ஆளுமை:சண்முகநாதன், வேலுப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வேலுப்பிள்ளை சண்முகநாதன்
தந்தை வேலுப்பிள்ளை
தாய் மாரிமுத்து
பிறப்பு 1942.12.17
இறப்பு 2020.09.17
ஊர் பாண்டிருப்பு, அம்பாறை
வகை எழுத்தாளர்
புனை பெயர் முகில்வண்ணன்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


வேலுப்பிள்ளை சண்முகநாதன் அவர்கள் கிழக்கிலங்கை அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகரின் பாண்டிருப்பை சேர்ந்த வேலுப்பிள்ளை மற்றும் மாரிமுத்து தம்பதியினருக்கு ஆறாவது மகனாக 1942 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆந் திகதி பிறந்தார். இவரது வீட்டுப் பெயர் கணேஷ், பிரதான புனைபெயர் முகில்வண்ணன். இவருடன் உடன்பிறந்தவர்கள் ஒரு சகோதரனும் ஏழு சகோதரிகளும் ஆகும்.

இவர் ஆரம்பக்கல்வியை பாண்டிருப்பு மெதடிஸ்த மிஷன் கலவன் பாடசாலையிலும் இடைநிலைக் கல்வியை கல்முனை கார்மேல் பாற்றிமா தேசிய பாடசாலையிலும் , பின் விவசாய பயிற்சியை கரடியனாறு விவசாயப் பாடசாலையிலும் கற்றார். அதன் பின் ஒரு வருடம் தொழிற் கல்விக்காக இரத்மலானை, மற்றும் கொழும்பில் பல்வேறு இடங்களிலும் கற்றார்.

இவர் பாண்டிருப்பைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை கண்மணி என்பவரை 1966 இல் வாழ்க்கைத் துணைவியாக்கி மூன்று பிள்ளைகளைப் பெற்றார். மகள் ரோகிணி, மகன்கள் பிரேம்நந்தகுமார், சரேன்நந்தகுமார் ஆகும். தற்போது இவர்கள் மூவரும் லண்டன், பிரான்ஸ் ஆகிய புலம்பெயர் நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.

இவர் 1959இல் 17 ஆவது வயதில் எழுத்துலகில் பிரவேசித்தார். இவரது முதல் கதையானது கல்முனை கார்மேல் பாத்திமா கல்லூரியால் வெளியிடப்பட்ட பத்திரிகையில் இடம்பெற்றிருந்தது. மேலும் தமது பாடசாலைக் காலத்தில் ஆம்பல் எனும் கையெழுத்து பத்திரிகையினையும் வெளியிட்டு இலக்கிய துறையில் ஆர்வமுள்ள மாணவனாக முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளார். தேசிய பத்திரிகையில் 1961இல் தினகரன் மூலம் அறிமுகமானார். மழலைப்புலவர் எனும் பெயரில் சிறுவர் விடயங்களை எழுதி வந்தார்.

இவர் எழுதிய விடயங்களாக சிறுகதை, கவிதை, கட்டுரை (சமயம், இலக்கியம், அறிவியல்) , நாவல், குறுநாவல், மெல்லிசைப் பாடல்கள், சிறுவர் சிறுகதைகள், பயணக் கட்டுரைகள், வரலாறு, மொழிபெயர்ப்பு என்பவற்றைக் குறிப்பிடலாம். இவர் பொது வேலைகள் திணைக்களத்தில் தொழிநுட்பவியலாளராக பணியாற்றினார். 1982இல் வேலையை விட்டு விலக வேண்டி ஏற்பட்டது. அப்போது சவுதி அரேபியாவுக்கு மதிப்பீட்டாளராகச் சென்றார். பின் திரும்பி வந்து கல்முனை சர்வோதயத்தில் திட்ட இணைப்பாளராக வேலை செய்தார். பின்னர் சுனாமியின் பின்னரான வேலைத்திட்டத்தில் பொறியியலாளராகச் சேர்ந்து கொழும்பு லேடன் கம்பனியில் சில வருடங்கள் பணியாற்றினார்.

இவர் மேலும் தேசிய வீடமைப்பு அதிகாரசபையில் தொழில் நுட்ப ஆலோசகர், கல்முனை மனித உரிமை சமாதான நீதவான் மன்றத்தில் உதவிப் பணிப்பாளர், பாண்டிருப்பு சிக்கனக் கடன் வழங்கும் கூட்டுறவு சங்கத்தில் தலைவர், கல்முனை தமிழ் சங்கத்தின் தலைவர், கல்முனை நாவலர் கோட்டத்தின் இணைப்பாளர், பாண்டிருப்பு ஶ்ரீ திரெளபதி அம்மன் ஆலயம் மற்றும் மாணிக்கப் பிள்ளையார் ஆலய தலைவர், கண்டி கிழக்குக் காரியாலய மலையக கலை கலாச்சார சங்கத்தின் செயலாளர், அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர்கள் மேம்பாட்டுப் பேரவையின் பொருளாளர், கல்முனை நெற் இணையதளத்தின் இயக்குனர்சபையின் ஆலோசகர் போன்ற பதவிகளை வகித்துள்ளார்.

இவர் தினகரன் பத்திரிகையில் எழுத ஆரம்பித்து பின் வீரகேசரி, சிந்தாமணி, தினபதி, சூடாமணி, மித்திரன், தினமுரசு, நவமணி, தினந்தந்தி, சுதந்திரன், சுடர், செங்கதிர் போன்ற பத்திரிகைகளிலும் இவரது ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. திருவாசகம், கந்தசஷ்டி போன்ற தமிழ் நூல்களை மொழிபெயர்த்து சிங்களத்தில் எழுதியுள்ளார். இதற்கு இந்துசமய கலாச்சார திணைக்களத்தினால் யாழ்ப்பாணத்தில் 2016இல் நடாத்திய ஶ்ரீலஶ்ரீ ஆறுமுகநாவலர் மாநாட்டில் வைத்து பாராட்டி கெளரவிக்கப்பட்டார்.

இன்றைய நல்ல நாளுக்கான சிந்தனைகள், இறைவன் - எனக்கும் இனியவன், ஆதி தேவி ஜெகதாம்பா சரஸ்வதி, ஆத்மாவின் இறக்கைகள், ஆன்மீக வெற்றிக்கதைகள், இறத்தலும் இறப்பும், இராஜயோக தியான பாடத்திட்டம் போன்ற நூல்கள் இவரின் மொழிபெயர்ப்பில் இடம்பெற்ற நூல்களாகும். அவள் ஒரு தமிழ்ப்பெண், ஆனந்தக் கண்ணீர், இனியும் நான் இரான் தான், செல்லக்கிளி, முருகனருள், ஶ்ரீ திரெளபதி அம்மன் ஆலய வரலாறு, எழுத்துலகில் 50 ஆண்டுகள் பொன்விழா மலர், நீறு பூத்த நெருப்பு, இராசாத்தி, நம்பினோர் கெடுவதில்லை போன்ற நூல்கள் இது வரை வெளிவந்த நூல்களாகும்.

தொடராக வெளிவந்த ஆக்கங்களாக தினகரனில் 1985இல் பளிங்கு மாளிகை, 1986இல் நினைத்தது ஒன்று, 1990இல் செல்லக்கிளி, 2012இல் இளவரசன் போன்ற நாவல்களாகும். அத்தோடு 1968,1969 இல் ராதா பத்திரிகையில் சிங்கராஜா, மணற்கோலம் எனும் நாவல்களும் தொடராக வெளிவந்தது. 1998இல் நவமணியிலும் சிந்தாமணியிலும் அஞ்ஞாதவாசம், சவுதி அரேபியாவில் ஒரு சஞ்ஞாரம் எனும் படைப்புகளும் வெளிவந்தன. இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் இவரது ஏழு ஈழத்துப் பாடல்கள் மெல்லிசைப் பாடல்களும் சிறுவர் மலரில் சிறுவர்கள் பாடல்கள், கதைகள் ஒலிபரப்பாகியுள்ளது.

2011 ஆம் ஆண்டு 27 ஆவது அரச கலாபூசணம் விருது அரச கலாச்சார அமைச்சினாலும் இந்து கலாச்சார திணைக்களத்தினாலும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டதுடன் அகில இன நல்லுறவு ஒன்றியம் சாமஶ்ரீ தேசமான்ய என்னும் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். இவ்வாறு 60 ஆண்டுகள் இலக்கியத் துறைக்காக அர்ப்பணித்த இவர் 17.09.2020 அன்று காலமானார்.