நிறுவனம்:திரு/ பாலையூற்று தூய வின்சன் டி போல் சபை
பெயர் | பாலையூற்று தூய வின்சன் டி போல் சபை |
வகை | கிறிஸ்தவ ஆலயங்கள் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | திருகோணமலை |
ஊர் | பாலையூற்று |
முகவரி | பாலையூற்று, திருகோணமலை |
தொலைபேசி | - |
மின்னஞ்சல் | - |
வலைத்தளம் | - |
திருகோணமலையில் பாலையூற்று தூய வின்சன் டி போல் சபையானது 2017ம் ஆண்டு பொன்விழாவைக் கொண்டாடியது. இதன் ஆரம்ப நிகழ்வாக 2017 புதுவருட நள்ளிரவு திருப்பலியின் போது சபை ஆரம்பிக்கப்பட்டதன் 50வது வருட ஜூபிலி பிரகடனப்பட்டது.
கத்தோலிக்க திருச்சபை பணியில் ஆர்வம் கொண்ட அங்கத்தவர்களின் அர்ப்பணத்தோடும், பங்குத்தந்தையர்களின் ஆன்மீக வழிகாட்டுதலோடும், சுயமாக செயற்படுகின்ற பொதுநிலையினர் சபையாகிய இத் தருமசபை ஸ்தாபிக்கப்பட்டு இயங்கி வருகின்றது.
பாலையூற்றில் தூய வின்சன் டி போல் சபை 1967ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. 1965ல் பாலையூற்று தனிப்பங்காகிய நிலையில் பங்குப் பணிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்ட முதல் பங்குக் குருவாகிய அருட்பணி சைமன் பெர்ணான்டோ அடிகளாரது அனுமதியுடன் திருகோணமலை தூய மரியன்னை பேராலயப் பங்கினைச் சேர்ந்த சகோ. பெனடிக்ட் எனும் ஆசிரியர் ஒருவர் மேற்கொண்ட முயற்சியே பாலையூற்றில் அன்பின் சேவை மலர வளர மிளிரவும் அடிகோலியது.
'ஏழைகளுக்கு உதவுதல்' என்ற பிரதான நோக்கம் கொண்டு 1833ம் ஆண்டில் பிரான்ஸ் தேசத்தின் பாரிஸ் நகரில் பிரெட்றிக் ஓசானம் எனும் இளைஞனால் ஸ்தாபிக்கப்பட்ட இச் சபையின் ஆரம்ப கால அடிச் சுவட்டைப் பின்பற்றியதாக பாலையூற்றில் இரக்கச்சிந்தை கொண்டவர்களாய் முதலாவது நிருவாகத்தில் தம்மை இணைத்துக் கொண்ட சகோதரர்களான G. அம்புறோஸ், டெஸ்மன்ட் குமாரசுவாமி, அன்ரன் யோன்சன், S. O. ஞானபிரகாசம், R. C. யோசப், உபால்டோ பெரேரா ஆகியோர் ஞாயிறு தினங்களில் வீடு வீடாக சென்று பணம், அரிசி போன்றவற்றை மக்களிடம் இருந்து பெற்று இல்லாதவருக்கு உதவும் தருமப் பணியை ஆரம்பித்தனர்.
அத்துடன் கரோல் நிகழ்ச்சி, என்பிலப் நிதி சேகரிப்பில் ஈடுபட்டு அதன் மூலம் நத்தார் புதுவருட பண்டிகைக் காலத்தில் வறியவர்களும் மகிழ்ந்துண்டு களிப்புற புத்தாடைகள் உணவுப் பொட்டலங்களையும் பகிர்ந்தளித்து வந்தனர்.
1972 - 1983 காலப்பகுதிகளில் ஆண், பெண் எனும் இரு பால் அங்கத்தவர்களும் தமது உடலை வருத்தி கடினமான காரிய செயற்பாட்டின் மூலம் நிதிசேகரிக்கும் பணியை முன்னெடுத்தனர். குறிப்பாக விறகு வெட்டி விற்பனை செய்தல், யாத்திரிகள் நலன் கருதி கழிவறைக் குழிகள் வெட்டி மலசல கூடம் அமைத்தல், ஆலயத் திருவிழாவையொட்டி சிற்றுண்டிச்சாலை நடத்துதல், திருமறை பொருள் விற்பனை செய்தல் எனும் பணிகளால் வறிய குடும்பங்களின் அத்தியாவசியத் தேவைகள் பல நிறைவேற்றப்பட பெரும் வாய்ப்பாகியது.
ஓலைக் குடிசைகளில் வாழ்ந்து வந்த வறிய குடும்பங்களுக்கு கிடுகுகள் அன்பளிப்புச் செய்ததோடு பலரது வீட்டுக் கூரைகளை தாமாகவே வேய்ந்து கொடுத்த பணி பலரும் மெச்சக் கூடிய செயல்பாடாக அமைந்திருந்தது. மேலும் இளவயதினருக்கு தையல் பயிற்சி நிலையமும், மாணவர்களுக்கு இலவச மாலைநேர வகுப்புகளும், வருமானம் குறைந்தோருக்கு சுய தொழில் மேம்பாட்டுக்கான உதவிகள் என அன்புச் சேவைகள் தொடர்ந்தன.
இதன் பின்னர் வந்த நிருவாகத்தினரும் தமது வசதி வாய்ப்பிற்கேற்ப பல வழிகளில் நிதி வசூலிப்பு செய்தனர். இணைக்கப்பட்ட நாடுகள், தேசிய சபை மற்றும், சபையின் நிதி நன்கொடையாளர் வழங்கும் நிதியினைக் கொண்டு மாணவர் புலமைப் பரிசில் நிதி உதவி, இயற்கை அனர்த்த பாதிப்பு நிவாரண நிதி உதவி, இடம் பெயர்ந்தோருக்கு நிதி, மற்றும் நிவாரணம் பொருட்கள் பகிர்ந்தளிப்பு, இரக்கத்தின் ஆண்டு வீட்டுத் திட்டம் என்பவற்றைச் செயல்படுத்தி ஆன்மீக இயக்குனர்கள், பங்கு மக்களது பாராட்டுக்களையும் பெற்றுக்கொண்டனர்.
வீடுகளில் வைத்தியசாலைகளில் நோயாளர்களைத் தரிசித்தல், சத்துணவு, மருந்து கையளித்தல், வயோதிபர், முதியோரை சந்தித்து மகிழ்வித்தல், வசதியற்றவர்களது மரணச்சடங்குகளுக்கு உதவுதல் என்று பணிகள் பல இன்றும் தொடர்ந்த வண்ணமே உள்ளன.