ஆளுமை: சிவயோகவல்லி ஐயாத்துரை
பெயர் | சிவயோகவல்லி |
தந்தை | ஐயாத்துரை |
தாய் | மனோன்மணி |
பிறப்பு | 1936.09.28 |
இறப்பு | -- |
ஊர் | யாழ்ப்பாணம் |
வகை | ஆசிரியர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சிவயோகவல்லி ஜயாத்துரை 1936.09.28 ஆம் ஆண்டு சைவ மணம் கமழும் யாழ் நகர் வண்ணார்பண்ணையில் நீராவியடி என்னும் இடத்தில் பிறந்தார். இவரது தந்தை கந்தவனம் ஐயாத்துரை, தாயார் மனோன்மணி அம்மை ஆவார். சிவயோகசுவாமிகளின் அன்பு நினைவாக சிவயோகவல்லி என்னும் பெயர் வழங்கப்பட்டது. சிவயோகசுவாமிகளின் அருட்சின்னமாகப் பெற்றோர் குழந்தையை எண்ணினர். அக்குழந்தையை செல்லமாக அனைவருமே சிவம் என்று அழைத்தார்கள். பெயருக்கு ஏற்ப குழந்தையும் சிவமயமாகவே விளங்கியது.
தனது இளமைக் காலத்தில் யாழ் இந்துமகளிர் கல்லூரியிலும், வேம்படி மகளிர் கல்லூரியிலும் கல்வி கற்றார். கல்வியைத் தொடர்ந்து பெற விரும்பி தென்னிந்தியா லேடிடோக் காலேஜில் பிரவேச வகுப்பில் (P.U.C.) கல்வி கற்றார். பின்னர் சென்னையிலுள்ள இராணி மேரி காலேஜில் BA பட்டதாரி விசேடமாக தமிழ் மொழியைத் தேர்ந்து தமிழ் விசேடப் பட்டதாரியாக வெளியேறினார். அவரது தமிழ் அறிவு சமய அறிவு இங்கு விசேடமாகக் குறிப்பிடவேண்டிய தொன்றாகும். பின்னர் இலங்கை வந்ததும் சிவம் முதன்முதலாக உடுப்பிட்டி மகளிர் கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற்றினார். மலைநாட்டிலுள்ள அழகாபுரியாகிய நுவரெலியாப் பிரதேசத்தில் தமிழ் வளர்க்கச் சென்றார். அங்கிருந்து மீண்டும் யாழ்நகர் வந்து திருநெல்வேலி முத்துதம்பி வித்தியாலயம். மானிப்பாய் மெமோரியல் கல்லூரி, சுன்னாகம் இராமநாதன் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் பணியாற்றினார்.
இதனால் பலவிதமான சூழலில் பல்வேறு தரமான மாணவர்களையும், ஆசிரியகுழாத்தையும் புரிந்து கொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிட்டியது. சிவம் க.பொ.த. சாதாரண வகுப்புகளிலும். க.பொ.த. உயர்தர வகுப்புகளிலும் தமிழ், சமயம், இந்துநாகரிகம் ஆகிய பாடநெறிகளை மிகவும் திறம்படக் கற்பித்து அதிபர், ஆசிரியர்கள், மாணவர்களது அன்பையும் மதிப்பையும் பெற்றவர் சிவம் தனது வாழ்நாளைக் கல்விப் பணிக்கும் சமயத் தொண்டிற்கும் அர்ப்பணித்தார். அவரது தாம்பத்திய வாழ்க்கை தோன்றி மறைந்ததாக ஆகிவிட்டது. அவர் தமிழ்த் தொண்டு சிவத்தொண்டுக்கெனப் பிறந்தவர். அதனால் போலும் அவ்விதமாயிற்று. சிவத்திற்கு அருமை பெருமை வாய்ந்த சகோரர்கள் இருந்தார்கள். பேராசிரியராக இருந்தவர்: திரு கருணானந்தன், சட்ட நிபுணராக விளங்குபவர் இளைப்பாறிய நீதிமான் திரு சிவானந்தன், சிறப்பு மிக்க சகோதரிகள் திருமதி பத்மாவதி ஜெயசீலன், காலஞ்சென்ற திருமதி லீலாவதி பாலசிங்கம், இராமநாதன் கல்லூரி உதவி அதிபராக இருந்து இளைப்பாறிய திருமதி. அங்கையற்கண்ணி சிவப்பிரகாசபிள்ளை, இந்துமகளிர் கல்லூரி (கொழும்பு) ஆசிரியையாகக் கடமையாற்றிய திருமதி திலகவதி விஜயரத்தினம் ஆகியோர்.
சிவத்தின் காயார் 1975ல் காலமானதும். சிவம் அவரது சகோதரி அங்கையற்கண்ணியுடன் 1992ஆம் ஆண்டு வரை இருந்தார். பின்னர் தனது சேவையிலிருந்து இளைப்பாறியதும் சென்னையிலிருந்த சகோதரன் சிவானந்தத்துடன் இருந்தார். பின்னர் மீண்டும் இலங்கைவந்து சகோதரி அங்கையற்கண்ணியுடன் மருதனார் மடத்தில் இருந்தார். இக்காலங்களில் அவர் சிறிது நோயுற்றிருந்த போதிலும் தனது கஷ்டத்தைத் தாங்கிக் கொண்டார். வந்தது நம் மண்ணில் போர்! அது யாரைத்தான் வீட்டுவைத்தது. புலம்பெயரும் படலம் ஆரம்பித்தது. அப்பொழுது 1993இல் இருந்து 1995 வரை அவர் சகோதரி அங்கையற்கண்ணியாரின் மகன் சிவகரனுடன் கோப்பாய், சாவகச்சேரி ஆகிய இடங்களில் போரின் மத்தியில் பயப்பாட்டுடன் காலத்தைக் கழிக்க நேர்ந்தது. மிகுந்த கஷ்டங்களின் மத்தியில் யாழிலிருந்து 1996ஆம் ஆண்டு கொழும்பு வரக்கூடியதாக இருந்தது. கொழும்பில் இறுதி மூச்சு விடும்வரை (1998 சித்திரை 29ஆம் தித்தி அவரது சகோதரி லீலாவதி பாலசிங்கத்துடன் இருந்தார். ஆனால் துரதிஷ்டவசமாக சகோதரி லீலா முன்பு செல்ல அவர் பின் நகர்ந்தார். சித்திரை மாதம் 29ஆம் நாள் ரோகினி நட்சத்திரத்தில் காலை 3.20 மணிக்கு அவர் சிவபதம் அடைந்தார்.