நிறுவனம்:கிளி/ புனித திரேசா பெண்கள் கல்லூரி
பெயர் | கிளி/ புனித திரேசா பெண்கள் கல்லூரி |
வகை | பாடசாலை |
நாடு | இலங்கை |
மாவட்டம் | கிளிநொச்சி |
ஊர் | கிளிநொச்சி |
முகவரி | கரடிப்போக்கு, கிளிநொச்சி |
தொலைபேசி | 021 228 0081 |
மின்னஞ்சல் | kn.st.theresa@hotmail.com |
வலைத்தளம் | - |
கத்தோலிக்க திருச்சபையின் அமலமரித்தியாகிகள் குருக்களால் உருவாக்கப்பட்ட கிளி/ புனித திரேசா பெண்கள் கல்லூரி ஆரம்பத்தில் புனித திரேசாள் ஆலயத்தின் வளாகத்திலும், அதன் பின்னர் இக்கல்லூரியின் அருகில் இருந்த சங்கக்கடை மண்டபத்திலும் தொடர்ந்து இவ்வளாகத்திலும் இயங்கியது என அறிய முடிகிறது.
அருட்தந்தை பிரான்சிஸ் அடிகளார் அவர்கள் முதல் அதிபராக பொறுப்பேற்று நிர்வகித்துச் சென்றாரென கிடைக்கப்பெற்ற தகவல்கள் எடுத்துக்கூறிய போதும் 1954ஆம் ஆண்டுக்கு முன்னரே இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டுவிட்டதென்று வாய்மொழி தகவல்கள் கூறுகின்றபோதும் இதனை உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்கள் எவையும் கிடைக்கப்பெறவில்லை.
ஆரம்பத்தில் தரம் 5வரை புனித திரேசா றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையாக இருந்த இக்கல்லூரி பின்னர் க.பொ.த. சாதாரண தரம் வரை புனித திரேசா வித்தியாலயம் எனும் பெயருடன் கலவன் பாடசாலையாக உயர்வடைந்து செல்வி இராதா. சோமசுந்தரம் அவர்கள் அதிபராக இருந்த காலத்தில் க.பொ.த உயர்தரத்தைக்கொண்ட தரம்1 முதல் தரம்5 வரை ஆண்கள் கற்கும் 1C பெண்கள் பாடசாலையாகவும் திருமதி பரஞ்சோதி மார்க்கண்டு அவர்கள் அதிபராக இருந்த காலப்பகுதியில் கணித, விஞ்ஞானப்பிரிவுகளைக்கொண்ட 1AB பாடசாலையாக தரம் உயர்ந்ததுடன் 31ஆம் திகதி 10ஆம் மாதம் 1994ஆம் ஆண்டு முதல் கல்லூரியாகவும் தரம் உயர்த்தப்பட்டது.
இக்கல்லூரி திருமதி பரஞ்சோதி மார்க்கண்டு அவர்கள் அதிபராக இருந்த காலத்தில் 1996ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஏற்பட்ட பாரிய இடப்பெயர்வு காரணமாக கிளி/ ஸ்கந்தபுரம் இல.01 அ.த.க. பாடசாலையில் தற்காலிகமாக இயங்கி 2002ஆம் ஆண்டு காலப்பகுதியில் மீண்டும் நிரந்தர இடத்திற்கு திரும்பி செயற்பட்ட போதும் 2008ஆம் ஆண்டளவில் திருமதி ஜெ.தனபாலசிங்கம் அவர்கள் அதிபராக இருந்த போது வன்னி நிலப்பரப்பில் ஏற்பட்ட பாரிய இடப்பெயர்வு காரணமாக இடம்பெயர்ந்து தருமபுரம் கானான் ஆலய வளாகத்தில் தற்காலிகமாக 2009ஆம் ஆண்டு தை மாதம் வரை இயங்கி வந்தது. மீளக்குடியேற்றத்தின் போது பல்வேறு இன்னல்களின் பின்னர் பாடசாலையில் தங்கியிருந்த இராணுவத்தினர் வெளியேறிய பின்னரே 30ஆம் திகதி09ஆம் மாதம் 2008ஆம் ஆண்டில் மூடப்பட்ட கல்லூரி 04ஆம் திகதி 01ஆம் மாதம் 2010ஆம் ஆண்டு முதல் தனது சொந்த இடத்தில் 77 மாணவர்களுடனும் 59 ஆசிரியர்களுடனும் இயங்கத்தொடங்கியது. இன்று 800 மாணவர்களுடனும் 51 ஆசிரியர்களுடனும் 04 கல்வி சாரா ஊழியர்களுடனும் இயங்குகின்றது. கணித விஞ்ஞானத்துடன் 30ஆம் திகதி 05ஆம் மாதம் 2016ஆம் ஆண்டு முதல் உயிரியல் தொழினுட்பத்துறைகளையும் கொண்ட 1AB பாடசாலையாகத்திகழ்கிறது 2012ஆம் ஆண்டு முதல் இருமொழிக்கற்கை நடைபெறுகிறது.17 மாணவர்கள் கற்கின்றனர்.