ஆளுமை:முகம்மது ஜெமீல், முஹம்மது ஆலிம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மர்ஹூம் முகம்மது ஜெமீல்
தந்தை மர்ஹூம் நூர் முகம்மது ஆலிம்
தாய் மர்ஹூமா சாரா உம்மா
பிறப்பு 1930.11.27
இறப்பு 1988.10.12
ஊர் கிண்ணியா
வகை சமூக முன்னோடி
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


இலங்கை முஸ்லிம் சமூகத்தின் முன்னோடிகளில் ஒருவராக கருதபடக் கூடியவர் இவர் ஆவார். இவர் கிண்ணியாவை வசிப்பிடமாகக் கொண்டவர்.

1930.11.27ஆம் திகதி மர்ஹூம் நூர் முகம்மது ஆலிம், மர்ஹூமா சாரா உம்மா தம்பதிகளின் புதல்வராக திருகோணமலை நகரில் இவர் பிறந்தார்.

திருகோணமலை இந்துக்கல்லூரியில் ஆங்கில மொழி மூலத்தில் கல்வி கற்றார். சம காலத்தில் தனது தந்தை நூர்முகம்மது ஆலிம், தோப்பூரைச் சேர்ந்த நூர் முகம்மது ஆலிம், அப்துல் ஸலாம் ஆலிம் ஆகியோரிடம் மார்க்கக் கல்வியும், அறபு மொழியும் கற்றார்.

இவர் தனது 24 வது வயதில் ஆசிரியர் நியமனம் பெற்றார். இந்த வகையில் திருகோணமலை நகரின் "முதல் முஸ்லிம் ஆசிரியர்" என்ற அந்தஸ்து இவருக்கு கிடைத்தது. திருகோணமலை இந்துக் கல்லூரி, கிண்ணியா மத்திய கல்லூரி, அக்குரணை குருகொடை முஸ்லிம் வித்தியாலயம் போன்ற பல பாடசாலைகளில் இவர் ஆசிரியப் பணி புரிந்துள்ளார்.

அதிபராகப் பதவி உயர்வு பெற்ற இவர் தனது முதல் அதிபர் பொறுப்பை நிலாவெளி அல் பத்தாஹ் வித்தியாலயத்தில் ஏற்று பணி புரிந்தார். பின்னர் முதலாந்தர அதிபராகப் பதவி உயர்வு பெற்ற இவர் புல்மோட்டை முஸ்லிம் மகா வித்தியாலயம், கந்தளாய் பேராறு மகா வித்தியாலயம் போன்ற பாடசாலைகளில் அதிபராகப் பணியாற்றியுள்ளார்.

தனது ஆசிரியர் சேவைக்காலத்தில் பல மாணாக்கர்களை இவர் உருவாக்கியுள்ளார். அதேபோல தனது நிர்வாகத் திறமை மூலம் பாடசாலைகளை திறம்பட முகாமை செய்து மாணவர்களின் அடைவு மட்டம் உயரவும் பெரும் பங்களிப்புச் செய்துள்ளார். மூதூர்த் தொகுதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தகவல் ஒலிபரப்பு பிரதியமைச்சருமான மர்ஹூம் ஏ. எல். அப்துல் மஜீத் இவரது பள்ளித் தோழர். இவரிடமிருந்த மார்க்க அறிவு, கல்வி ஞானம் என்பவற்றை அறிந்திருந்த மர்ஹூம் அப்துல் மஜீத் இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் தொடர் பேச்சுக்களைப் பேசும் வாய்ப்பை இவருக்கு வழங்கியிருந்தார்.

அந்த வகையில் 1972 – 1974 காலப்பகுதியில் 'இஸ்லாமியர் சென்ற இடமெல்லாம்', 'செவ்வாயில் மனித வாழ்வு சாத்தியம்', 'கவிஞர் குணங்குடி மஸ்தான்' போன்ற தலைப்புகளில் தொடர் பேச்சுக்களை வானொலி முஸ்லிம் சேவையில் நிகழ்த்தியுள்ளார். இதன் மூலம் நாடு முழுவதும் மட்டுமன்றி தென்னிந்திய முஸ்லிம்கள் மத்தியிலும் இவரது நாமம் பரவியிருந்தது.

உம்மு கபீலா இவரது வாழ்க்கை துணைவியாவார். கிண்ணியா நகரசபை முன்னாள் செயலாளர் அன்வர் உட்பட 06 ஆண்களும், 04 பெண்களுமாக இவரது பிள்ளைகள் 10 பேர். இவர்களுள் பெரும்பாலானவர்கள் அரச தொழில் புரிகின்றார்கள்.

தமிழ், சிங்களம், ஆங்கிலம், அரபு ஆகிய மொழிகளில் புலமை பெற்றிருந்த இவர், சிறந்த மேடைப் பேச்சாளராகத் திகழ்ந்தார். அக்காலத்தில் இடம்பெற்ற மீலாத் விழாக்கள் உட்பட பல பொது மேடைகளில் பேசும் வாய்ப்பு இவரைத் தேடி வந்தது. இதன் மூலம் நல்ல பல கருத்துக்கள் இவரிடமிருந்து வெளி வந்தன.

இதனால் சமூகத்தின் முன்னோடிகளுள் ஒருவராக இவர் கருதப்பட்டார். 1984 ஆம் ஆண்டு காதி நீதிபதி பதவி இவருக்கு வழங்கப்பட்டது. அப்போது திருகோணமலை மாவட்டம் முழுவதும் ஒரு காதி நீதி நிர்வாகப் பிரிவாக இருந்தது. இதனால் மாவட்டம் முழுவதும் இவர் காதி நீதிபதியாகப் பணியாற்றியுள்ளார்.

1985 ஆம் ஆண்டு கல்விப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற இவர் தனது முழு நேரத்தையும் பொதுப் பணிக்காக அர்ப்பணித்து வந்தார். 1988இல் இவர் காலமாகும் வரை காதி நீதிபதி பதவியை செவ்வனே நிறைவேற்றி வந்துள்ளார். இவரது பூத உடல் பெரிய கிண்ணியா பொது மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.