ஆளுமை:சபேசன், சபாரெத்தினம்

From நூலகம்
Name சபாரெத்தினம் சபேசன்
Pages சபாரெத்தினம்
Pages ஞானம்மா
Birth 1954.03.13
Place நற்பிட்டிமுனை, அம்பாறை
Category எழுத்தாளர், கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


சபாரெத்தினம் சபேசன் அவர்கள் அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பாண்டிருப்பு கிராமத்தில் சபாரெத்தினம் - ஞானம்மா தம்பதிகளுக்கு மகனாகப் 1954 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14 ஆந் திகதி பிறந்தார். இவருக்கு மூன்று சகோதரிகளும் ஒரு சகோதரனும் உண்டு. இவரது தந்தை ஒரு அதிபராகவும் தாய் ஒரு ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்கள். இவர் தற்போது நற்பிட்டிமுனை கிராமத்தில் வசித்து வருகின்றார்.

இவர் தனது ஆரம்பக்கல்வியை பாண்டிருப்பு இந்து மகா வித்தியாலயத்திலும் தொடர்ந்து கல்முனை கார்மேல் பாத்திமா தேசிய பாடசாலையிலும், உயர்தரக்கல்வியை மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயத்திலும் கற்றார்.

அதன் பின் இவர் தற்காலிக உப தபாலக அதிபராக கல்முனை தொடக்கம் சம்மாந்துறை வரையான தபாலகங்களில் பணியாற்றினார். பின் சம்மாந்துறையில் தேசிய வர்த்தக பயிற்சிநெறியை முடித்து அதிலிருந்து தனியார் துறையில் கொழும்பில் கணக்கு பதிவாளராக இருந்தார். பின்னர் 18 வருடங்கள் மத்திய கிழக்கு நாடான ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் பணியாற்றினார். பின் 1996 ஆம் ஆண்டு மாவட்ட செயலகத்தில் அரசாங்க காசாளராக பணியாற்றி பின் ஆரையம்பதி பிரதேச செயலகத்தில் பணியாற்றினார். இறுதியாக கல்முனை தொழில் திணைக்களத்தில் முகாமைத்துவ உதவியாளராக கடமையாற்றி 2014 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

இவருக்கு இலக்கிய ஆர்வத்தை இவரது பெற்றோர்களே ஊக்கப்படுத்தினர். தரம் 5 படிக்கும் காலத்திலே இவர் தனது முதல் பாலர் கவிதையை (கூடு கட்டத் தெரியாத குயில்) எழுதினார். ஆத்தோடு குதுகலம் எனும் பெயரில் குட்டிக்கதையும் எழுதினார். 1968 ஆம் ஆண்டு இவர் தனது முதல் கவிதையான நிகழ்கலை தினபதி எனும் பத்திரிகையில் பிரசுரமானது. இவரது முதல் சிறுகதையான செல்வியின் குற்றமா எனும் கதை சிவானந்தா வித்தியாலய ஆண்டு மலரில் வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து தினபதி, தினகரன், வீரகேசரி, ஜோதி போன்ற பத்திரிகைகளிலும் மாணிக்கம், சுடர், மல்லிகை போன்ற சஞ்சிகைகளிலும் தனது ஆக்கங்களை வெளியிட்டார்.

இக்காலப்பகுதியில் பாண்டிருப்பு இளைஞர்கள் சேர்ந்து அக்கினி கலை இலக்கிய வட்டம் எனும் மன்றத்தை உருவாக்கினர். அந்த மன்றத்தின் செயலாளராகவும் இருந்தார். அப்போது அக்கினி எனும் கையெழுத்து பிரதியை வெளியிட்டார். இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் இவரால் இயற்றப்பட்ட நாடகங்களும் ஒலிபரப்பப்பட்டுள்ளன. அதில் கிராமிய சஞ்சிகை எனும் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். மெல்லிசைப் பாடலும் எழுதி அது இசையமைக்கப்பட்டு அக்காலத்தில் ஒலிபரப்பப்பட்டுள்ளன.

கல்முனையில் இவர் நண்பர்களோடு சேர்ந்து புதுமோடிகள் எனும் நாடக அமைப்பை உருவாக்கி அதன் மூலம் சகானம் எனும் நாடகம் மேடையேற்றப்பட்டது. 1970களின் முற்பகுதியில் யாழில் இருந்து வெளியான ஈழநாடு பத்திரிகையின் மட்டக்களப்பு நிருபராக செயற்பட்டார். பாண்டிருப்பை மையமாகக் கொண்டு கதிர்ப்பு எனும் சமூக அமைப்பை உருவாக்கி அதன் மூலம் சமூக செயற்பாடுகளை மேற்கொண்டார். 2001 ஆம் ஆண்டு தமிழ்த்தினப் போட்டிக்கு இவர் உருவாக்கி பெரிய நீலாவணை விஷ்ணு மகா வித்தியாலய மாணவர்களால் பாடப்பட்ட வில்லுப்பாட்டு அகில இலங்கை போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டது.

2018 வெளியிடப்பட்ட கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா சிறப்பு மலரில் இவர் எழுதிய தரணி புகழ் கொண்ட தமிழ் எனும் கவிதை வெளிவந்ததுடன் 2017 பாண்டிருப்பில் பொங்கல் கவியரங்கில் தமிழ்ப் பொங்கல் தரணியெல்லாம் ஓங்கட்டும் எனும் கவிதை வெளிவந்தது. அத்துடன் எழுதி வைத்துக் கொள்ளுங்கள் கவிதையும் வெளிவந்தது. இருக்கை, கிரீடம், புறங்கூடல், நெருக்குதல், பிரியாவிடை, வியாபித்திருத்தல், புதிய பிரான்களும் பழைய ஏற்பாடுகளும், பொட்டல் வெளி, நாற்காலிப் பத்து, சாவடிகள், சங்கல்பம், போன்ற கவிதைகள் வீரகேசரி பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளன. படுவான்கரை பொங்கலும் லண்டன் கிறிஸ்மஸும், சலனச் சாரல், என் நினைவின் தேவதையே, பிரம்மபுரம், பண்டா அய்யா போன்ற சிறுகதைகள் வீரகேசரி பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளது.

இவர் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இருந்த போது அங்குள்ள தமிழர்களோடு சேர்ந்து தமிழர் கலாச்சார அமைப்பை உருவாக்கி பல நிகழ்ச்சிகள் கருத்தரங்குகள் போன்றன செய்தார். அங்கு நடைபெற்ற கவிதைப் போட்டியில் முதலிடம் பெற்றார். அத்தோடு அங்கு தமிழர் நற்பணி மன்றம் சார்பாக கவிஞர் வைரமுத்துவுடனான பேட்டியொன்றை இவர் நிகழ்த்தியிருந்தார். இவர் 2017 ஆம் ஆண்டு கல்முனை பிரதேச செயலக கலாசார பேரவை விருது, 2018 ஆம் ஆண்டு பாண்டிருப்பு மறுமலர்ச்சி சனசமூக நிலைய நினைவுசின்னம், 2014 ஆம் ஆண்டு நற்பிட்டிமுனை பழைய மாணவர் அமைப்பால் நினைவுசின்னம், 2017 ஆம் ஆண்டு இலங்கை கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தினால் பாராட்டும், 1989 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் சார்ஜா தமிழர் நற்பணி மன்றத்தின் பாடகருக்கான சான்றிதழ் போன்ற விருதுகள், பாராட்டுக்கள் மற்றும் சான்றிதழ்களையும் பெற்றுள்ளார்.