ஆளுமை:மோகனசுந்தரி, பத்மநாதன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மோகனசுந்தரி பத்மநாதன்
தந்தை மார்க்கண்டு
தாய் கனகம்மா
பிறப்பு 1964.06.16
ஊர் காரைதீவு, அம்பாறை
வகை சித்த ஆயுள்வேத வைத்தியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


திருமதி. மோகனசுந்தரி பத்மநாதன் அவர்கள் அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட காரைதீவு 11ஆம் பிரிவினைச் சேர்ந்த ஓர் ஆளுமை மிக்க சித்த ஆயுள்வேத வைத்தியராக இனங்காணப்படுகின்றார். இவர் மூன்றாம் தலைமுறை வைத்தியராவார். இவர் 1964.06.16 இல் மார்க்கண்டு கனகம்மா தம்பதிகளுக்கு மகளாக காரைதீவில் பிறந்தார்.

இவர் தனது ஆரம்பக்கல்வியை காரைதீவு சண்முகா வித்தியாலயத்திலும் உயர் கல்வியை காரைதீவு விபுலானந்தா பாடசாலையிலும் பயின்றார். உயர் கல்விக்கு பின்னர் தனது தந்தையுடன் இருந்து அவருடைய மருத்துவ அறிவை படித்து கேட்டு அறிந்து வந்தார். 1984ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் உள்ள லங்கா சித்த மருத்துவ கல்லூரியில் கல்வி பயில இவருக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. அங்கு 5 வருடங்கள் டிப்ளோமா கற்கை நெறியை கற்று முடித்தார். பின் பத்மநாதன் என்பவரை திருமணம் முடித்து ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் பிள்ளைக்கு தாயானார். 2001ஆம் ஆண்டு தந்தையின் மறைவிற்கு பின்னர் இவருடைய தந்தை வழங்கிய மருத்துவசேவையை தானும் இச்சமூகத்திற்கு வழங்க ஆரம்பித்தார். அத்துடன் இவருடன் இணைந்து தந்தையிடம் கற்ற இவரது சகோதரன் மார்க்கண்டு ஜெயநாதனும் இவருக்கு உதவியாக இருக்கின்றார்.

இவர் குழந்தை நோய்கள், பெண்ணியல் நோய்கள், தோல் நோய்கள் போன்றவற்றிற்கு மிகச் சிறப்பாக சிகிச்சையளித்து வருகின்றார். அத்தோடு இவர் தனது மருத்துவத்திற்கு தேவையான மருந்துகளை தனது தலைமுறையினர் பயன்படுத்திய அதே முறையில் தாமே தயாரிக்கின்றார். அதற்கு தேவையான மூலிகைகளை தம்மைச்சுற்றியுள்ள அண்டைய பிரதேசங்களில் இருந்தே பெற்றுக் கொள்கின்றார். இம் மருந்து உற்பத்தியானது அவருடைய வீட்டிலேயே இடம்பெறுகின்றது. இதன் போது இவர் தந்தை பயன்படுத்திய அதே பழைய உபகரணங்களையே பயன்படுத்துகின்றார்.

பொதுவாக வாதசிந்தாமணி சூரணம், வேர்க்கொம்பு சூரணம், குக்கில் சூரணம், நிலவாகை சூரணம், இருமல் சூரணம், அதிமதுர சூரணம், ஜீவரண்ட்ணாதி குளிகை, தேவதாசன் குளிகை, கணையறுப்பான் குளிகை, வாதரோக எண்ணெய், கிரந்தி எண்ணெய், தேற்றான்கொட்டை எண்ணெய் போன்ற மருந்துகளை தயாரித்து சிகிச்சையளிக்கின்றார். அத்தோடு இம் மருந்துகளை உருவாக்க மிக முக்கியமானதும் மிகவும் சிக்கல் மிக்க ஒன்றான சுத்தி முறையை கையாளுகின்றார். அதாவது ஒரு மூலிகையை எடுத்துக்கொண்டால் அதன் நன்மையான செயல்கள் தரும் குணங்களையே பாவிக்க வேண்டும் ஆனால் சில மூலிகைகள் கெட்ட / விச குணங்கள் கொண்டிருக்கும் அவற்றை நீக்குவதற்காகவே இம்முறை செய்யப்படுகின்றது. இதற்குரிய முறைகளை சித்தர்கள் முன்கூட்டியே குறிப்பிட்டுள்ளார்கள். அவரால் எல்லா மூலிகைகளும் பெறப்பட்ட பின்னர் இச்சுத்தி முறையை மேற்கொண்டே மருந்துப் பொருட்களை அவர் தயார் செய்யத் தொடங்குகின்றார்.

இப்போதுள்ள காலத்தில் மக்கள் தனது உடம்பையும் உணவையும் கவனிக்க வேண்டும் அதாவது உணவே மருந்து என்று சொல்வார்கள் எனவே நாம் நமக்குரிய உணவை தேர்வு செய்து எடுக்கவேண்டும். அத்தோடு எல்லாப் பிணிகளையும் சித்தஆயுள்வேத முறையால் தீர்க்க முடியாது எனவே முடியுமானவற்றை சிகிச்சையளித்து குணப்படுத்த வேண்டும் எனவும் மற்றைய அவசர சிகிச்சைகளுக்கு அதற்கு பொருத்தமான மருத்துவரிடம் உடன் அனுப்ப வேண்டும் என்பதில் மிகவும் கவனமாகச் செயற்படுகின்றார்.

இவருக்கு 2008ஆம் ஆண்டு அம்பாறை மாவட்ட செயலகத்தினால் "திகாமடுல்ல அபிமானி" விருது வழங்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டு காரைதீவு பிரதேச செயலகத்தினால் "விபுலமணி" விருது கிடைத்தது. அதன் பின் "சாம்பஶ்ரீ தேசகீர்த்தி" எனும் விருதும் இந்தியா சித்த மருத்துவக் கல்லூரியினால் "வைத்தியஜோதி பண்டித்" எனும் விருதும் வழங்கி கெளரவிக்கப்பட்டிருக்கின்றார். அத்தோடு இவரது பரம்பரை மருத்துவ அறிவை தன்னோடு நின்றுவிடாமல் தனது மகளுக்கும் இதனை தொடர்வதற்கான வழிகளை கற்றுக்கொடுக்கின்றார். இவர் மருத்துவம் மட்டுமல்லாது பாடல் பாடுதல், நாடகம் நடித்தல், சிறுகதை எழுதுதல் போன்ற திறமைகளையும் கொண்டு விளங்குகின்றார்.