ஆளுமை:ஹசன், எம். பி. ஏ.

From நூலகம்
Name முகைதீன் வாவா அபுல்ஹசன்
Pages முகைதீன் வாவா
Pages கலிமா நாச்சி
Birth 1956.08.01
Place மருதமுனை, அம்பாறை
Category கவிஞர்
Pages மருதமுனை ஹசன்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


முகைதீன் வாவா அபுல்ஹசன் (பி.1956.08.01) அம்பாறை மாவட்டம் மருதமுனையில் முகைதீன் வாவா - கலிமா நாச்சி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவருக்கு 3 சகோதரர்கள். இரண்டு தம்பியும் ஒரு தங்கையும் உண்டு. இவரது புனைபெயர் மருதமுனை ஹசன் என்பதாகும்.

இவர் தனது ஆரம்பக்கல்வியை மருதமுனை ஸம்ஸ் வித்தியாலயத்திலும் தரம் 6,7 வகுப்பு கல்முனை அல்மனார் பாடசாலையிலும் தரம் 9,10 வகுப்புகளை கல்முனை சாஹிராக் கல்லூரியிலும் கற்றார். பின்னர் உயர்தரத்தில் கணிதபாடத்தை மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா பாடசாலையிலும் கற்றார்.

அதன் பின் உயர் கல்வியை தொடர முடியாததால் தொழில் நிமித்தம் 1980ம் ஆண்டு கொழும்பு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் எழுதுவினைஞராக சேர்ந்து கொண்டார். அங்கிருந்து 2 வருடங்களின் பின் அம்பாறை கச்சேரி, நிந்தவூர் பிரதேச செயலகம், கல்முனை பிரதேச செயலகம் போன்றவற்றில் கடமையாற்றியுள்ளார். இறுதியாக கல்முனை பிரதேச செயலகத்தில் 7 வருடங்கள் நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.

கற்கும் போதே நெசவு தொழில் கற்க ஆரம்பித்து அதனை தற்போதும் செய்து கொண்டு வருகின்றார். இவர் பாடசாலை காலங்களிலே இருந்து இலக்கிய நாட்டமுள்ளவர். பாடசாலைகளில் பயிற்சிப் புத்தகங்களுக்கு பின்னால் சிறிய கவிதைகளை எழுதும் பழக்கம் கொண்டிருந்தார். 1977ம் ஆண்டு காலப்பகுதியில் இவரது கிராமத்தில் றாசிக், இஸ்மாயில் அவர்களால் உருவாக்கப்பட்ட சங்கு எனும் கையெழுத்து பத்திரிகை வெளியிடப்பட்டது. இப் பத்திரிகையில் இவர் ஒரு மணிக்கவிதை எழுதியுள்ளார். இதுவே இவரது முதல் படைப்பாகவும் உள்ளது.

பெரும்பாலும் இவர் ஓசை நயம் கொண்ட கவிதைகளே இவர் எழுதுவது வழக்கமாகும். 1980ம் ஆண்டு தந்தை ஒரு மகனுக்கு எழுதும் கடிதம் எனும் கவிதையை தன் நண்பனுக்கு எழுதினார். இக்கவிதை டொமினிக் ஜீவாவின் மல்லிகை சஞ்சிகையில் வெளிவந்தது. பாலமுனை பாறுக், அன்புமுகைதீன் அவர்களால் இஸ்லாமிய தமிழ் எழுத்தாளர் சங்கம் அட்டாளைச்சேனை கல்லூரியில் எழுவான் கதிர்கள் எனும் புத்தகம் வெளியிடப்பட்டது. இதில் இவரது 5 கவிதையும் இவரைப் பற்றிய சிறு குறிப்பும் வெளிவந்தது.

பத்திரிகைகளுக்கு எழுதும் பழக்கமும் கொண்டிருந்தார். வீரகேசரி, தினகரன், நவமணி போன்ற பத்திரிகையில் இவரது ஒரு நினைவின் சங்கீதம், கொடூர காண்டம், ஆதார சுருதிகளை அழவைத்துப் போனவனே, மனத்தேரில் ஒரு மாதங்கம், தாயமே ஏன் அழுதாய், தயவு செய்து கூவாதே, நங்கூரமிட்ட நதி, மருதநிலா அழுகிறது, எந்த நதிக்கரையில், மீண்டும் வண்டிகள், சாந்தி நீ வருவாய் என்று போன்ற பல கவிதைகள் வெளிவந்தது.

அஷ்ரப் சிகாப்தீன் அவர்களால் வெளியிடப்பட்ட யாத்ரா எனும் சஞ்சிகையிலும் இவரது கவிதைகள் வெளிவந்தது. மருதூர் பாரி அவர்களால் உருவாக்கப்பட்ட முனைப்பு எனும் சஞ்சிகையிலும் அல் – மருதமுனை சஞ்சிகையிலும் கல்முனை பிரதேச செயலகத்தால் வெளியிட்ட முனைமலர், மருதூர் வாணர் உருவாக்கிய சமாதானம், கிழக்கு மாகாண வெளியீடான யுக்தி போன்ற சஞ்சிகைகளில் இவரது வெளியீடுகள் வெளிவந்தது.

பிரதேசத்தில் நடைபெறும் பல கவியரங்குகளில் இவர் பங்குபற்றியுள்ளார். மருதமுனை இந்திய சமாதான படையினர் குடி கொண்டிருந்த காலகட்டத்தில் இவரது சகாக்கள் இணைந்து மத்திய ஒலிபரப்பு நிலையம் ஒன்றை உருவாக்கியிருந்தார்கள். அதில் தொடர் நிகழ்ச்சியாக ஒரு காதல் கப்பல் ஏறுகிறது எனும் கவிதை மற்றும் பாடல்கள் இவரும் இணைந்து நடாத்தியுள்ளார். இவர் பிரதேச ரீதியாகவும் கலாச்சார திணைக்களத்தாலும் பாராட்டுக்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார்.