ஆளுமை:சித்திரவேலாயுதன், கஜரத்தினம்

நூலகம் இல் இருந்து
Thanujah (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 21:28, 25 நவம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=கஜரத்தினம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கஜரத்தினம் சித்திரவேலாயுதன்
தந்தை கஜரத்தினம்
தாய் இலட்சுமிபிள்ளை
பிறப்பு 1946.07.25
ஊர் திருகோணமலை
வகை பல்துறை ஆளுமையாளர்
புனை பெயர் நிலவூர் சித்திரவேல்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


கஜரத்தினம் சித்திரவேலாயுதன் அவர்கள் திருகோணமலையின் பழமை பொருந்திய நிலாவெளி கிராமத்தில் 1946.07.25ஆம் திகதி கஜரத்தினம், இலட்சுமிபிள்ளை தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவருக்கு இரண்டு ஆண் சகோதரர்களும், இரண்டு பெண் சகோதரிகளும் உள்ளனர். இவர் தனது ஆரம்பக் கல்வியை நிலாவெளி மெதடிஸ்த மிசன் தமிழ் கலவன் பாடசாலையில் கற்றார். அதனைத் தொடர்ந்து தனது உயர்கல்வியை பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியில் கற்றார்.

பின்னர் இலங்கை மின்சார திணைக்களத்தில் அலுவலக முகாமைத்துவ உதவியாளராக பணியில் இணைந்து, கொழும்பில் தலைமை காரியாலயத்தில் பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து உதவி ஆசிரியர் நியமனத்தில் திருகோணமலை பெருந்தெரு மெதடிஸ்த மிஷன் தமிழ் கலவன் பாடசாலையில் ஆசிரியராக பணியில் இணைந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து நிலாவெளி, கும்புறுபிட்டி, கோபாலபுரம் என திருகோணமலையின் பல்வேறுபட்ட பிரதேசங்களில் பணியாற்றினார்.

இவரது தந்தையார் திருகோணமலை நிலாவெளியின் முக்கிய ஆளுமையாவார். இவர் நிலாவெளி மெதடிஸ்த மிஷன் தமிழ் கலவன் பாடசாலையில் அதிபராகப் பணியாற்றியதுடன், கிராம மட்டத்திலும் முக்கியத்துவம் வாய்ந்தவராகக் காணப்பட்டார். நிலாவெளி சித்தி விநாயகர் ஆலயத்தின் மூன்று கும்பாபிஷேகங்களின் போது தலைவராக பணியாற்றியிருந்தார்.

கஜரத்தினம் சித்திரவேலாயுதன் தனது ஆசிரியர் பணியில் தொடர்ந்து வெளிவாரி பயிற்சி ஊடாக 1973 ஆம் ஆண்டு பயிற்றப்பட்ட ஆசிரியராக தரம் உயர்த்தப்பட்டார். 1977 ஆம் ஆண்டு இவருக்கு திருமணம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 1981 ஆம் ஆண்டு திருகோணமலை இந்து கல்லூரியில் ஆசிரியர் பணியில் இணைந்து, சுமார் 10 ஆண்டுகள் பணியாற்றினார். இவர் ஆங்கில மொழி மற்றும் ஏனைய பாடங்களையும் கற்பிக்கக் கூடிய ஆசிரியராக திகழ்ந்தார். இவர் இந்த கால காலப்பகுதியில் GALT திட்டம் ஊடாக பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மாணவர்களுக்கு ஆங்கில மொழி கற்பிக்கும் பணியினை மேற்கொண்டார்.

பின்னர் 1991 ஆம் ஆண்டு ஆங்கில பாடத்திற்கான ஆசிரிய ஆலோசகராக திருகோணமலை கல்வி வலயத்தில் பணியாற்றினார். 1996 ஆம் ஆண்டு கலைமகள் வித்தியாலயத்தில் உதவி அதிபராக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தும், அதனை ஏற்றுக்கொள்ளாமல் ஆசிரியர் ஆலோசகராகவே தொடர்ந்து பணியில் இருந்தார். பின்னர் குறிப்பிட்ட காலம் கலைமகள் பாடசாலையின் உதவி அதிபராக பணியாற்றிய பின், கல்வி அமைச்சின் செயலாளர் அழைப்பின் பெயரில் உதவிப் பணிப்பாளர் (ஆங்கிலம்) பணியில் இணைந்தார். சுமார் ஒரு வருடங்கள் குறித்த பதவியில் பணியாற்றிய பின் தனது 60வது வயதில் ஓய்வை பெற்றுக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து EHED Caritas நிறுவனத்தில் சுமார் ஒன்றரை வருடங்கள் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றினார். இவர் தனது சேவை காலப்பகுதியில் தொலைக்கல்வி செயற்திட்டங்களிலும், MDTU ஊடாகவும், இலங்கை திறந்த பல்கலைக்கழகத்திலும், தொழில்நுட்ப கல்லூரியிலும், உயர் தொழில்நுட்ப கல்லூரி ஊடாகவும் ஆங்கில மொழி தொடர்பான பல்வேறு பணிகளை மேற்கொண்டார்.

மேலும் இவர் கவிதை, சிறுகதை, கட்டுரை என பல்வேறுபட்ட ஆக்கங்களை சிந்தாமணி, தினகரன், சிறுகதை மஞ்சரி, ஞானம் போன்ற சஞ்சிகைகளுக்கு எழுதி வந்தார். மேலும் இலங்கை வானொலியால் நடத்தப்பட்ட வானொலி நிகழ்வுகளிலும் கலந்து கொண்டார். இவர் இலக்கிய ஆர்வலர்களால் "நிலவூர் சித்திரவேல்" என்ற பெயரில் அறியப்பட்டிருந்தார். இவர் கந்தபுராணம் முற்றோதல், கந்தபுராணம் ஓதுதல் போன்றவற்றில் சிறப்புற காணப்பட்டதுடன், இன்றும் தொடர்ந்து தனது சமயப் பணிகளை மேற்கொண்டு வருகின்றார்.