நிறுவனம்:அம்/ சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலம்
வகை கிறிஸ்தவ ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் அம்பாறை
ஊர் சொறிக்கல்முனை
முகவரி சொறிக்கல்முனை,அம்பாறை
தொலைபேசி 0672 222 155
மின்னஞ்சல் holycrossshrinesk@gmail.com
வலைத்தளம் holycrossshrineskl.blogspot.com


அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதெச செயலகத்திற்கு உட்பட்ட சொறிக்கல்முனை கிராமத்தில் இத்தேவாலயம் அமைந்துள்ளது. இங்கு சுமார் 360 ஆண்டுகளுக்கு முன்பே கத்தோலிக மதம் இருந்ததாக கூறப்படுகிறது. இத் தேவாலயமே இலங்கையின் முதலாவது சாந்தகுருஸ் (Hollycross) தேவாலயமாகும்.

யேசுநாதர் அறையப்பட்டு மரணித்த திருச்சிலுவையின் ஒரு பகுதி இந்தியாவிலுள்ள கோவை நகரிலிருந்து எடுத்துவரப்பட்டு இவ்வாலயத்தில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருவது இவ் ஆலயத்தின் சிறப்பம்சமாகும். இது ஒவ்வொரு வருடமும் புரட்டாசி 14ம் திகதி இவ்வாலயத்திருவிழாவின் போது ஆலயத்திற்கு வெளியே எடுக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பக்தர்கள் வழிபட சந்தர்ப்பம் கொடுக்கப்படுகிறது.

இத் திருவிழாவிற்கு இலங்கையின் பல இடங்களில் இருந்து பெருமளவான மக்கள் வருகை தருகின்றனர். முக்திப்பேறு பெற்ற வண. யோசப்வாஸ் அடிகளார் 1710இல் வருகை தந்து தனது திருப்பாதத்தை பதித்து திருப்பலி ஒப்புக்கொடுத்து இம் மண்ணுக்கு கிடைத்த மாபெரும் பாக்கியம் என வரலாற்று சான்றுகள் கூறுகின்றன. கொன்சால்வாஸ் சுவாமிகள் 18ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஒரு குடிசை வடிவில் ஆரம்பத்தில் இத் திருத்தலத்தை அமைத்தார் என வரலாறு கூறுகின்றது.

மட்டுநகரில் பணியாற்றிய கோவையைச் சேர்ந்த குருக்களான அருட்திரு. அன்ரோனியோ, அருட்திரு. றப்பாயேல், அருட்திரு. யோக்கியம் அடிகளார் ஆகியோரின் அனுசரணையுடன் பாஸ்கல் முதலியார் அவர்களால் 1896ல் நிரந்தர ஆலயம் அமைக்கப்பட்டது. 1896ல் ஆயர் அருட்திரு. கஸரன் றொபிஷே(யே.ச) அவர்களால் இவ்வாலயம் தனிப்பங்காக பிரகடனப்படுத்தப்பட்டது. இப்பங்கின் முற்பங்குக் குருவாக அருப்பணி யோசப்மேரி(யே.ச) அடிகளார் நியமனம் பெற்றார். இவ்வாலயத்தின் விஷேட அம்சமாக இவ்வாலயத்தில் வைக்கப்பட்டிருக்கும் சிலுவையில் மரித்த யேசுநாதரின் திருவுடல் கல்லறை ஆண்டவர் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது. இச் சொரூபம் இந்தியாவின் தூத்துக்குடியில் இருந்து கொண்டுவரப்பட்டதாகும்.

ஒவ்வொரு வருடமும் பெரிய வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும் பாஸ்கா நிகழ்வில் இச் சொரூபம் எடுக்கப்பட்டு சிலுவையில் அறைந்து இறக்கச் செய்யப்பட்டு பின் கீழே இறக்கி பக்தர்களின் வழிபாட்டுக்கு வைக்கப்படும். இந்நிகழ்வில் இலங்கையில் எல்லாப் பாகங்களிலிருந்தும் மக்கள் வருகை தந்து இக் கல்லறை ஆண்டவரை வழிபட்டுச் செல்கின்றனர். தற்போது 216ம் ஆண்டு திருவிழா தற்போதைய புதிய திருத்தல நிர்வாகி அருட்தந்தை S. J. சுலக்‌ஷன் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.