ஆளுமை: சிவசண்முகராஜா, சேது மாதவர்

நூலகம் இல் இருந்து
Thanujah (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 21:28, 3 டிசம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சேது மாதவர்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சேது மாதவர் சிவசண்முகராஜா
தந்தை சேது மாதவர்
தாய் மீனாட்சியம்மா
பிறப்பு 1959.05.11
ஊர் யாழ்ப்பாணம்
வகை வைத்தியர், எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


சேது மாதவர் சிவசண்முகராஜா அவர்கள் யாழ்ப்பாணம் கந்தரோடையில் 1959.05.11 இல் சேது மாதவர் மற்றும் மீனாட்சியம்மா தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவர் ஒரு வைத்தியர், உளவியலாளர், விரிவுரையாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார்.

இவர் தனது சிறுவயதை கந்தரோடையில் கழித்ததுடன், ஆரம்பக்கல்வியை கந்தரோடை தமிழ்க் கந்தையா வித்தியாலயத்திலும் இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியிலும் கற்றார். மேற்கல்வியை (இளநிலை மருத்துவம் மற்றும் அறுவையியல் அல்லது BSMS ) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சித்த மருத்துவ துறையில் கற்று தேர்ந்தார். அத்துடன் உளவியல் துறையிலும் தேர்ச்சி பெற்றவர் ஆவார். தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் வைத்திய கலாநிதி பட்டத்தையும் பெற்றுக் கொண்டார்.

சிவசண்முகராஜா அவர்கள் கைதடி போதனா வைத்தியசாலையில் 1992 - 2001 சித்திரை மாதம் வரையான காலப்பகுதியில் வைத்திய அதிகாரியாக கடமையாற்றியுள்ளார். அதன் பிறகு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சித்த மருத்துவ துறையில் 2001ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து தற்போது வரை சிரேஷ்ட விரிவுரையாளராக கடமையாற்றுகின்றார்.

இவர் எழுதுவதில் மிகுந்த ஆர்வமுடையவர். அதாவது பல சித்த வைத்தியம், சார்ந்த புத்தகங்கள்,சமூகம் சார்ந்த புத்தகங்கள் மற்றும் சமயம் சார்ந்த புத்தகங்கள், உளவியல் தொடர்பான புத்தகங்கள் என ஐம்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.

அவற்றினுள் சித்த வைத்தியம் தொடர்பான நூல்களில் "இருபதாம் நூற்றாண்டில் ஈழத்துச் சித்த மருத்துவம்" (2000), "ஈழத்துச் சித்த மருத்துவ நூல்கள் - ஓர் அறிமுகம்" (1993), "சுதேச மருத்துவ மூலிகைக் கையகராதி" (1997), "கட்டு வைத்தியம்" (2000), "பிள்ளைப் பிணி மருத்துவம் கை நூல்" (2001), "சித்த மருந்தியலும் மருந்தாக்கவியலும்" (2001), "சித்த மருத்துவ மூலதத்துவம்" (2002), "யாழ்ப்பாண மக்களின் சைவ உணவுப் பழக்க வழக்கங்கள்", "மூலிகைகள் ஓர் அறிமுகம்" (2003), "மூலிகை உணவு மருத்துவம்" (2004), "யோகாசனமும் உடல்நலமும்" (2004), "சித்த மருத்துவ மகப்பேற்றியலும் மகளிர் மருத்துவமும்" ( 2009), "மூலிகைத் திறவுகோல்" (2008), குழந்தை உணவு, இந்து ஆலயங்களில் மருத்துவ சுகாதாரம், மருத்துவமும் சோதிடமும், இந்து விரதங்களும் உடல்நலமும், மருத்துவ நோக்கில் மரணக்கிரியைகள், தமிழர் வாழ்வில் குழந்தைகள் நலம், சித்தமருத்துவ சிறப்புச்சிகிச்சை முறைகள், Common Drugs in Siddha Pediatrics, Piniyari Muraimai போன்றன காணப்படுகின்றன. காலத்தை வென்று நிற்கும் கந்தரோடை என்ற ஊர் சார்ந்த நூல் ஒன்றையும் எழுதியுள்ளார்.

மேலும் சமயம் சார்ந்த நூல்களில், "இந்து திருமணச் சடங்குகள்", "ஈழத்து சிவப்பிராமணர்கள்" (2014), "ஸ்ரீசக்கர பூஜை" மற்றும் "தென்னிந்தியத் திருத்தல யாத்திரை" (2008) போன்ற நூல்கள் முக்கியமானவை. உளவியல் சார்ந்த நூல்களில் "உள நெருக்கீடுகளும் மனநலனும்", " இலக்கியத்தில் போர் உளநெருக்கீடுகளும் மனநலனும் – ஒரு மருத்துவக் கண்ணோட்டம்" என்பன குறிப்பிடத்தக்கவையாகும்.

இவர் பன்முக ஆளுமை உள்ள நபராக காணப்படுகிறார். குறிப்பாக இலங்கையின் வட பகுதியில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் பணியாற்றும் நிபுணத்துவம் பெற்றவர்.அவரது கல்வித் தேவைகளுக்கு மேலதிகமாக, அவர் சமூகம் சார்ந்த மனநல முயற்சிகள் மற்றும் போருக்குப் பின்னரான நல்லிணக்கத்திற்கான முயற்சிகளிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். போரினால் பாதிக்கப்படும் மக்கள் எதிர்கொள்ளும் மனநல சவால்களை தீர்த்து வைப்பதில் சிவசண்முகராஜா அவர்களின் பணி குறிப்பிடத்தக்கதாகும்.

அரச சாகித்திய மண்டல விருது, கொழும்பு தமிழ்ச்சங்க விருது, அரச கரும மொழித் திணைக்கள விருது, வடகிழக்கு மாகாண சபையின் உயர்கல்விக்கான விருது, இலங்கை இலக்கியப் பேரவையின் விருது என்பன இவர் எழுதிய நூல்களுக்கு கிடைத்த விருதுகளாகும்.