் பரப்ப வேண்டுமென்ற பெரு வேட்கையாலும் தனது பெரு நில புலன்களையும், பெருஞ் செல்வத்தினையும் உயர்வான வசதிகளைமுடைய வாழ்க்கையை தூக்கியெறிந்து விட்டு துறவு பூண்டு மகாதேவா ஆச்சிரமத்தினுடாக சமயப் பணி புரிவது போற்றுதற்கும் பாராட்டுதலுக்குமுரியது.

மகாதேவா ஆச்சிரம சைவச் சிறார் இல்ல உதயம் 1995,1996 ம் ஆண்டுகளில் கிளிநொச்சியில் பாரிய யுத்தம் நடைபெற்ற நெருக்கடியான காலம் யுத்தத்தினால் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்பட்டனர்.

சுவாமிகள் குருகுலச் சிறுவர் இல்லத்தின் தலைமையை ஏற்று நடத்தி வந்தார்.1995 மே மாதமளவில் அப்போதிருந்த அரசியல் நெருக்கடியால் குருகுலம், காந்தி நிலையம் ஆகிய இல்லத்திலிருந்து வெளியேற வேண்டியேற்பட்டது.அது மட்டுமன்றி இல்லத்தின் சைவப் பாரம்பரிய முறைகள் அனைத்தும் கைவிடப்பட்டு, கோவிலும் மூடப்பட்ட துயரநிலை.

இது சுவாமிகளைத் துன்பத்தில் ஆழ்த்தியது. இதற்குப் பரிகாரம் தேடும் வகையில் புதிதாக மகாதேவா ஆச்சிரமச் சைவச் சிறுவர் இல்லம் என்ற பெயரில் சைவப் பாரம்பரியம் பேனும் புதிய இல்லத்தினை திறப்பது பிடித்தமானது என பல கலந்துரையாடலின் பின் ஏற்கப்பட்டு அப்போதைய அரசாங்க அதிபராக இருந்த எனது ஆதரவுடன் 1997ம் ஆண்டு தைப்பூசத்தில் கிளிநொச்சி ஸ்கந்தபுரத்திலுள்ள கோவிலில் மகாதேவா ஆச்சிரமச் சைவ சிறுவர் இல்லம் சுவாமிகளின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. இது பாரிய நெருக்கடியான ஒரு காலகட்ட சூழலில் சமூகத்தின் தேவை கருதி விரைவாகவே தோற்றம் பெற்றது.

எந்தவிதமான நிரந்தரமான கட்டடமும் இன்றி கோவில் வளாகத்தில் ஒரு கொட்டில் ஆச்சிரமத்தின் ஒரு பகுதியாக இந்த இல்லம் 06 சிறுவர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது.

பாரிய அபிவிருத்தியை நோக்கிய பயணம் ஸ்கந்தபுரத்திலிருந்து 2000 ஆண்டில் சமாதான ஒப்பந்தம் ஏற்பட புதுமுறிப்புக்கு இல்லம் இடமாற்றப்பட்டது. இங்கு அரசிடமிருந்து பெறப்பட்ட 22 ஏக்கர் நிலத்தில் ஓலை கொட்டில் அமைத்தே இல்லம் ஆரம்பிக்கப்பட்டது. இக்காணியைத் திருத்த கனடாவில் இருக்கும் திரு. பொ. வரதராஜா என்பவர் பேருதவி புரிந்தார். அப்போது இதன் நிர்வாகம் ஆச்சிரமத்துடன் இணைந்த குழுவே பொறுப்பாக இருந்தது. திரு. பொன். நிதியானந்தன் அவர்களும் அதில் இருந்தார்.

இதன் பிற்பாடு சிறுவர் இல்லம் தனியான முகமைக்குழுவினால் நாடத்தப்பட வேண்டும் என்ற நிதி வளங்குனரது ஆலோசனை வழிகாட்டலுக்கு இணங்கவும் சுவாமிகளால் இயக்க முடியாத நிலை ஏற்பட்டதாலும் 2002ம் ஆண்டு அதன் தலைவராக அப்போது அரசாங்க அதிபராக இருந்த திருநாவுக்கரசு இராசநாயகம் ஆகிய யான் தலைமையை ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

எனது தலைமையின் கீழ் பல ஓய்வு பெற்ற உயர் அதிகாரிகளும் என்னுடன் சேர்ந்து அன்று பணியாற்றுகின்றனர்.

இக்கால கட்டத்தில் தான் பல அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஆண் குழந்தைகளுக்கான முதலாவது விடுதிக் கட்டடம் அகில இலங்கை இந்துமாமன்றத்தின் நிதியுதவில் கட்டப்பட்டதுடன் மேலும் களஞ்சியமும் அகில இலங்கை இந்து மாமன்றத்தினால் கட்டி திறந்து வைக்கப்பட்டது.

இதேவேளை 2003ம் ஆண்டளவில் புதுமுறிப்பு ஆண்கள் விடுதிக் கட்டடம், சமையலறைக் கட்டடம், உணவு மண்டபம், படிப்பு மண்டபம், தலைமை அலுவலகம், பிராத்தனை மண்டபம் என்பன கட்டப்பட்டன. படிப்பு மண்டபம் லண்டனில் வதியும் திரு. தம்பு குலதுங்கம் என்பவரால் அன்பளிப்பாக கட்டப்பட்டது. பிராத்தனை மண்டபம் அவுஸ்திரேலியா அன்பர் ஒருவரால் கட்டப்பட்டது.

கொழும்பு மனித நேயத்தின் அனுசரணையுடன் மனிதநேயம் சிட்னி ஆஸ்திரேலிய நிறுவனத்தின் நிதியுதவியால் ஆண் குழந்தைகளுக்கான விடுதிக் கட்டிடத் திறக்கப்பட்டது. மேலும் ஒரு மாணவர் விடுதி புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சினால் 2 மில்லியன் உதவியுடன் கட்டப்பட்டது.

அத்துடன் தலைமை அலுவலகமும் அறநெறிப் பாடசாலையும் இல்லத்தின் சொந்த நிதியில் கட்டப்பட் டு திறக்கப்பட்டது.

இதே நேரத்தில் சிவன் கோயில் ஒன்று வளாகத்தில் கட்டப்பட்டதுடன் இக் கோயில் பொது மக்கள் வழிபாட்டுக்கு oவிடப்பட்டது. சகலராலும் பாராட்டப்பட்டது.

வள்ளுவர் முன்பள்ளி அறநெறிப் பாடசாலை ஆகியன கட்டப்பட்டு 40க்கு மேற்பட்ட மாணவர்கள் முன்பள்ளியில் கல்வி கற்றனர்.100க்கு மேற்பட்ட மாணவர்கள் அறநெறிப் பாடசாலைக் கல்வியினைக் கற்று வந்தனர். கல்வி கற்ற ஆசிரியர் வளம் உட்பட அனைத்தும் இல்லத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டது.

கிணறுகள் கனக துர்க்கை அம்மன் ஆலயத்தினாலும்,குளிக்கும் வசதி யப்பான் ஜய்கா நிறுவனத்தினாலும், கழிப்பறை வசதி போரூட் நிறுவனத்தினாலும் செய்து வழங்கப்பட்டது.இதே நேரத்தில் லண்டன் தமிழ் அகவையின் நிதியுதவியுடன் திரு ஏ. தம்பியையா அவர்களது ஏற்பாட்டில் ஒரு குழாய்க்கிணறு அமைக்கப்பட்டது. இவர் எமது இல்லத்திற்கு எந்த நேரமும் உதவி அளித்து ஊக்குவித்தார்.இவரை மறக்க முடியாது. இதே நேரத்தில் 2008 இறுதிவரை 100 ஆண்குழந்தைகள் இங்கு இருந்து கல்வி கற்கிறார்கள்.

அதே நேரத்தில் அமரர் பசுபதிப் பிள்ளை அவர்களது குழும்பத்தினரால் எமக்கு கையளிக்கப்பட்டது.1 ½ ஏக்கர் காணியில் பெண்கள் இல்லம் ஒன்று பரமானந்த வல்லி மாதாஜி ஞாபகார்த்தமாக லண்டன் திரு. திருமதி தேவராசா அவர்களது நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்டு பெண் குழந்தைகள் தங்க வைக்கப்பட்டு கல்வி, உணவு, பராமரிப்பு வசதியளிக்கப்பட்டது.இல்ல குழந்தைகளுக்கான நூல் நிலையம் ஆரோபணம் நிறுவனத் தலைவர் லண்டன் திரு விஜயானந்தன் இராம கிருஷ்ணன் அவர்களது ஏற்பாட்டில் லண்டன் தமிழ் கலாச்சார நிலையத்தினால் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. இதன் மூலம் குழந்தைகளுக்கான வசதிகள் பல அதிகரித்தன. படிப்பு மண்டபம் மனிதநேயம் கொழும்பு ஏற்பாட்டில் சிட்னி மூத்த பிரஜைகள் நிதியுதவியால் கட்டப்பட்டது.2008ம் ஆண்டு கரித்தாஸ் நிறுவனத்தினால் 6 கழிப்பறைகள் கட்டி உதவப்பட்டது. இதன் மூலம் குழந்தைகள் வசதியாக கல்வி கற்க முடிந்தது. அக்காலத்தில் பராமரிப்புச் செலவுக்கு கொழும்பு மனிதநேய நிறுவனம் மூலம் தொடர்ச்சியாக உதவியது.

அதே போல ஆரோபண நிறுவனமும், யூ. கே. லண்டனில் வதியும் டாக்டர் சிவசின்மையானந்தனும் மறக்க முடியாதவர்கள். தொடர்ச்சியாக பல உதவிகள் புரிந்தனர். இடைக்கிடையே சில அமைப்புக்கள் சிறிய அளவில் உதவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் கனடா யோகர் சுவாமிகள் திருவடி நிலையமும், திரு ஜனார்தனர் தலைமையில் சில அன்பர்கள் உதவினர்.அதே நேரத்தில் திரு நவந்தராஜா அவர்கள் தலைமையில் ஆஸ்திரேலியாவிலும் எமக்கு உதவும் நோக்கில் எமது இல்லத்தின் கிளை திறக்க முயற்சி எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது. பாராட்டுதலுக்குரியது. திரு ப. நவநீதராஜா அவர்களது பங்களிப்பு மறக்க முடியாது.

இந்த நேரத்தில் யாம் இல்லத்தினை ஆரம்பித்த போது மனிதநேய நிறுவனமும் ஆரோபனமும் முதலில் பாரமரிப்பு நிதியுதவிகளை அளித்தது. பல வகையில் உற்சாகமும், உதவியும் அளித்த கொழும்பு மனிதநேயத்தின் தலைவர் மனிதநேயர் திரு. வி. கைலாசபிள்ளை அவர்கள் அவர்களது துணைவியார் திருமதி அபிராமி கைலாசப்பிள்ளை அவர்கள் மனிதநேயம் யு. கே. நிறுவனத் தலைவர். திரு. எஸ். மித்திரன் அவர்கள் காலம் அறிந்து செய்த உதவிகள் எமது வரலாற்றில் மறக்க முடியாத பதிவுகள். இவர்களது கறவைப் பசுத்திட்டம் குழந்தைகளது போஷாக்கின்மையை போக்கியது. திரு கந்தையா நீலகண்டன் பொதுச் செயலாளர் இந்து மன்றமும் மறக்க முடியாதவர்கள். இவர்கள் முள்ளிவாய்க்கால் தொடக்கம் மெனிக்பாம் வரை எமது குழந்தைகளுக்கு உதவினார்கள்.


இதே நேரத்தில் லண்டனில் இருந்த போதும் இங்கு அடிக்கடி நெருக்கடியின் போது வந்து எங்களது நிலைமையை அறிந்து எமக்குத் தொடர்ச்சியாக ஆரம்பத்தில் இருந்தே உதவி வரும் ஆரோபணம் யூ. கே. நிறுவனத்தின் தலைவர் சமூகத்தொண்டர் விஜயநாதன் இராமகிருஷ்ணன் அவர்களது பணியை மறக்க முடியாது.

ஆரோபண நிறுவனத்தினரும் மனித நேயத்தினரும், யுத்த நெருக்கடியின் போது முள்ளிவாய்க்கால் தொடக்கம் மினி பரம்பரை உதவியமையால் தான் எங்களது குழந்தைகளை இறுதி வரை உணவு கொடுத்துக் காக்க முடிந்ததுடன் மனிதநேயம் மடியவில்லை என்பதை இவர்களது செயல் உறுதிப்படுத்தியது.

இதே நேரத்தில் லண்டனில் வதியும் மனிதநேயரும் சமூகத் தொண்டில் ஆர்வமும் கொண்ட மருத்துவக் கலாநிதி என். சிவசின்மயானந்தனை எமது குழந்தைகளும் யாமும் மறக்க முடியாது.

ஜாம் குழந்தைகளை மாத்தளனில் வைத்திருந்த போது பாரிய உணவு நெருக்கடி, இது இது பற்றி அவர்களுக்கு அறிவித்ததும் டாக்டர் என். சிவ சின்மயானந்தன் ஐயா அவர்கள் 3 அச்சம் ரூபாய்க்கு மேல் உதவி பசியால் துடித்த குழந்தைகளுக்கு பசி தீர்க்க உதவினார்.

இவரது பணத்தினை அப்போதைய முல்லை தீவு மேலதிக அரச அதிபர் திரு. கே. பார்த்தீபன் அவர்கள் குளம் அனுப்பி உணவுப்பொருட்கள் பெறப்பட்டு குழந்தைகள் காப்பாற்றப்பட்டனர். இவர் காலத்தால் செய்த உதவி மறக்க முடியாது தற்போதும் இவர் தலைமை தாங்கும் என்பீல்ட் நாக பூசணி அம்மன் ஆலயத்தில் ஊடாக பெருமளவு உதவுகின்றார். இவரது தன்னலமற்ற பணி போற்றுதற்குரியது.

இவ்வுலகில் தமக்கென்று எதுவுமே இல்லாத நிலையில் எதிர்காலமே சூனியமாய் இருண்டு கிடந்த குழந்தைகளுக்கு வாழ்வளித்து உதவும் இக்குழந்தைகள் இவ்வுலகில் வாழ வேண்டுமென்று நம்பிக்கையை ஊட்டி எமது மகாதேவா ஆச்சிரச் சிறுவர் இல்லப் பிள்ளைகளுக்கு வாரி வழங்குகின்ற இவர்களையும் புலம்பெயர்ந்த உறவுகளையும் எம்முள்ளதால் வணங்கி கண்ணீர் பனிக்க நன்றி கூறுகின்றோம்.

போர் ஏற்படுத்திய அழிவுகள் சகல குழந்தைகளும் எதுவித பிரச்சனையும் இன்றி இந்த இல்லத்தில் 2008 வரை பாதுகாக்கப்பட்டனர்.2009 ல் ஆரம்பித்த கடுமையான சண்டை இடம்பெயர வைத்தது.

சமய சமூகத் தொண்டின் மூலவர்கள் பறந்து வரும் விமானக் குண்டுகள் மத்தியிலும், எறிகணைகள் மத்தியிலும் சிறுவர் சிறுமியரைக் கொண்டு இடம் பெயர்வது எவ்வளவு கடினம் என்பதை புரிய முடியும். துரத்தும் மரணத்திலிருந்து இப்ப பிள்ளைகளையும் கொண்டு இடம் பெயர்கின்ற நிர்வாகிகளும், பணியாளர்களும் செய்த சேவை மறக்கப்பட முடியாது.

அவர்களின் அர்ப்பண உணர்வு அற்புதமானது. இடம் பெயர்ந்து தர்மபுரம், விசுவமடு, வள்ளிபுரம் உட்பட முள்ளிவாய்க்கால் வரை சென்று மெனி பாம்பரை நகர்ந்து மீண்டும் 2010ம் ஆண்டு யாம் எமது இல்லத்திற்கு மீளவும் வந்த போது யாம் கண்ட காட்சி பயங்கரமானது.

போர்ச் சூழலின் விளைவாக பெற்றோரையும்,உற்றோரையும் இழந்து எதிர்காலம் சூனியமாக ஆதரவற்ற சிறுவர்களை அரவணைத்து ஆதரித்து அடைக்கலம் கொடுத்து இவ்வுலகில் வாழ வழி சமைத்த இல்லத்தின் சகல கட்டடமும் அழிக்கப்பட்டு கூரைகள் இன்றி சுவர்களே சில கட்டடத்திற்கு இருந்தன பெருமளவில் கட்டடங்கள் தரைமட்டமாக்கப்பட்டடிருந்தன. இதே போல சில புது முறிப்புக் கட்டிடங்களும், குருகுல வளாகமும் தரைமட்டமாக்கப்பட்டிருந்தன. நிதியின்றி திருத்தப்பட முடியாத நிலையில் இன்னமும் சில கட்டடங்கள் உள்ளன.

எம்மிடம் 52 உழவு இயந்திரத்தில் ஏற்றிச் செல்லப்பட்ட பொருட்கள், கட்டில்கள், மெத்தைகள் மீள எடுக்கவும் இல்லை. உழவு இயந்திரங்கள், பாத்திரங்கள் உட்பட ஒரு கோடிக்கு மேற்பட்ட தளபாடங்கள் இருந்தன எதுவுமே மிஞ்சவில்லை.

போரின் பின்னான மீளேழுச்சி

140 குழந்தைகளையே பராமரிக்கக் கூடிய வளங்களை கொண்ட யாம் தற்போது 339க்கு ஏற்பட்ட குழந்தைகளை பராமரிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

யுத்தத்தின் பின்னாலே அழிந்துள்ள பெருமளவு கட்டிடங்களைத் திருத்த வேண்டிய நிலை ஏற்பட்ட போது மாண்புமிகு வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திர சிறி அவர்களும் ஆளுனரது செயலாளரான திரு.சி ரங்கராசா அவர்களும் திரு. விஸ்வரூபன் ஆகியோரும் எமக்கு உதவினர்.

இந்தக் குழந்தைகளது இல்ல விடயத்தில் எமக்கு முன்னின்று உழைத்து கட்டடத்தினை திருத்த உதவிய பெருமதிப்புக்குரியவரான முன்னாள் வடமாகாண பிரதம செயலாளராகவும் ஆளுனர் செயலா ளராகவும் இருந்த திரு.சி. இரங்கராசா அவர்களையும் மறக்க முடியாது அவரைப்போல குழந்தைகளை நேசித்து ஆளுனருக்கு நிலமையை எடுத்துக் கூறி ஆதரவற்ற சிறுவர்களுக்கு பெரு விருப்புடன் உதவினார். அதே நேரத்தில் சகல கட்டடங்களும் துரிதமாக திருத்த வேண்டி மதிப்பீடுகளைத் தயாரித்து மேற்பார்வை செய்து கட்டி முடித்த கிளிநொச்சி மாவட்ட கட்டடப் பொறியியலாளர் திரு. சிவ சுப்ரமணியம் அவர்களையும் அவர்களது தொழில் நுட்ப அலுவலர்களையும் மறக்க முடியாது. இவர்களது அயராத உழைப்புக்கு ஆக்கமும், ஊக்கமும் கொடுத்த மாகாணப் பணிப்பாளர் பொருளியலாளர் திரு மோகன்தேவன் அவர்களுக்கும் இதயம் கனிந்த நன்றிகளை இம்மலரூடாக பதிவு செய்ய விரும்புகின்றோம்.

அதே நேரத்தில் மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி அப்பாதுரை அவர்கள் எமது இல்ல சமையலறை திருத்திற்கு தனது பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி மூலம் உதவியதை மறக்க முடியாது.

அதே நேரத்தில் கனடா வைப்போம் நிறுவனத்தின் தலைவர் திரு கிருஷ்ணர் அவர்கள் நாளைய சமுதாயத்தின் ஆதரவற்ற குழந்தைகளை கல்வியின் உயர்ந்த நல்ல பிரஜைகளாக வளரும் வகையில் ஒரு விடுதி அறையை 7 லட்சம் ரூபாய் திருத்தித் தந்தார். இவரது செயல் எம்மை ஊக்குவித்தது.

லண்டனில் வதியும் திரு. திருமதி பஞ்சலிங்கத்துரை ரூபி குடும்பத்தினர் இங்கு வந்து சிறிய குழந்தைகளது வதிவிட நெருக்கடியை நேரில் பார்வையிட்டு இக் குழந்தைகளது இட நெருக்கடியை போக்கும் வகையில் 110 அடி நீளமும் 20 அடி அகலமும் கொண்ட கட்டிடத்தினை மீளக்கட்டித் திறக்க 2.5 மில்லியன் நிதியை ஏற்பாடு செய்து மீளக்கட்ட உதவியமை நன்றிக்குரியது. தங்களது குழந்தைகள் போல நாளை சமுதாயத்தில் இக்குழந்தைகளும் வளர வாய்ப்பினைப் பெற்று சமூகத்தில் நற்பிரஜைகளாக வளர வேண்டுமென்று மனமுவர்ந்து இந்தக் குழந்தைகளிற்கு இவ்வுலகில் சிறப்புடன் வாழ வழி சமைத்த திரு. திருமதி. பஞ்சலிங்கத்துரை ரூபி குடும்பத்தாரைக் குழந்தைகள் என்றும் மறக்க மாட்டார்கள். தங்களின் ஒருவனாக நம்மை மதித்து என்றும் உதவும் கிளம்பியது வாழும் நல்லுள்ளங்களது தயவான உதவிமறக்க முடியாது.

அதே நேரத்தில் மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர் திரு. என் சிறிதரன் உதவியால் 4.5 மில்லியன் செலவில் லண்டன் கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தினுடாக ஒரு விடுதியையும் 2.5 மில்லியன் செலவில் லண்டன் என்பீல்ட் நாகபூசணி அம்மன் ஆலயத்தினர் ஒரு விடுதியையும் லண்டன்

கற்பக விநாயகர் 1.6 மில்லியன் ரூபாய் வில் உணவு மண்டபமும் திருத்தி அமைக்க உதவினர். இது பாரிய உதவியாக இருந்தது.

அத்துவின் கழிப்பறை,குளியலறை வசதிகளை கனடா தனுசியா அவர்களது உதவியுடன் கிளிநொச்சி பிறிகேடியர் திரு. இரத்தின சிங்கம் அவர்களது பொறியியலாளர் பிரிவு அமைத்து தந்தனர். அதனை விட UNHCER நிறுவனம் RDF மூலம் 10 குளியல் அறைகளை கட்டித் தந்தனர் அத்துடன் கொழும்பு தேவசபை நான்கு கழிப்பறைகளைக் கட்டி தந்தனர். இவர்கள் அனைவரது ஆதரவும் எமது செயலுக்குப் பலம் சேர்த்தது.

இன்னும் வகுப்பறைக் கட்டிடங்கள் திருத்தப்பட வேண்டி உள்ளது. பெண்களுக்கான விடுதி வசதி போதாத நிலை இன்றும் ஏற்பட்டுள்ளது. தற்போது மனிதநேயம் UK ஒரு வகுப்பறையை ரூபா 2.5 மில்லியன் செலவில் கட்டித்தர முன்வந்துள்ளமை மகிழ்ச்சிக்கும் பாராட்டுக்குமுரியது.

இதனால் பாரிய இட நெருக்கடி எமது சமூகத்தில் ஏற்பட்டுள்ள பெண் குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள வேண்டத்தகாத அழுத்தத்தினால் பெண் குழந்தைகளை அதிகம் விடுகின்றார்கள் பிரிவுக்கு உண்டு பெண்களுக்கு விடுதி வசதி அளிப்பதற்காக யாம் வளாகத்தில் கட்டிய படிப்பு மண்டபம், நூல் நிலையம், தையல் பயிற்சி நிலையம் மூன்றையும் மூடி விடுதியாக்கியுள்ளோம். இதுவும் போதவில்லை சிறிய 10 வயதுகுட்பட்ட பெண் குழந்தைகளை ஆண்கள் விடுதியில் ஒரு பக்கமாக வைத்துள்ளோம். உனது குழந்தைகளுக்காக விடுதி வசதிகளுக்கு 8500 சதுர அடி கொண்ட கட்டடம் சகல வசதிகளுடனும் தேவைப்படுகின்றது. இந்தப் பாரிய துயரில் ஒரு பகுதியைச் சுமக்க யாழ் வணிகர் கழகம் முன்வந்து சதுர அடி கொண்ட கட்டிடத்தினை கட்டித் தருவது மகிழ்ச்சிக்குரியது.

இதற்காக அயராது உழைத்த யாழ் வணிகர் கழகத் தலைவர் மதிப்புக்குரிய ஜெயசேகரம் இத் திட்டதற்கான கருவூல நாயகனாக நின்று அடி நாதமாக ஓடியோடி உழைத்த திரு சிவகுரு யசோதரன் யசோ மோட்டர்ஸ், கிளிநொச்சி அவர்கள் மறக்க முடியாதவர்கள். இல்லக் குழந்தைகள் கல்வியுடன் கூடிய பெருவாழ்வு பெற்றிட இவர்களோடு சேர்ந்துழைத்த அனைத்து யாழ் வணிகப் பெருமக்களும் குழந்தைகளது இதயத்தில் நீங்காமல் இடம் பிடித்துள்ளார்கள்.

வியாபாரம் தனியே தனிமனித மேம்பாட்டுக்குரியதல்ல. சமூக மேம்பாடும், சமூகப் பொறுப்பும் கொண்டது என்ற கொள்கைக்கு உண்மையில் செயலுருவம் கொடுத்த யாழ் வணிகர் கழகத்தின் பணி எமது நினைவில் நின்று அகலாத ஒரு வரலாற்றுப் பதிவாகும்.

சிறுகச் சிறுகச் கட்டி வளர்ந்த எமது இல்லம் எத்தனையோ இல்லங்களை, எத்தனையோ பேரழிவுகளை, எத்தனையோ இடையூறுகளைச் சந்தித்தது. போர் முடிந்த பின்பு மீண்டும் மீண்டும் வந்த போது எல்லாவற்றையும் இழந்து வெறுங்கையராய் நின்றோம்.

எனினும் பலதரப்பட்ட உள்ளூர் மக்களும், புலம்பெயர் உறவு காலத்தால் செய்த உதவிகள் மீண்டும் எம்மைத் தலை நிமிர வைத்தன. என்பதை நன்றியுடன், பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஏற்கனவே செய்து வந்த இன்னும் செய்து கொண்டிருக்கும் உறவுகளுக்காக நாம் தலை வணங்குகின்றோம். இக் குழந்தைகளின் சிரிப்பில் இறைவனை காண்போம். எனவே இவர்களின் முகம் மலர்ந்த சிரிப்பு என்றும் உதிர்ந்து விடலாம் எங்கள் உதவிக் கரங்களை நீட்டுவோம்.

ஆன்மீக அடித்தளங்களுக்குள் வளர்ந்து கிளைவிட்ட மகாதேவா ஆச்சிரமச் சைவச் சிறுவர் இல்லம் சளையாது தனது சமூகத் தொண்டை தொடரும் என சபதம் எடுப்போம்.