ஆளுமை:ஜெகசோதி, ஏ. எம். சி.
பெயர் | ஏ.எம்.சி.ஜெகசோதி |
தந்தை | அன்ரனி குறூஸ் |
தாய் | இதயநாயகி அற்புதம் |
பிறப்பு | |
இறப்பு | - |
ஊர் | யாழ்ப்பாணம் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ஏ.எம்.சி.ஜெகசோதி, அன்ரனி தெகிவளையில் பிறந்த கலைஞர். இவரது தந்தை அன்ரனி; தாய் இதயநாயகி அற்புதம். நாடக, வில்லுப்பாட்டு கலைஞரான ஏ.எம்.சி.ஜெகசோதி,இவர் மாதகல் புனித தோமஸ் பெண்கள் பாடசாலையிலும் இளவாலை கன்னியர் மடத்திலும் பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரியிலும் இளவாளை புனித ஹென்றி அரசர் கல்லூரியிலும் தனது கல்வியைக் கற்றார். இவரின் சொந்த இடம் யாழ்ப்பாணமாக இருந்தாலும் தனது வசிப்பிடமாக தெகிவளையைக் கொண்டு வாழ்ந்து வருகிறார். சிறுவயதில் இருந்தே நகைச்சுவையாக வீட்டில் கதைத்து தனது சகோதரர்களுடன் நடிப்பதை தனது வழக்கமாகக் கொண்டிருந்த இவர் தனது சகோதரன் ஜெயபாலனே தான் இந்த நாடகத்துறைக்கு வருவதற்கு காரணமென சொல்கிறார். இவரின் சகோதரர் ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியர் ஆவார். ஜெயபாலன் 1982ஆம் ஆண்டு இறந்தது தன்னை மிகவும் பாதித்தாக சொல்லும் இவர் , 1980ஆம் ஆண்டு வானொலிக் கலைஞராக தன்னை கலைத்துறையில் இணைந்துக் கொண்டுள்ளார். ஏ.எம்.சி.ஜெகசோதி வானொலி நாடகக் கலைஞராக இருந்து மேடை நாடக கலைஞராக 1982ஆம் ஆண்டு பிரவேசித்து, 1982ஆம் ஆண்டில் தொலைக்காட்சி நாடக கலைஞராகவும் தனது பயணத்தை தொடர்ந்து வருகிறார். அத்தோடு 2004ஆம் ஆண்டு சோக்கல்லோ சண்முகம் அவர்கள் மூலமாக வில்லுப்பாட்டு கலைஞராகவும் அறிமுகப்படுத்தப்பட்டு அத்துறையிலும் தன்னை வளர்த்துக்கொண்டுள்ளார். கலைத்துறையில் பன்முகத் திறமைகளைக்கொண்ட ஜெகசோதி யாழ்ப்பாண மொழியை சரியாக உச்சரிப்பாகக் கொண்டுள்ளதால் இவரின் நகைச்சுவை நாடகங்களில் யாழ்ப்பாண வட்டார வழக்கு மிகவும் தெளிவாகவும் நகைச்சுவை உணர்வுடனும் மக்களை கவரும் வகையில் வெளிப்படுத்தி தனக்கென ஒர் இடத்தை மக்கள் மத்தியில் பெற்றுள்ளார். ஐந்து வருடங்களாக வானொலியில் ஒலிபரப்பான முகத்தார் வீடு இவரை மிகவும் பிரபலப்படுத்திய நாடகமாகும். இலங்கை மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் பெற்ற நாடகமான கோமாளிகள் நாடகமும் தான் நாடகத்துறையில் பிரபலமாக காரணமென தெரிவிக்கிறார். பெரும்பாலான தமிழ் விளம்பரங்களில் இவரின் பின்னணிக் குரலை நாம் கேட்கக்கூடியதாக இருக்கும். இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வானொலி, மேடை, தொலைக்காட்சி நாடகங்களில் ஏ.எம்.சி.ஜெகசோதி அவர்கள் நடித்துள்ளார். "அகதிச் சிறுவனுக்கு அட்மிசன்" எனும் நாடகத்தில் நடித்தமைக்காக இவருக்கு 2001-2002ஆம் ஆண்டுக்கான அரச நாடக விழாவில் சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. 2016ஆம் ஆண்டு சிறந்த வானொலி நாடகக் கலைஞருக்கான விருதையும் இவர் பெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. தனது கலைத்துறையுடன் தொடர்புடையதாக சுவிஸ்சர்லாந்து, நோர்வே, டென்மார்க், ஜேர்மன், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கும் சென்றுவந்துள்ளதாக தெரிவிக்கிறார் கலைஞர் ஏ.எம்.சி.ஜெகசோதி. இலங்கை நாடகத்துறையிலும் வில்லுப்பாட்டுத் துறையிலும் மிகவும் குறைந்தளவிலான பெண்களின் பங்களிப்பையே நாம் காணக்கூடியதாக இருக்கிறது. ஏ.எம்.சி.ஜெகசோதி இத்துறைகளில் தனக்கான தனியான இடத்தை பிடித்துள்ளார்.
குறிப்பு : மேற்படி பதிவு ஏ.எம்.சி.ஜெகசோதி அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.