நிறுவனம்:கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை

From நூலகம்
Name கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை
Category வைத்தியசாலை
Country இலங்கை
District அம்பாறை
Place கல்முனை
Address கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை, பிரதான வீதி கல்முனை, அம்பாறை
Telephone 0672229261
Email bhknorth@gmail.com
Website http://basehospitalkn.weebly.com/


இலங்கையில் முதல் மேற்கத்திய வைத்தியசாலை 17 ஆம் நூற்றாண்டின் ஆரம்பப்பகுதியில் இலங்கையைக் கைப்பற்றிய பிரித்தானிய போர் வீரர்களுக்கான வைத்தியசாலையாக ஆரம்பிக்கப்பட்டது. 1880 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் வைத்தியசாலைகள் நிறுவப்பட்டன. அக்காலப்பகுதியிலேயே கல்முனையில் 1809 ஆம் ஆண்டு நடுகல் வைக்கப்பட்ட குறிப்புகள் உள்ளன. 18 ஆம் நூற்றாண்டு காலத்தில் இது மெதடிஸ்த மிஷனரிமாரின் பராமரிப்பில் இவ் வைத்தியசாலை இருந்ததாக வரலாறுகள் மூலம் அறியக் கூடியதாகவுள்ளது.

இது அக்காலத்தில் காயப்பட்டவரை பராமரிக்கவும் யுத்தங்களில் மரணமடைந்தவரை அடக்கம் செய்யவதற்குமான ஒரு இடமாக இருந்திருக்கின்றது. 1880 - 1890 காலப்பகுதியில் டிஸ்பென்சரி போன்ற அமைப்பில் இயங்கி வந்துள்ளது. கல்லோயா குடியேற்றத் திட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்ட அநேக தமிழ் முஸ்லிம் மக்களின் குடியேற்ற இடப்பரப்புக்கள் இவ் வைத்தியசாலையை அண்டிய பிரதேசங்களில் இடம்பெற்றமையினால் அக்காலப்பகுதியில் மட்டக்களப்புக்கு அடுத்ததாக இவ் வைத்தியசாலையே காணப்பட்டமையினால் பொத்துவில் தொடக்கம் மட்டக்களப்பினை கடந்து வாழைச்சேனை வரையான கடலோரப் பிரதேசங்களுக்கு ஆற்றி வந்த சேவையை குடியேற்ற கிராம மக்களுக்கும் ஆற்ற வேண்டிய தேவை ஏற்பட்டது.

1921 இல் மாந்தீவு வைத்தியசாலை ஆரம்பிக்கப்படும் வரை இவ் வைத்தியசாலை குஷ்டரோக வைத்தியசாலையாகவும் இருந்தது. 1952 காலப்பகுதிகளில் விடுதிகள் கட்டப்பட்டு தாதிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். தாதியரின் வருகைக்கு பின்னர் இங்கு இருந்த மிஷனரிகளின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. 1959 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மாவட்ட வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்பட்டது. இவ் வைத்தியசாலையானது மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் மணற்சேனை பாதை வீதிக்கு எதிரே அமைந்துள்ளது. இதன் நிலப்பரப்பானது கிழக்கு சொர்ணம் சுற்றுலா விடுதி வரையும் மேற்கு மணற்சேனை பாதை வரையும் வடக்கு வைத்தியர் விடுதி வரையும் தெற்கு யாட் வீதி வரையும் வியாபித்திருக்கின்றது.

1991 க்கு பிந்திய பகுதியில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை உயர்வாக இருந்தது. அதனால் தாதியர், வைத்தியர்கள் மற்றும் ஏனைய ஊழியர்களும் நியமிக்கப்பட்டனர். 2003 இல் மத்திய அரசாங்கம் பொறுப்பேற்றதன் பின் வைத்தியசாலை வளர்ச்சியில் சிறிது மாற்றம் ஏற்பட்டது. அதன் பின் எல்லா தரமுள்ள வைத்தியர்களும் வருகை தந்தனர். 2004 சுனாமிக்கு பின்னர் அவசர சிகிச்சைப்பிரிவு, பெண்நோயியல் பிரிவு என்பன ஏற்படுத்தப்பட்டன. 2011 ஆம் ஆண்டு உளநலப் பிரிவுக்கு “South Asia’’ விருது கிடைத்தது. இங்கு யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, பொலன்னறுவ, வாழைச்சேனை, பொத்துவில், பாணமை, உஹன, அம்பாறை, கொனாகொல்ல போன்ற தூர இடங்களில் இருந்தும் நோயாளிகள் உளநலச் சிகிச்சையினை பெற்றுச் செல்கின்றார்கள்..

தற்போது 2024 இல் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக வைத்திய கலாநிதி டாக்டர். முரளீஸ்வரன் அவர்கள் கடமையாற்றுகின்றார். தற்போது இவ் வைத்தியசாலையில் ஆண்கள் சத்திரசிகிச்சை விடுதி, ஆண்கள் பொது வைத்திய விடுதி, பெண்கள் சத்திரசிகிச்சை விடுதி, பெண்கள் பொது வைத்திய விடுதி, சிறுவர் வைத்திய விடுதி, மகப்பேற்று விடுதி, மருந்துவழங்கல் பிரிவு, தரமுகாமைத்துவ பிரிவு, தொற்றுக் கட்டுப்பாட்டுப் பிரிவு, பெண்நோயியல் விடுதி, கண் சிகிச்சைப் பிரிவு, விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு, உளநலப் பிரிவு, இரத்த வங்கி, முதிராக்குழந்தை பராமரிப்புப் பிரிவு, பிரதான சத்திர சிகிச்சைக்கூடம், வைத்தியசாலை ஆய்வுகூடப்பிரிவு மற்றும் திட்டமிடல் பிரிவு என்பன உள்ளது.

இங்கு பொதுவாக Laparotomy, Prostatectomy, Thyroidectomy, Herniotomy, Hydrocelectomy, Amputation, Appendicectomy, Cholecystectomy, Vesicolithotomy, Nephrectomy போன்ற பல சத்திரசிகிச்சைகளும் கண்களில் செய்யப்படும் சத்திரசிகிச்சைகளும் இடம்பெறுகின்றன. 2015 ஆம் ஆண்டிற்கு பின்னரே மைதானம், தாய்ப்பாலூட்டுவதற்கான முகாமைத்துவ மையம், வைத்தியசாலை கீதம், சிறுவர் பூங்கா, தங்குமிடம், சிற்றுண்டிச்சாலை, மதுபோதை தடுப்பு புணர்வாழ்வு மையம், பிரேத அறை குளிர்சாதனப்பெட்டி, புதிய தொலைபேசி இணைப்புகள், உடற்குழாய் உள்நோக்கல் கருவி, வைத்தியசாலை பெயர் பலகை, கேட்போர் கூட மேடை, இணையத்தள சேவை போன்றன உருவாக்கம் அடைந்தது.

இவ் வைத்தியசாலை 2014ஆம் ஆண்டிற்கான தேசிய உற்பத்தி திறன் விருது, 2020 இல் இரண்டாம் இடத்திற்கான விருதும் பெற்றது. அத்தோடு கலாச்சார விளையாட்டு விழா, வீதி நாடகம், காது, மூக்கு, தொண்டை இலவச மருத்துவ முகாம், சிறிய கிராமங்களுக்கான இலவச மருத்துவ முகாம் மற்றும் நோய்கள் தொடர்பான விழிப்புணர்வு போன்ற நிகழ்வுகளையும் நடாத்தி மக்களுக்கு பல நன்மைகளை செய்து வருகின்றது.