நிறுவனம்:அகத்திய தாபன சிவன் ஆலயம்
பெயர் | அகத்திய தாபன சிவன் ஆலயம் |
வகை | இந்து ஆலயங்கள் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | திருகோணமலை |
ஊர் | கங்குவேலி, மூதூர் |
முகவரி | அகத்திய தாபன சிவன் ஆலயம், கங்குவேலி, மூதூர், திருகோணமலை |
தொலைபேசி | - |
மின்னஞ்சல் | - |
வலைத்தளம் | - |
திருகோணமலையின் மூதூரில் அமைந்துள்ள கிளிவெட்டி கிராமத்தின் பின்புறத்தில் மகாவலி கங்கையின் கிளை நதிக்கு அண்மையில் கொட்டியாரபற்று பெரு நிலத்தில் காணப்படும் கங்குவேலி கிராமத்தின் கங்குவேலி குளத்திற்கு சில மைல் தொலைவில் அகத்திய தாபனம் உள்ளது. இப்பிரதேசம் வயல்வெளிகளால் சூழல் காணப்படும் வளம் மிக்க பகுதியாகும். இந்த இடத்தில் அகத்திய தாபன சிவன் ஆலயம் அமைந்துள்ளது. திருக்கரைசம்பதி என்று அழைக்கப்படும் இவ்விடம் திருக்கோணமலையில் தல புராணங்களை கொண்ட இரண்டு சிவாலயங்களில் ஒன்றாகும்.
இந்த இடமானது வட கைலையில் சிவபெருமானுக்கும் உமாதேவியாருக்கும் திருமணம் நடைபெற திருமண கோலத்தைக் காண வந்த முனிவர், சித்தர், இயக்கர், கந்தர்வர் போன்றோர் வட திசை நோக்கி வந்தமையினால் வடதிசை தாழ்ந்து தென் திசை உயர்ந்ததால் சமநிலை தழும்பியது. அந்த நேரம் குறுமுனியாகிய அகத்திய முனிவரை பொதிகையில் இருந்து தென் திசை நோக்கி கோணநாயக்கரை வழிபட சிவபெருமானால் அனுப்பி வைக்கப்பட்ட போது அகத்திய முனி வருகை தந்த இடமே அகத்தியர் தாபனம் ஆகும்.
அகத்திய முனிவரின் பல காலங்களுக்கு பின்னர் இந்தியாவின் அயோத்தியிலிருந்து போர் ஒன்றின் போது தோல்வியுற்ற சிங்கபூதரன் என்ற அரசன் சலகாமி எனும் குதிரையின் உதவியுடன் கடலைக் கடந்து இலங்கை தீவின் கிழக்கு கடற்கரையை வந்தடைந்தார். அந்த நேரத்தில் அந்தப் பகுதியில் அரசாண்டு வந்த எழில் வேந்தன் என்ற மன்னனின் மகள் திருமங்கை என்பவளை திருமணம் செய்து சிவாலயம் அமைத்து அவ்விடத்தை ஆட்சி புரிந்தனர் என்ற வரலாறும் உள்ளது.
அகத்திய தாபனத்தில் அகத்திய முனிவர் ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவி வைத்தியம், தமிழ் கலைகள் என பலவற்றை கற்பித்த இடமாகவும் கருதப்படுகின்றது. இங்கு பல கருங்கல் சிதைவுகளும், ஆலய சுவடுகளும் காணப்படுகின்றது. அகத்தியர் தாபனத்தில் தற்சமயம் காணப்படும் லிங்கம் அகத்தியர் மாமுனிவரால் தாபிக்கப்பட்டதாக கருதப்படுகின்றது. இந்த லிங்கம் 2014 ஆம் ஆண்டு சிலரால் சிதைக்கப்பட்டது. இந்த அகத்தியத் தாபன சிவன் ஆடி அமாவாசை தினத்தில் மகாவலி கங்கையில் எழுந்தருளி விசேட தீர்த்த நிகழ்வுகள் இடம் பெறுகின்றன. இந்த தீர்த்தத்திற்காக சுமார் 10 கிலோமீட்டர் தூரம் ஆலயத்தில் இருந்து தீர்த்தக்கரைக்கு எம்பெருமான் கொண்டு செல்லப்படுகின்றார்.
இந்த ஆலயத்தை குளக்கோட்ட மன்னனும் ஆலயத்திற்குரிய சேவைகளை புரிந்துள்ளார். இவ்வாறு பல பிரதான சுவடுகளைக் கொண்ட ஆலயம் 2013 ஆம் ஆண்டு கார்த்திகை 26 ஆம் திகதி பல பிரச்சனைகளுக்கு மத்தியில் இறைத் தொண்டரான மூர்த்தி ஐயா அவர்களின் வழிகாட்டலில், அப்போதைய திருக்கோணமலை அரசாங்க அதிபராக இருந்த டி. டி. ஆர். டி சில்வா மற்றும் மூதூர் பிரதேச செயலாளர் பிரதீபன் அவர்களின் ஒத்துழைப்புடன் புணரமைக்கப்பட்டு, 2014.3.17 அன்று அடிக்கல் நாட்டப்பட்டது. பல இன்னல்களுக்கு மத்தியில் குறித்த ஆலயம் மெல்ல மெல்ல கட்டி அமைக்கப்பட்டு, அகத்தியர் தாபன சிவன் ஆலயம் 11.4.2016 மகா கும்பாபிஷேகம் கண்டுள்ளது.
இன்று இந்த ஆலயத்தை நிர்வாகிக்க ஆலய நிர்வாக சபை காணப்படுவதுடன், மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்ட ஆலயம் அழகுடனும் பொலிவுடன் பேணப்பட்டு வருகின்றது.