ஆளுமை:சோமேசசுந்தரி, கிருஷ்ணகுமார்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சோமசுந்தரி
தந்தை அரியகுட்டி
தாய் தேவபாக்கியம்
பிறப்பு 1956.01.17
இறப்பு 2018.08.06
ஊர் மூளாய்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.
SomeesasunthariKrishnakumar.jpg

சோமேசசுந்தரி, கிருஷ்ணகுமார் (1956.01.17-2018.08.06) யாழ்ப்பாணம், மூளாயைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர். இவரது தந்தை அரியகுட்டி; தாய் தேவபாக்கியம். தனது ஆரம்பக் கல்வியை மூளாய் சைவப்பிரகாச வித்தியாலயத்திலும் உயர்கல்வியை விக்டோரியா கல்லூரியிலும் கற்றார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் (அப்போது இலங்கை பல்கலைக்கழகம் யாழ்ப்பான வளாகம்) 1974 இல் தொடங்கப்பட்டபோது அப்பல்கலைக்கழகத்தின் முதலாவது தொகுதி மாணவர்களில் ஒருவராக 1975 அனுமதிக்கப்பட்டு வரலாற்றைத் தனது விசேட பாடநெறியாக கற்றுக்கொண்டார். பேராசிரியர்களான க.கைலாசபதி, கா.இந்திரபாலா, அ.சண்முகதாஸ், சி. மௌனகுரு, மௌ.சித்ரலேகா, சீலன் கதிர்காமர் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் வளர்ந்தார். இயல்பாகவே சமத்துவம் , மனித உரிமை, பெண்ணுரிமை போன்ற கருத்துக்களில் ஈடுபாடுடைய உடைய இவருக்கு இவர்களது வழிகாட்டல் மேலும் மெருகூட்டியது. முற்போக்கான சிந்தனையும் இடதுசாரி கொள்கையும் உடையவராக காணப்பட்ட இவர் 1980 களில் பல்கலைக்கழக கல்வியை பூர்த்தி செய்து கொண்ட பின்னர் 1980 களிலேயே வரலாற்றுத்துறை விரிவுரையாளராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இணைந்துகொண்டார். இவர் தனது முது கலைமாணி பட்டத்திற்காக ‘வில்லியம் டிக்பியும் 1876-1878 ஆகிய காலத்தில் தெனிந்தியாவில் நடைபெற்ற பஞ்ச எதிர்ப்புப் போராட்டமும்’ என்ற விடயத்தின் தெரிவு செய்து ஆய்வு செய்தார் . தொடர்ந்து சிரேஷ்ட விரிவுரையாளராக 40 வருடங்களுக்கு மேலாக சேவை புரிந்தார். 1981 இல் யாழ் பல்கலைக்கழகத்தின் நூலக உதவியாளராகவும் பின்னர் பரீட்சைகள் அனுமதிகள் பகுதியின் சிரேஷ்ட உதவிப் பதிவாளருமாக பணிபுரிந்த இராசரத்தினம் கிருஷ்ணகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சேந்தன் [வைத்தியர்] பிரணவன் [மென்பொருள் பொறியியலாளர்] ஆரூரன் [வைத்தியர், சத்திர சிகிச்சை பிரிவு] அபர்ணா [விரிவுரையாளர், வவுனியா பல்கலைக்கழகம்], அஜிதா [சமூகவியல் MA மாணவி தெற்காசிய பல்கலைக் கழகம் ] என ஐந்து பிள்ளைகள் இருக்கின்றனர்.

1980 களில் உருவாக்கப்பட்ட ‘பூரணி’ அமைப்பு, ‘பெண்கள் ஆய்வு வட்டம்’ என்பவற்றின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவர். ‘பெண்ணின் குரல்’, ‘சொல்லாத செய்திகள்’ என்பவற்றின் வருகையில் முக்கிய பங்காற்றியாவர். A.J.கனகரட்னா, தயா சோமசுந்தரம், அகிலன் கதிர்காமர் போன்றோருடன் இணைந்து இன நல்லிணக்கத்திற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வந்தார். குறிப்பாக போருக்குப்பின் மீள்குடியேறிய யாழ்ப்பாண முஸ்லிம் பெண்கள் மத்தியில் நிலவிய மீள் குடியேற்றம் , நல்லிணக்கம் தொடர்பான பிரச்சினைகளை கையாள்வதற்கான குழுக்களில் அங்கம் வகித்து இயங்கிவந்தார்.

‘யாழ்ப்பாணத்தில் பத்திரிகைகள் [ 1900 - 1915 ]’ , ‘சைவ வித்தியா விருத்திச் சங்கத்தின் ஆரம்ப கால செயற்பாடுகள் - சில அவதானிப்புகள்’, ‘உலகம் பலவிதம் - திருஞான சம்பந்தப் பிள்ளை [ 1585 - 1955]’ போன்றவை அச்சில் வெளிவந்த இவரது எழுத்துக்களாகும். இதைவிட பல ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார் .