ஆளுமை:நவரத்தினம், கந்தையா
Name | நவரத்தினம் |
Pages | கந்தையா |
Birth | 1898 |
Pages | 1962 |
Place | வண்ணார்பண்ணை |
Category | எழுத்தாளர், விமர்சகர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
நவரத்தினம், கந்தையா (1898 - 1962) யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையைச் சேர்ந்த எழுத்தாளர், கலை இலக்கிய விமர்சகர். இவரது தந்தை கந்தையா. யாழ். மத்திய கல்லூரியில் பயின்ற இவர், அப்பாடசாலையில் ஏறக்குறைய வர்த்தகத்துறை ஆசிரியராக 38 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றார். இவர் யாழ்ப்பாணத்தில் கலாநிலையம் என்னும் இலக்கிய வளர்ச்சித் தாபனத்தை 1930 ஆம் ஆண்டு நிறுவி தன்னிடம் இருந்த நூல்களைக் காட்சிப்படுத்தினார். இந்நிறுவனமூடாக ஞாயிறு என்னும் செந்தமிழ்க் கலை இலக்கியத் திங்கள் வெளியீட்டினை வெளியிட்டு வந்தார்.
இவர் சைவ சித்தாந்தத்தை நன்கு பயின்று ஆராய்ந்ததோடு பதினெண் புராணங்களைப் பற்றி ஆங்கிலத்தில் தொடர்ச்சியாகக் கட்டுரைகள் எழுதியதுடன் 1943 இல் கண்டியில் நடைபெற்ற சர்வமதக் கோட்பாடுகளின் மகாநாட்டில் சைவ சித்தாந்தம் பற்றி விரிவுரை நிகழ்த்தினார். தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் நான்காவது தமிழ் விழா யாழ்ப்பாணத்தில் நடாத்தப்பட்ட போது அதன் செயலாளராகச் செயற்பட்டார். இவர் 1939 ஆம் ஆண்டு ஓவியக் கண்காட்சி ஒன்றை நடாத்தி அதில் பௌத்த, இந்து, இராஜபுத்திர ஓவியங்கள், ஓரிசா, நேபாள தேசத்து ஓவியங்களுமாக எழுபத்தொரு ஓவியங்களைக் காட்சிப்படுத்தினார். 1920 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் ஆனைப்பந்தியில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கென ஒரு பாடசாலையைச் சுவாமி விபுலானந்தருடன் இணைந்து ஆரம்பித்து நடாத்தினார்.
இவர் தென்னிந்தியச் சிற்ப வடிவங்கள், இலங்கையிற் கலை வளர்ச்சி, யாழ்ப்பாணக் கலையும் கைப்பணியும், இந்திய ஓவியங்கள், Arts and Crafts of Jaffna, Development of Art in Ceylon, Religion and Art, Tamil Element in Ceylon Culture ஆகிய கலை நூல்களையும் வீர சைவம் அல்லது இலிங்காயுதம், சிவானுபூதி செந்நெறி, Advaita Vedanta -An Introductory Study, Saiva Siddhanta, Hindu Temple Reform, Bhagavad Gita – An Introductory Study, Studies in Hinduism போன்ற சமய நூல்களையும் கணக்குப் பதிவு நூல், உயர்தரக் கணக்குப் பதிவு நூல், இக்கால வாணிப முறை போன்ற வர்த்தகத்துறை நூல்களையும் எழுதியுள்ளார்.
இவர் கலை இலக்கியச் சமூகத் துறைகளில் ஆற்றிய பணிகளைக் கௌரவித்து மேலவை, நாடாளுமன்ற உறுப்பினர் சு. நடேசபிள்ளையின் தலைமையில் நடைபெற்ற இலங்கையிற் கலைவளர்ச்சி என்னும் நூல் அறிமுக விழாவின் போது யாழ்ப்பாண மக்கள் சார்பில் "கலைப்புலவர்" என்னும் பட்டத்தை நடேசபிள்ளை வழங்கிக் கௌரவித்தார்.
Resources
- நூலக எண்: 963 பக்கங்கள் 165