நிறுவனம்:அம்/ சங்கமன்கண்டி பிள்ளையார் கோவில்

From நூலகம்
Name சங்கமன்கண்டி பிள்ளையார் கோவில்
Category இந்து ஆலயங்கள்
Country இலங்கை
District அம்பாறை
Place சங்கமன்கண்டி
Address சங்கமன்கண்டி பிள்ளையார் கோவில், அம்பாறை
Telephone -
Email -
Website -


அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் கிராமத்திலிருந்து சுமார் 12 மைல் தூரத்திலும் உகந்தையிலிருந்து சுமார் 53 மைல் தூரத்திலும் சங்கமன்கண்டி பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ளது. கானகத்தின் நடுவே இந்த ஆலயம் அமைந்துள்ளது.

கதிர்காமத்திற்கு நடந்து யாத்திரை செல்லும் வடபகுதி மக்கள் முல்லைத்தீவு, வற்றாப்பளையை வந்தடைந்து அங்கிருந்து கிழக்குக் கரையூடாக வெருகல், சித்தாண்டி, மாமாங்கம், களுதாவளை, கல்முனை, அக்கரைப்பற்று ஆகிய இடங்களில் தரித்திருந்து திருக்கோவிலை வந்தடைவர்.

இவர்கள் திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுதர் ஆலயம், தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலயங்களில் இரண்டொரு தினங்கள் தங்கி மீண்டும் தமது யாத்திரையை தொடர்ந்து சங்கமன்கண்டியை வந்தடைவர். இவர்கள் வனத்தின் நடுவே உள்ள பிள்ளையாரிடமும் மலையில் அருவமாகவும் உருவமாகவும் (இலிங்கவடிவில்) நிறைந்து அருளாட்சி புரிந்து வரும் எம் பெருமானிடமும் ஆசி பெற்ற பின்பே தமது கதிர்காமப் பயணத்தை தொடர்வர்.

இங்கு ஆரம்பத்தில் சிவலிங்க வழிபாடு இருந்ததாக உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. கி.பி. 1498இல் வாஸ்கொடகாமா என்னும் போர்த்துக்கேய மாலுமி கடற் பிரயாணத்தில் சங்கமன் கண்டி மலையையும் அருகில் கோவிலையும் கண்டதாக தன் சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். வாஸ்கொடகாமாவின் குறிப்பின் மூலமாக நோக்குமிடத்து அக்காலத்தில் (கி.பி.1498) வாஸ்கொடகாமா கண்டவை சங்கமன் கண்டி மலை அடுத்து சங்கமன் கண்டி சிவாலயம் என்பது புரிகிறது.

தற்போதைய சங்கமன் கண்டி பிள்ளையார் ஆலயத்தின் வடமேற்கில் சிறிது தொலைவில் மலைப்பாறைத் தொடரின் வடக்கெல்லையில் இன்று சிதைவுகளைக் காணக்கூடியதாக உள்ளது. மேலும் வாஸ்கொடகாமா தனது சுயசரிதையில் இக்கடற்பரப்பில் பயணம் செய்தவேளை மூன்று உயர்ந்த கோபுரங்களை கண்டதாக எழுதியுள்ளார். ஒன்று திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுதர், மற்றவவை சங்கமன்கண்டி பிள்ளையார் மற்றும் சிவாலயங்களாகும்.

போர்த்துக்கேயரின் ஆட்சிக்காலத்தில் இலங்கையில் பல நூற்றுக்கணக்கான ஆலயங்கள் இடித்து அழிக்கப்பட்டன. இதனை வரலாற்று ஆய்வாளர் குவரோஸ் உறுதிப்படுத்துகிறார். இப்பகுதியில் மூன்று கோபுரங்களை உடைய கோவில்கள் போர்த்துக்கீச தளபதி அசுவிடோவினால் அழிக்கப்பட்டன எனக் குறிப்பிடுகின்றார். இம்மூன்று அழகிய சிகரங்களும் தான் கோவாவுக்கு கப்பலில் சென்ற போது மிக அழகாக தெரிந்ததாக வாஸ்கொடகாமா தனது குறிப்பில் வர்ணித்துள்ளார்.

சங்கமன் கண்டி நாகரிகமாக இருந்துள்ளது என்பதற்கு இவ்வாலயச் சூழலில் காணப்படும் கட்டிட சிதைவுகள், ஆலயங்களின் சிதைவுகள் என்பன கற்றூண்களாகவும் செங்கற்களாகவும் காட்சி தருகின்றன. அத்துடன் அழிந்த மாளிகைகளின் கற்றூண் மதில்கள் அழிவுற்ற இளைப்பாறும் மண்டபங்கள், மாடங்கள், நீர்த்தடாகம் (கேணி) கற்குளியல் தொட்டில்கள், கற்படுக்கைகள், கழிவுக்குழாய் அமைப்புகள் சான்று பகர்கின்றன.

1885ல் சங்கமன் கண்டி ஆலயத்தில் ஒரு சில துறவிகள் குடிசை அமைத்து சிறிய வடிவிலான பிள்ளையாரை வைத்து வழிபட்டு வந்துள்ளனர். 1950, 60 வரையான காலத்தில் இந்துக்களுடன் பெளத்த சிங்கள மக்களும் இவ்வாலயம் வந்து பொங்கலிட்டு தாமே அமுது படைத்து வணங்கிச் சென்றுள்ளனர். பயங்கரவாத சூழ்நிலை இதற்கு முற்றுப் புள்ளி வைத்தது எனலாம். 2009 ஏப்ரல் 9ம் திகதி குடமுழுக்கு செய்யப்பட்ட இப்பிள்ளையார் ஆலய திருவிழா ஐந்து நாட்கள் இடம்பெற்று சித்ரா பெளர்ணமியன்று தீர்த்தோற்சவம் நடைபெறுகின்றது.