நிறுவனம்:தளம்

From நூலகம்
Name தளம்
Category சமூக நிறுவனம்
Country இலங்கை
District திருகோணமலை
Place திருகோணமலை
Address தளம், முதலாம் மாடி, பெரியகடை சந்தை கட்டிடத்தொகுதி, கடற்படைத்தள வீதி, திருகோணமலை
Telephone 0776243212
Email thalamjobcon@gmail.com
Website -


தளம் அமைப்பானது திருகோணமலையைச் சேர்ந்த இளையோர்களை மையப்படுத்தி இயங்கி வருகின்ற சமூக மட்ட அமைப்பாகும். இது 2018 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதி திருகோணமலையை சேர்ந்த இளையோருக்கான ஆரோக்கியமான எதிர்காலம் ஒன்றினை கட்டி எழுப்பும் நோக்குடன் உருவாக்கப்பட்ட அமைப்பு ஆகும்.

இந்த அமைப்பானது அதன் ஆரம்ப கர்த்தாக்களாகிய வைத்தியர் சி. ஹயக்கிரிவன், திரு. சு. மேனன். திரு. சு. சகிலன், வைத்தியர் சி. இந்துஜன், மற்றும் செல்வி. கார்த்திகா ஆகியோரை இயக்குனர்களாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இன்னும் பல இளையோர் தூர நோக்கு சிந்தனையுடன் தளம் அமைப்பின் செயற்பாடுகளில் முன்னின்றனர். இந்த அமைப்பு இளையோருக்கான கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை மேம்படுத்தும் நோக்குடன் அரச, தனியார் மற்றும் திருக்கோணமலை மாவட்ட வாய்ப்புகளை இளையோருக்கு வழங்கி வருகின்றது.

ஆரம்பத்தில் தளம் அமைப்பு இல 28B, சமாது ஒழுங்கை, திருகோணமலை எனும் முகவரியில் ஒரு சிறிய அலுவலகத்தில் 2018 செப்டெம்பர் மாதம் முதல் 2022 டிசம்பர் மாதம் வரை இயங்கி வந்தது. இதன்போது விண்ணப்பங்கள் கோரப்படுகின்ற அரச மற்றும் தனியார் வேலை வாய்ப்புக்கள், கல்வி வாய்ப்புகளுக்கான வழிகாட்டல்களை தமிழ் மாணவர்கள் மத்தியில் தொடர்ச்சியாக வழங்கி வந்ததுடன், அவர்களை அதிகளவில் விண்ணப்பிக்கவும் தூண்டி அதற்கான அனுசரணைகளையும் வழங்கி வந்தனர். மேலும் மாணவர்களுக்கு தேவையான வழிகாட்டல்கள், திறன் விருத்திச் செயல்பாடுகள் போன்றவற்றையும் பல்வேறு மட்டங்களிலும், திருக்கோணமலை மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மேற்கொண்டு வந்தனர். குறிப்பாக பல்கலைக்கழக வாய்ப்புக்கான முதல் படிவம் பூர்த்தி செய்வதில் விசேட செயல்முறைகளை கையாண்டதுடன், திருக்கோணமலையின் பல்வேறுபட்ட பிரதேசங்களில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய உதவிகளையும் மேற்கொண்டனர்.

அரசினால் விண்ணப்பங்கள் கோரப்படுகின்ற பல்வேறுபட்ட வாய்ப்புகளில் தமிழ் மக்களின் சந்தர்ப்பத்தை அதிகரிக்கும் நோக்குடன் அதற்கான விண்ணப்பங்கள் மற்றும் வழிகாட்டுதலை முன்னின்று வழங்கி வந்தனர். குறிப்பாக இலங்கை அரசாங்கத்தினால் கோரப்பட்ட ஒரு லட்சம் இளையோருக்கான காணி வழங்கல் செயல் திட்டத்தின் போது தமிழ் இளையோர் பயன்பெற வேண்டிய நோக்குடன் அவர்களுக்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதற்கான வழிகாட்டலையும், பயிற்சிகளையும் வழங்கினர். மேலும் ஒரு லட்சம் தொழில் வாய்ப்புகளை வழங்கும் செயல் திட்டத்தின் போது திருகோணமலையின் பல்வேறுபட்ட பிரதேசங்களுக்கு நேரடியாக சென்று அங்கிருந்த மக்களுக்கு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதற்கு அனுசரணை வழங்கினர்.

அத்துடன் தளம் அமைப்பானது தனது சுய சிந்தனையுடனும், தமிழ் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்குடன் சுதந்திரமாக இயங்க வேண்டிய தூரநோக்கு சிந்தனையுடன் ஆரம்பம் முதலில் எந்த ஒரு நிரந்தர நன்கொடையாளர்களின் உதவிகளும் இன்றி ஒரு சமூக மட்ட அமைப்பாக, விண்ணப்பப்படிவங்கள், பயிற்சிகள் ஊடாக கிடைக்கின்ற சிறு சிறு சேகரிப்பு நிதி மூலங்கள் ஊடாக இயங்கி வந்தது. தமிழ் இளையோர் சிறு பங்களிப்புகள் மற்றும் சேமிப்பு ஊடாக இயங்கி வந்ததனால், தமிழ் இளையோருக்கு தேவையான அனைத்து விதமான விடயங்களையும் எந்த ஒரு கட்டுப்பாடுகளும் இன்றி முன்னெடுப்பதற்கான எண்ணக்கருவைக் கொண்டு செயல்பட்டது.

சுமார் 5000 பயனாளிகளுக்கு நான்கு வருடங்களுக்குள் சேவைகளை வழங்கியதுடன், திருகோணமலை மாவட்டத்தை பொறுத்தவரை பல்வேறுபட்ட கல்வி வாய்ப்புக்கள் இனங்காணப்பட்டு தமிழ் இளையோரால் பயன்பெறுவதற்கு முக்கிய காரணமாக தளம் அமைப்பு செயல்பட்டது. மேலும் கல்வி தொழில் வாய்ப்புகளுக்கு அப்பால் இளையோருக்கான ஆரோக்கியமான எதிர்காலத்தை கட்டி எழுப்பும் நோக்குடன் இயற்கை, சூழலியல், பெண்களுக்கான விசேடத் திறன் விருத்திகள் போன்றவற்றையும், தமிழ் இளையோருக்கு தேவையான கணினி சார் தொழில்நுட்ப திறன்களையும் விருத்தி செய்வதில் தளம் அமைப்பு பல்வேறுபட்ட உப கட்டமைப்புக்களை உருவாக்கி இயங்கி வந்தது. உதாரணமாக தளம் சூழலியல் குழுமம், தளம் பெண்கள் கூட்டமைப்பு, தளம் அங்காடி என பல்வேறுபட்ட கட்டமைப்புக்களை விருத்தி செய்து கொண்டது.

இந்நிலையில் தளத்தின் சேவை மற்றும் செயற்பாடுகளை மேலும் அதிகரிக்கும் நோக்குடன் 2023 ஆம் ஆண்டு தை மாத முதல் தளம் அமைப்பு திருகோணமலையில் அமைந்துள்ள நகரசபைக்கு சொந்தமான பெரியகடை கட்டிடத் தொகுதியில் முதலாம் மாடியை ஏலம் மூலம் குத்தகைக்கு பெற்று தங்களுடைய சேவைகளை மேலும் விஸ்திரப்படுத்திக் கொண்டனர். இடவசதி அதிகரிப்பின் பின்னர் பல்வேறுபட்ட செயற்பாடுகளை நேரடியாக மேற்கொள்வதுடன், இளையோருடன் நெருங்கி அவர்களுக்கான தேவைகள், அவர்களின் சிந்தனை விருத்தி என்பவற்றினை மேற்கொள்ள தளம் அமைப்பு ஆரம்பித்தது. குறிப்பாக கீற்றுகள் செயல் திட்டத்தின் ஊடாக இளையோருக்கான திறன் விருத்திகளை மேற்கொண்டு வந்ததுடன், விடியல், துகிர், திறல், தளிர் போன்ற செயல்திட்டங்களில் ஊடாகவும் பல்வேறுபட்ட செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் தமிழர்களின் ஆரோக்கியமான சூழ்நிலையும், தேசியம் சார் சிந்தனைகளையும் கட்டியெழுப்பும் நோக்குடனும் பல்வேறுபட்ட செயற்பாடுகளை முன்னெடுப்பதுடன், அதற்கு தேவையான விடயங்களையும், இளையோருக்கு அவர்களது வரலாறு தொடர்பான வழிகாட்டலை வழங்குவதில் தளம் அமைப்பு முன்னிற்கின்றது. குறிப்பாக தரிசனம் செயற்திட்டத்தின் ஊடாக திருக்கோணமலையில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு இளையோரை அழைத்துச் சென்று, அந்த வரலாறு தொடர்பான புரிதல்களை ஏற்படுத்தும் நோக்குடன் பல்வேறுப்பட்ட செயற்பாடுகளை தளம் அமைப்பு முன்னெடுத்து வருகின்றது.

தளம் அமைப்பானது தனது செயற்பாடுகளின் போது திருகோணமலை மற்றும் வேறு மாவட்டங்களை சேர்ந்த பல அமைப்புகளுடன் இணைந்து செயலாற்றுகின்றது. குறிப்பாக மாற்றம், ஓராயம், குவியம் போன்ற அமைப்புகளுடனும் நல்லுறவைப் பணி செயற்பட்டு வந்துள்ளது. அத்துடன் தளம் அமைப்பின் செயல்பாடுகளை வேறு மாவட்டங்களுக்கும் விஸ்தரிக்கும் நோக்குடன் அம்பாறை மாவட்டத்திற்கான தளத்தின் கட்டமைப்பை அம்பாறை மாவட்ட இளையோருடன் இணைந்து உருவாக்கியது. இந்நிலையில் தளத்தின் செயற்பாடுகளில் எந்த வித பாதிப்பும் ஏற்படாமல் முன்னெடுப்பதற்காக நிரந்தர நிதி கட்டமைப்பை உருவாக்கும் நோக்குடன் நிதிப்புலத்தை விஸ்தரிக்க பல்வேறுபட்ட சுயதொழில் சார் செயற்பாடுகளையும் தளம் அமைப்பு முன்னெடுத்து வருகின்றது. அந்த வகையில் திருக்கோணமலை குளக்கோட்டன் சிற்றுண்டிச்சாலையை தளம் அமைப்பு குத்தகைக்கு பெற்று, அங்கு இளையோரை மையப்படுத்திய உணவகம் ஒன்றையும் நடத்தி வருவதுடன், அதனூடாக இளையோருக்கான தொழில் வழிகாட்டல்களையும் வழங்கி வருகின்றது.

மேலும், திருக்கோணமலையை சேர்ந்த இளையோர் சார்ந்த அமைப்புகளுக்கு வழிகாட்டல், ஒத்துழைப்புகளையும் தார்மீக அடிப்படையில் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.