ஆளுமை:மங்களம்மாள், மாசிலாமணி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மங்களம்மாள்
தந்தை கதிரவேற்பிள்ளை
தாய் -
பிறப்பு 1884
இறப்பு 1971
ஊர் யாழ்ப்பாணம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.
MangalammalMasillamani.jpg

மங்களம்மாள், மாசிலாமணி (1884) யாழ்ப்பாணத்தில் பிறந்த பெண் பன்முகம் கொண்டஆளுமை. இலங்கையில் தமிழ்ப் பெண்கள் மத்தியில் முதன்முதல் பெண் விடுதலை தொடர்பான கருத்துகளை பத்திரிகை மூலம் எடுத்துக்கூறியவர். பெண்களின் அரசியல் சுதந்திரம் பற்றியும், சீதனவழக்கத்தை ஒழித்தல் பற்றியும் பெண்களுக்காக இவர் வெளியிட்ட "தமிழ்மகள்" பத்திரிகையில் தொடர்ந்து எழுதி வந்தார். "நாம் யார்க்கும் குடியல்லோம்" என்பது இப் பத்திரிகையின் இலட்சிய வாசகம். இவரது கணவர் மாசிலாமணி இந்தியாவில் கல்வி கற்ற முற்போக்குவாதியாவார். யாழ்ப்பாணத்தில் "தேசாபிமானி" (1915) எனும் பத்திரிகையை நடத்தி வந்தார்.

மாசிலாமணியின் ஆதரவுடன் மங்களம்மாள் 1923ஆம் ஆண்டு "தமிழ் மகள்" எனும் பத்திரிகை ஆரம்பித்தார். இப்பத்திரிகையே இலங்கையில் பெண்களுக்காக வெளிவந்த முதலாவது பத்திரிகையாகும். அதேவேளை இவரே முதலாவது பெண் பத்திரிகையாளருமாவார். இப் பத்திரிகை யாழ்ப்பாணத்திலும் சென்னையிலும் 20 ஆண்டுகள் தொடர்ந்து வெளிவந்ததாக தெரியவருகிறது. 1902ஆம் ஆண்டு "பெண்கள் சேவா சங்கம்" எனும் ஒரு நிலையத்தை யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில் தொடங்கினார். இதுவே இலங்கை பெண்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட முதலாவது சங்கம் எனக் கருதப்படுகிறது.

தேசபக்தன், இந்து சாதனம், ஈழகேசரி, Hindu Organ போன்ற பத்திரிகைகளில் இவரின் கருத்துக்களை தாங்கிய கட்டுரைகள் வெளியாகின. பெண்களுக்கு அரசியல் உரிமைகள் தேவை என்பதில் மங்களம்மாள் அசையா உறுதியுடையவாகியிருந்தார். சேர் பொன் இராமநாதன் போன்றோர் பெண்களது சமூகப் பங்களிப்பை மறுத்து பெண்களுக்கு வீடே உலகம் என்ற கருத்தை வற்புறுத்தியதற்கு மாறாக மங்களம்மாள், விவாகம் செய்யாமல் சமூகப் பணி செய்வது பற்றியும் இவர் தனது எழுத்தின் ஊடாக வலியுறுத்தினார்.

பிரித்தானிய அரசாங்கத்தால் அனுப்பப்பட்ட டொனமூர் அரசியல் சீர்திருத்த ஆனைக்குழு இலங்கைக்கு வந்து, சீர்திருத்தத்துக்கான விடயங்களை ஆராய்ந்து சர்வஜன வாக்குரிமையைச் சிபார்சு செய்ய முற்பட்டபோது, அக்காலத்திலிருந்த பழமைவாதிகளான, உழுத்துப்போன பிற்போக்குவாதிகளான தமிழ் அரசியல் தலைவர்கள். அதனைக் கடுமையாக எதிர்த்தனர். சமுதாயக் கட்டமைப்பு ஆணாதிக்கப் பிடியை விட்டுப் போய்விடக்கூடதென்பதில் இறுக்கமான அக்கறை கொண்டிருந்தனர். ‘சர்வஜன வாக்குரிமை’ என்பதை ஜனம் என்றால் அது ஆண்களுக்கு மட்டுமே பொருந்தும் பெண்னென்பவள் வெறும் ஐடப் பொருளே என்ற கருத்தை கொண்டிருந்தார்கள் போலும். பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தால் அவர்களும் சமமாக விளங்கிவிடுவார், தமது பிரபுத்துவத்தலைமை பறிபோய் விடுமென பயந்தனர். அவர்கள் கொச்சைத்தனமான வாதங்களை வெளிப்படுத்திய போது அவர்கள் வெளியிட்ட கருத்தை அதே பத்திரிகை மூலம் பெண்களுக்கு சர்வஜன வாக்குரிமை வழங்கப்படுவதினால் சமுதாயத்துக்கு ஏற்படக்கூடிய நன்மைகளை தமது ஆணித்தரமான கருத்துக்களால் நிறுவியவர் மங்களாம்மாள் மாசிலாமணி. இவர் சமூகப் பணிகளின் மூலம் மக்களை முன்னேற்ற வேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருந்தார்.

வெளி இணைப்புக்கள்