ஆளுமை:கண்ணப்பர்
பெயர் | கண்ணப்பர் |
பிறப்பு | |
ஊர் | தம்பிலுவில் |
வகை | கவிஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கண்ணப்பர் அல்லது கட்டாடி கண்ணப்பர், அம்பாறை மாவட்டம், தம்பிலுவில்லைச் சேர்ந்த கவிஞர். பொ.பி 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர், "தம்பிலுவில் மழைக்காவியம்" எனும் கிராமிய இலக்கியத்தை உருவாக்கியவர். மழைக்காவியம் என்ற பெயரில், மழை வேண்டி இரந்து பாடும் அமைப்பில் பல பாடல்கள் கிழக்கிலங்கையில் தோன்றியுள்ளன. இவற்றில் சில தமிழ்ச்சைவ மரபிலும், சில இஸ்லாமியத் தமி்ழ் மரபிலும் உருவாகியுள்ளன. கட்டாடி கண்ணப்பரே இந்த மழைக்காவிய மரபை முதலாவதாகத் தோற்றுவித்தவராகக் கருதப்படுகிறார்.
இவரது கவி பாடும் ஆற்றலை அல்லது இப்பாடலின் உள்ளடக்கத்தை வியந்து "தம்பிலுவில் பிராமணப் பெடியன் பாடியது" என்றே மழைக்காவியத்தை கிழக்கிலங்கையில் குறிப்பிட்டிருக்கிறார்கள். எனினும், அப்பாடலிலேயே இவர் தன் பெயரை "கட்டாடி கண்ணப்பன்" என்று குறிப்பிட்டுள்ளதால் இவர் கட்டாடியார் (அம்மன் கோயில் பூசகர், மட்டக்களப்பு வழக்கு) என்றே கொள்ளமுடியும். இறுதிப்பாடலில் இவர் ராஜசிங்கனுக்கு வாழி பாடுகிறார். கண்டி மன்னன் இரண்டாம் இராஜசிங்கனுக்கு கிழக்கிலங்கையுடன் இருந்த உறவும், அவன் காலத்தில் ஏற்பட்ட கொடும் பஞ்சமும் நினைவுகூரப்படுவதால், இந்த ராஜசிங்கன் இரண்டாம் இராஜசிங்கன் என்பதும் (1629 - 1687), கண்ணப்பர் இவன் காலத்தில் வாழ்ந்தவர் என்பதும் பெறப்படுகின்றது.
வளங்கள்
- நூலக எண்: 2469 பக்கங்கள் 188-189