ஆளுமை:இரவிச்சந்திரக் குருக்கள், சோமஸ்கந்த குருக்கள்

From நூலகம்
Name வேதாகமமாமணி சிவஸ்ரீ சோ. இரவிச்சந்திரக் குருக்கள்
Pages சோமஸ்கந்த குருக்கள்
Pages இராஜலட்சுமி
Birth 1956.08.30
Pages -
Place திருக்கோணமலை
Category ஆலய பிரதான குரு
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


திருகோணமலை நகரில் சோமஸ்கந்த குருக்கள் ஐயா, இராஜலட்சுமி அம்மா தம்பதியினருக்கு 30.08.1956 ஆம் ஆண்டில் பிறந்தார். திருகோணமலை இந்துக் கல்லூரியில் கல்வியை பெற்றுக் கொண்டவர். தனது தந்தையாரை அடியொற்றி பத்திரகாளி அம்பாளுக்கு தொண்டராகி பூசை வழிபாடுகளைச் செய்யலானார்.

ஆதிபராசக்தியின் தொண்டனாகி, அருள்மிகு பத்திரகாளி அம்பாள் ஆலய ஆதீனகர்த்தாவும், பிரதம குருவுமாகிய சிவஸ்ரீ சோ. இரவிச்சந்திரக் குருக்கள் ஐயா அவர்கள் திருக்கோணமலை நகரில் மிகவும் புகழ் பெற்ற பத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் பல புனருத்தாரணங்களைச் செய்து, ராஜகோபுரம் உள்ளிட்ட பல திருப்பணி வேலைகளையும் எந்தவொரு குறைவுமில்லாது நிறைவேற்றி, 1980, 2001, 2017, 2021 ஆகிய ஆண்டுகளில் மகா கும்பாபிசேக நிகழ்வுகளையும் நடாத்தியதோடு மட்டுமல்லாமல், திருக்கோணமலை மாவட்டத்தில் ஒரு கலைக் கோயிலாகவும் மாற்றியுள்ளார்.

அலஸ்தோட்டம், நித்தியபுரி, சண்முக வித்தியாலயம், சாம்பல்தீவு மகாவித்தியாலயம் போன்ற இடங்களில் பாடசாலை மாணவர்களுக்காக அறநெறிப் பாடசாலைகளை ஒழுங்கமைத்து உதவிகள் செய்து வருவதோடு மட்டுமல்லாது, வறுமைக்குட்பட்ட மாணவர்கள் பலரின் கல்விக்கான உதவிகளையும் எந்தவித வெளிக்காட்டலுமில்லாமல் ஐயா நிறைவேற்றி வருவது எமது சைவ ஆலயங்களுக்கெல்லாம் முன்னோடி எனலாம்.

இறைபணிச்செம்மல் காந்தி ஐயா, தொண்டர் ஐயா, சுவாமி தந்திரதேவா, சைவப்புலவர் வடிவேல் ஐயா போன்ற பல சைவப் பெரியார்களுடன் நேரடியான ஆத்மார்த்த தொடர்பை இரவிச்சந்திரக் குருக்கள் ஐயா அவர்கள் வைத்திருந்தார். இப் பெரியார்களின் சமய சமூகத் தொண்டுகளில் தானும் முக்கிய பங்காளராக மாறி தன்னாலியன்ற சேவைகளை சமூக மேம்பாட்டுக்காக ஆற்றியிருந்தமையை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

இது பற்றிக் காந்தி ஐயா அவர்கள் "திருக்கோணமலை மாவட்டத்தில் குருக்கள் ஐயா" என்று பேரன்போடும் பெரு மதிப்போடும் சாதி, மத பேதமின்றி அழைக்கப்படுபவர் எங்கள் குருக்கள் ஐயா அவர்களே. அவர் நோய்வாய்ப்பட்ட போதிலும் இறையருளால் நோயைப் பொருட்படுத்தாது திருவருள் துணையோடு சமய சமூகப் பணிகளைப் பெருமனதோடும் மன உறுதியுடனும் தூரமும் பாராது அழைக்குமிடம் எல்லாம் சென்று சமய சமூகப் பணிகளைச் செய்து வருகிறார்.

திருக்கோணமலை நகர பத்திரகாளிகோயில் மட்டுமல்லாது சனீஸ்வரன் கோயில், பாலம்போட்டாறு பத்தினியம்மன் கோயில் போன்றவற்றின் ஆதீனகர்த்தாவாகவும் செயல்படும் குருக்கள் ஐயா, கடந்த காலங்களில் வன்செயலினால் பாதிக்கப்பட்ட பணவசதி குறைந்த பல கிராமத்து கோயில்களின் கும்பாபிசேக கிரியைகளை சுயநலன் கருதாது நிறைவேற்றிக் கொடுத்து இம் மண்ணில் ஆத்மீக எழுச்சியினை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று திருக்கோணமலை மாவட்டத்தில் மட்டுமல்லாது அதற்கு அப்பாலும் சைவ மக்களினதும், சைவப் பெரியார்களினதும் ஆத்மீக ரீதியிலான சந்தேகங்களை தெளிவுபடுத்தும் முக்கியமான நபராகவும் விளங்குகின்றார். தன்னுடைய அதிகாரத்துக்குட்பட்ட அருள்மிகு பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானத்தில் பூசைகள், வீதியுலா, திருவிழாக்கள், பிரசங்கங்கள் போன்றவற்றை உரிய நேரத்தில் தொடக்கி குறிப்பிட்ட வேளையில் ஒழுங்காக முடித்து வைப்பவர் என மக்கனால் போற்றப்படுபவராகவும் விளங்குவது சிறப்பு. அத்தோடு மந்திரம், கிரியை, பாவனை மூன்றிலும் சிறப்பு மிக்கவராகவும் கருதப்படுகிறார்.

இளைஞர் அருள்நெறி மன்றத்தின் விழாக்களும், அவ் விழாக்களுக்கு வருகை தரும் பேரருட் பெரியார்களும் அருள்மிகு பத்திகாளி அம்பாள் ஆலயத்திலிருந்தே கொடி, குடை, குஞ்சம், ஆலவட்டங்களுடன் முத்துக்குமாரசுவாமி கோயிலடிக்கு அழைத்து வரப்படும் அன்றை நிகழ்வை எண்ணிப் பார்க்கும் போது இன்றும் பெருகுகிறது. இவ்வாறு நிகழ்வுகளை தனது தொழிலுக்கு அப்பால் இரவிச்சந்திரக் குருக்கள் ஐயா ஊக்குவித்தும், தேவையான ஒத்துழைப்புகளை வழங்கியும் வருகின்றமையை நாம் அறியக்கூடியதாவுள்ளது.

இவருடைய தந்தையாரும், அன்றைய ஆதீனகர்த்தாவுமாகிய பிரம்மஸ்ரீ சு. சோமாஸ்கந்த குருக்கள் அவர்களின் தலைமையில் அன்பர்களினால் பூசை அல்லாத காலங்களில் ஆலய வீதியில் கூடும் அன்பர்கள் பயனடைய வேண்டும் என்ற நல்ல நோக்கத்துக்காக 1947.05.01 ஆம் திகதி “சக்தி நிலையம்” உருவாக்கப்பட்டது. பக்தியுடன் சேர்த்து அறிவை வளர்க்கு முகமாக பத்திரிகைகள், சஞ்சிகைகள் போன்றவற்றை இந்நிலையத்தில் வாசிக்கலாம். இன்று 75 ஆண்டுகளைக் கடந்தும் இந்நிலையம் இரவிச்சந்திரக் குருக்கள் ஐயா அவர்களின் தலைமையிலும் வழிகாட்டலிலும் இயங்கி வருவது போற்றத்தக்கது.

அதுமட்டுமல்லாது சமய நிகழ்வுகள், பெரியார் கௌரவிப்பு நிகழ்வுகள், நூல் வெளியீடுகள் போன்றவற்றிற்கு எதுவித எதிர்பார்ப்புகளுமில்லாது ஆலய வளாகத்து மண்டபங்களை வழங்கி அதனை ஊக்குவிக்கும் செயற்பாட்டாளராகவும், பேரிடர் காலத்தில் (மழை வெள்ளம், கொரோனா நோய்த் தொற்று) உணவுப் பொதிகள், நிதியுதவிகளை வழங்கும் பரோபகாரியாகவும் விளங்குகின்றார். விளம்பரம் இல்லது பல சமூக நற்பணிகள் செய்துவரும் குருக்கள் ஐயாவும் அவரது நிர்வாகத்தின் கீழுள்ள பத்திரகாளி அம்பாள் ஆலயமும் திருக்கோணமலைக்கான அடையாளங்களாகும் என்றால் அது மிகையல்ல. இதற்காக 2020 ஆம் ஆண்டு புத்தசாசனம், கலாசாரம், மதவிவகார அமைச்சினதும் பிரதம மந்திரியினதும், இந்துமத விவகார இணைப்புச் செயலாளரால் கௌரவிக்கப்பட்டு நினைவுச்சின்னம் வழங்கப்பட்டது;

இவருடைய சைவசமயப் பணியைப் பாராட்டி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக இந்துநாகரிகத் துறை 2017ஆம் ஆண்டு நினைவுச்சின்னம் வழங்கி கௌரவித்திருந்தது.

மேலும் திருமுருக கிருபானந்த வாரியாரினால் "வேதாகமமாமணி” என்ற பட்டமும், சமூக சேவைகளுக்காக சர்வதேச ஊடக கல்லூரியினால் 2018 ஆம் ஆண்டு "தேசகீர்த்தி", மனித உரிமை அமைப்பினால் 2019 ஆம் ஆண்டு "தேசமானிய” போன்ற விருதுகளும் வழங்கி கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.