நிறுவனம்:திரு/ கோட்டடி ஆதி முனீசுவரர் கோயில்
பெயர் | கோட்டடி ஆதி முனீசுவரர் கோயில் |
வகை | இந்து ஆலயங்கள் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | திருகோணமலை |
ஊர் | திருகோணமலை |
முகவரி | கோட்டடி ஆதி முனீசுவரர் கோயில், திருகோணமலை |
தொலைபேசி | - |
மின்னஞ்சல் | - |
வலைத்தளம் | - |
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை நகரில் அமைந்துள்ள ஒரு முனீசுவரர் கோயில் இதுவாகும். இக்கோயில் திருகோணமலை நீதிமன்றத் தொகுதிக்கு அண்மையில் நாற்சந்தியைப் பார்த்த வண்ணம் மேற்கு நோக்கிக் காட்சி தருகின்றது.
குளக்கோட்டு மன்னன் திருக்கோணேஸ்வரப் பெருமானுக்கு திருப்பணி செய்யும் வேளை திருக்கோணேஸ்வர மூர்த்திக்கு காவலுக்கென திருமலையின் ஏழு இடங்களில் ஏழு முனிகளை நிறுத்தியதாக சொல்லப்படுகின்றது. அவ் ஏழு முனிகளுள் வெளிப்பட்டு நின்று அடியாரைக் காத்து வருபவராக கோட்டடிப் பதியில் அமர்ந்திருக்கும் கோட்டடி முனீசுவரர் திகழ்கின்றார்.
ஆதியில் பெரும் ஆல விருட்சம் ஒன்று இப்பகுதியில் இருந்ததாகவும், இதிலே முனியப்பர் வாசம் செய்ததாகவும் இரவு வேளைகளில் மதுவெறியில் அல்லது தனியாக வருவோர், தீய எண்ணங்களுடன் வருவோர் போன்றோரை இவ்வழியால் செல்ல விடாது மிகவும் துன்புறுத்தியதாகவும், இதனால் தாங்கள் இவருக்கு அஞ்சி சாராயம், சுருட்டு என்பவற்றை வைத்து வழிபட்டதாகவும் இப்பகுதிக்கு அண்மையிலுள்ள "நாகராஜா வளவு" மக்கள் குறிப்பிடுவர். இதே வழக்கத்தில் இன்றும் இவர்கள் தங்கள் விஷேட காலங்களில் குறிப்பாக குழந்தை பிறந்தவுடன், நேர்த்தி நிறைவேறியவுடன் ஆலயத்திற்கு வந்து தங்கள் முறையில் சாராயம் வைத்தும், சுருட்டு வைத்தும் வழிபடுவர். ஆனால் ஆலயத்தினுள் இவையெவையும் எடுக்கப்படுவதில்லை. ஆலயத்தின் வெளிப்புறமுள்ள வேம்பின் அடியில் சிறு பீடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது இதன் கீழ் வைத்தே இவர்களது வழிபாடு இடம்பெறும்.
தயாநிதி என்பவரது முயற்சியினாலேயே வெறும் கல் மாத்திரம் வணங்கப்பட்ட நிலைமாறி கட்டடம் ஒன்று அமைக்கப்பட்டது. ஆலயம் வீதியின் புறத்திலும், நீதிமன்ற கட்டடத் தொகுதியின் அருகாமையிலும் அமைந்துள்ளமையினால் ஆலயத்திற்கெனத் தனியானதொரு அசையாத நிலம் இல்லை. ஆயினும், கருவறை மாத்திரம் கொண்டதாக முன்புறத்தில் சிறிய அளவினால் தகரத்தினால் கொட்டகை போன்றும் அமைக்கப்பட்டு அடியார்கள் நின்று வழிபட ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
ஆலயத்தின் மூலமூர்த்தி சுயம்புருவ மூர்த்தியாகும். தனிக் கருங்கல்லினால் ஆனதாக தட்டையான சிவலிங்க வடிவில் அமையப்பெற்றுள்ளது. இம் மூர்த்திக்கு வெள்ளியினால் அங்கி அமைத்து வைத்து வழிபாடு இயற்றப்பெறுகின்றது. பஞ்சலோகத்தினால் ஆன எழுந்தருளி மூர்த்தி "புலி வாகனம்" ஏறியவராக அமைக்கப்பெற்று அவரும் இடவசதி இன்மையினால் கருவறையினுள்ளேயே வைக்கப்பட்டுள்ளார்.
வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளிலும், பூரணை தினங்களிலும் மாலைவேளையில் பெருமானுக்கு பூசைகள் இடம்பெறுகிறது. சித்திரா பௌர்ணமி நாளன்று தீர்த்தம் (குளிர்த்திப் பூசை) நடைபெறுவதாக முன்வரும் 6 நாட்களுக்கு அலங்கார உற்சவம் வெகு சிறப்பாக நடைபெறுவது வழமை. தவிர, இந்து சிறப்பு காலங்களில் சிறப்பு பூசைகளும் இடம்பெறுகிறது.
ஆலயத்திற்கென தனியானதொரு வருமானம் எதுவும் இல்லை. காணிக்கை உண்டியல் மூலம் வரும் நிதியும், அர்ச்சனைகள், திருவிழா உபயங்கள் என்பவற்றிற்கு வருகின்ற நிதியுதவிகள் மூலமே ஆலய செலவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆலயத்தின் இளைஞர்கள் சிலர் வெளிநாடுகளில் (மத்திய கிழக்கு நாடுகளில்) இருந்து தம்மால் இயன்றபோது சிறுதொகைகளை வழங்குகின்றனர்.