ஆளுமை:மௌனகுரு, சின்னையா
பெயர் | மௌனகுரு |
தந்தை | சின்னையா |
தாய் | முத்தம்மா |
பிறப்பு | 1943.06.09 |
ஊர் | மட்டக்களப்பு |
வகை | கலைஞர், எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
மௌனகுரு, சின்னையா (1943.06.09 - ) மட்டக்களப்பு, சீலாமுனையைச் சேர்ந்த கலைஞர், எழுத்தாளர், ஆய்வாளர். இவரது தந்தை சின்னையா; தாய் முத்தம்மா. இவர் ஆரம்பக் கல்வியை அமிர்தகழி மெதடிஸ்த மிஷன் பாடசாலை (அமிர்தகழி மகா வித்தியாலயம்), வந்தாறுமூலை மத்திய கல்லூரி ஆகியவற்றில் பயின்று, பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்றார். இவர் 1967 முதல் 1968 வரையில் வின்சென்ஸ் மகளிர் உயர்தரக் கல்லூரி, சென். மைக்கல் கல்லூரி, அரசினர் கல்லூரி ஆகியவற்றில் தொண்டராசிரியராகப் பணியாற்றி 1968 இல் அரச நியமனம் பெற்றுக் கல்முனை சாஹிரா கல்லூரி, கல்முனை உவெஸ்லி கல்லூரி, வந்தாறுமூலை மத்திய கல்லூரி ஆகியவற்றில் பணியாற்றியதுடன் 1972 முதல் 1976 வரை பாடநூல் எழுத்தாளராகவும் பணியாற்றினார். இவர் 1977 இல் யாழ்ப்பாணக் கல்வி வலயத்தில் ஆசிரிய ஆலோசகராகவும் 1981 ஆம் ஆண்டு பலாலி ஆசிரியர் கலாசாலையிலும் 1984 முதல் 1988 வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.
இவர் கல்லூரிக் காலத்திலும் பல்கலைக்கழகத்திலும் நாடகங்களிலும் சிறுகதை, கவிதை படைப்பிலும் ஈடுபட்டு வந்ததோடு, ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் நாடகங்களை எழுதி மாணவர்களைப் போட்டிகளுக்காகத் தயார்படுத்தலில் ஈடுபட்டு நாடகத்துறையில் தனது ஆற்றலை வளர்த்துக்கொண்டார். இவர் ‘இராவணேசன்’, ‘சங்காரம்’ முதலிய கூத்து நாடகங்களில் நடித்ததுடன் சாதியத்தை எதிர்த்து “கந்தன் கருணை”, “சங்காரத்தை” முதலான நாடகங்களை அரங்கேற்றியுள்ளார்.
இவர் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மொழியியற்துறை உருவாக்கத்திலும் அதன் வளர்ச்சியிலும் பங்காற்றியுள்ளார். நுண்கலைத்துறையின் தலைவராகவும் பணியாற்றியுள்ள இவர். கூத்துக்களை ஆவணப்படுத்தும் மட்டக்களப்பு கலாசாரப்பேரவையின் செயற்பாட்டிற்கு நெறியாள்கையாளராகவும் மலராசிரியராகவும் பங்களித்துள்ளார்.
இவற்றையும் பார்க்கவும்
வெளி இணைப்புக்கள்
வளங்கள்
- நூலக எண்: 13958 பக்கங்கள் 180-183
- நூலக எண்: 9548 பக்கங்கள் 03-298