ஆளுமை:சித்தி பௌசியா, மஜீத்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சித்தி பௌசியா
தந்தை மஜீத்
தாய் நோனா மஜீத்
பிறப்பு 1950.02.08
ஊர் கம்பளை
வகை கல்வியாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சித்தி பௌசியா, மஜீத் கம்பளையில் பிறந்த கல்வியாளர் தற்பொழுது புத்தளத்தை தனது வசிப்பிடமாகக்கொண்டு வாழ்ந்து வருகிறார். இவரது தந்தை மஜீத்; தாய் நோனா மஜீத். ஆரம்ப இடைநிலை உயர்க் கல்வியை கம்பளை சென் ஜோசப் கொன்வென்டில் கற்றார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலமொழியில் கலைமாணிப்பட்டத்தை முடித்துள்ளார்.

ஆசிரியராக கம்பளை ரகுமானிய முஸ்லிம் பாடசாலையில் கடமையைப் பொறுப்பேற்று தொடர்ந்து பல பாடசாலைகளில் ஆசிரியராகக் கடமையாற்றி புத்தளம் பாத்திமா மகளிர் கல்லூரியில் அதிபராகப் பொறுப்பேற்று சுமார் 12 வருடகாலமாக அப் பாடசாலையிலேயே அதிபராக இருந்து மிகவும் பின்தங்கிய அப் பாடசாலைக்கு பெரும் சேவையாற்றியுள்ளார். அவர் கடமையாற்றிய 12 வருடமும் பெரும் சவால்களை எதிர்நோக்கினார். பெண் என்ற ரீதியில். பெண் பிள்ளைகள் கல்வி கற்பதை மறுக்கும் சமூகமைப்பை உடைத்து வெளியில் வருவதற்கு இவரின் தாயே காரணமென பெருமையாகக் கூறுகிறார். புத்தளம் பாத்திமா மகளிர் கல்லூரியில் இவருக்கு முன்னதாக பல அதிபர்கள் கடமையாற்றியுள்ளனர். இப் பாடசாலையின் சவால்களை எதிர்நோக்கி அங்கு வேலை செய்வதை தவிர்த்து பலர் விலகிச் சென்றனர் அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் சவால்களை ஏற்று இப் பாடசாலையின் அதிபராக பொறுப்பேற்றார் சித்தி பௌசியா. ஆரம்பத்தில் இப்பாடசாலையில் கலைப்பிரிவு மட்டுமே இருந்தது. இவர் அதிபராக பொறுப்பேற்றதன் பின்னரே விஞ்ஞானப்பிரிவும் வர்த்தகப் பிரிவும் இவரின் பத்து வருட நிர்வாகக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டதுடன் உயர்தர பெறுபேறுகள் 50 வீதமாக அதிகரித்தது என்கிறார். இப்பாடசாலையில் சிங்கள மொழிப்பிரிவையும் இவரே ஆரம்பித்தார்.

ஏ தரத்திலான விஞ்ஞான, மனையியல் ஆய்வுகூடங்களையும் கணினி ஆய்வுக்கூடங்களையும் இவரின் காலத்தில் உருவாக்கியுள்ளார். பேண்ட் வாத்தியகுழு ஒன்றும் இப்பாடசாலையில் உள்ளது. பேண்ட் வாத்தியக்குழுவை இப்பாடசாலை மாணவிகளைக்கொண்டே உருவாக்கியுள்ளார். பேண்ட் வாத்தியக்குழுவை உருவாக்கும் போது அடிப்படைவாதிகளின் பெரும் எதிர்ப்பிற்கும் முகம் கொடுக்க வேண்டி ஏற்பட்டதாகத் தெரிவிக்கிறார் பௌசியா. சாதாரண பாடசாலையாக இருந்த இப் பாடசாலையை முதலாம் தரப் பாடசாலையாகக் தரம் உயர்த்தியுள்ளார். பௌசியா அதிபராக இருந்த காலம் பொற்காலமென அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். முதல் தர அதிபராக இருந்து பின்னர் SLES என்ற பதவி உயர்வினை பெற்று ஓய்வுப் பெற்றார். தொழில் ரீதியான இவரின் பிரச்சினைகளை மனித உரிமைகள் ஆணையகத்தின் ஊடாகவும் நீதிமன்றம் ஊடாகவும் நீதியை பெற்று தலைநிமிர்ந்து இன்றும் தான் வசிப்பிடமாகக் கொண்ட அம் மக்களுக்கு அப்பிரதேசத்தில் இருந்து சமூக சேவையைச் செய்து வருகிறார் பௌசியா எனும் பெண் ஆளுமை.சிலாபம் கல்வி வலயத்திலும், புத்தளம் கல்வி வலயத்திலும் பிரதி கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றியுள்ளார்.


விருதுகள்

1987ஆம் ஆண்டு சிறந்த அதிபருக்கான ஜனாதிபதி விருது.


குறிப்பு : மேற்படி பதிவு சித்தி பௌசியா, மஜீத் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.

வெளி இணைப்புக்கள்