ஆளுமை:அருள்பாஸ்கரன், அருளானந்தம்

நூலகம் இல் இருந்து
Thanujah (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:58, 27 அக்டோபர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=அருளானந்தம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அருளானந்தம் அருள்பாஸ்கரன்
தந்தை அருளானந்தம்
தாய் லுர்து மேரி
பிறப்பு 1960.10.06
இறப்பு 2019.07.30
ஊர் திருகோணமலை
வகை கலைத்துறை சார் ஆளுமை
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


திருகோணமலையை சேர்ந்த கலைத்துறை சார் ஆளுமை இவராவார். நாடறிந்த ஓவியராகவும், ஆசிரியராகவும் பணிபுரிந்தவர்.இவர் ஆலங்கேணியைச் சேர்ந்த ச. அருளானந்தம், லுர்து மேரி ஆகியோருக்கு மூத்த மகனாக 1960.10.06 இல் பிறந்தார்.

திருகோணமலை புனித வளனார் வித்தியாலயம், கொழும்பு விபுலாநந்தா கல்லூரி, வந்தாறுமூலை மத்திய கல்லூரி, திருகோணமலை இந்துக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றார். குண்டகசாலை விவசாயக் கல்லூரியில் விவசாய டிப்ளோமா பட்டம் பெற்று விவசாய ஆசிரியராக கொழும்பு இந்துக் கல்லூரியில் கற்பித்தல் பணியை ஆரம்பித்தார். பலாலி ஆசிரியர் கலாசாலையில் ஆசிரியர்ப் பயிற்சியை நிறைவு செய்தார். ஆசிரியர் பயிற்சியின் பின் கொழும்பு விபுலாநந்தா கல்லூரி, திருகோணமலை இந்துக் கல்லூரி, திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரி ஆகியவற்றில் கற்பித்தார்.

பின்னர் தெங்கு அபிவிருத்தி அலுவலர், விவசாயப் போதனாசிரியர் ஆகிய பதவிகள் இவருக்கு கிடைத்தன. எனினும் ஆசிரியர்ப் பணியே இவருக்கு விருப்பமாக இருந்ததால் அப்பதவிகளை இவர் ஏற்கவில்லை. தொடர்ச்சியாக ஆசிரியராக பணியாற்றினார். பாடசாலைக் காலம் முதல் வாழ்வின் இறுதி வரை ஓவியத்தில் மிகுந்த ஈடுபாடுடன் காணப்பட்டார். உயிரோட்டமுள்ள ஓவியங்கள் வரைந்து வரலாற்றில் இடம்பிடித்தவர். ஒருவரைப் பார்த்து அப்படியே தத்ரூபமாக வரையும் ஆற்றல் இவரிடம் நிறைந்திருந்தது.

வடக்கு கிழக்கு மாகாண தமிழ் மொழித் தினப்போட்டி, அகில இலங்கை தமிழ் மொழித் தினப்போட்டி ஆகியவற்றின் இணைப்பாளராக திறம்படப் பணியாற்றியுள்ளார். திருகோணமலை சிறுவர் சித்திரக் கலைக் கூடத்தின் ஸ்தாபகர் இவர் ஆவார். இதன் மூலம் பல மாணவர்களுக்கு ஓவியத்தில் சிறந்த வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார். பல்கலைக்கழக நுண்கலைப் பீடத்திற்கு பல மாணவர்கள் செல்ல வழி அமைத்தார்.

பட்டப்பின் கல்வி டிப்ளோமா பாடநெறியின் சித்திரப் பாட வளவாளராகப் பணியாற்றியுள்ளார். அதேபோல கிழக்குப் பல்கலைக்கழக முன்பள்ளி பாடநெறியின் வருகைதரு விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார். வடக்கு கிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரிய பயிற்சிநெறி வளவாளராகவும், பல்வேறு அரச சார்பற்ற நிறுவனங்களின் முன்பள்ளி வளவாளராகவும் செயற்பட்டுள்ளார்.

அதேபோல பல மாணவர்கள் மாவட்ட மற்றும் தேசிய மட்ட சித்திரப் போட்டிகளில் வெற்றிபெற வழிகாட்டினார். இன, மத பேதங்களுக்கப்பால் சிறந்த மாணவர் சமூகத்தை தன்வசம் வைத்திருந்தார். கொழும்பு கலாபவனத்தில் இரண்டு முறை ஓவியக் கண்காட்சி நடத்தியுள்ளார். திருகோணமலையில் பல கண்காட்சிகளை நடத்தியுள்ளார். இவற்றின் மூலம் பலரது பாராட்டைப் பெற்றார். பல புத்தகங்களுக்கு அழகிய அட்டைப் படங்களை வரைந்துள்ளார்.

இதற்கு மேலதிகமாக கவிதை, சிறுகதை, நாவல், நாடகம் எனப் பல்துறை ஆற்றல் மிக்கவர் இவர். "உதவும் உள்ளங்கள்" என்ற சிறுவர் நாவல் இவர் வெளியிட்ட நூலாகும். இது தேசிய நூலக அபிவிருத்திச்சபை பரிசு பெற்றது. அதேபோல கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் சிறந்த நூலாகவும் தேர்வு செய்யப்பட்டது.

இவர் விளையாட்டிலும் மிகுந்த ஆர்வம் மிக்கவர். உதைபந்தாட்ட வீரனான இவர் பலரை உதைபந்தாட்டத்தில் பயிற்றுவித்துள்ளார். அமைதியான போக்குடையவர். சிறந்த பண்பாளர். பொறுப்புகளை ஏற்று திறம்பட செய்து முடிப்பவர். சிரித்த முகத்தோடு எல்லோருடனும் அன்புடன் உரையாடுபவர்.

இவரது வாழ்க்கைத் துணைவி நிர்மலாதேவி. அருள்ரதீபன், அருள்நிரூசன் , அருள் சுலஷிகா ஆகியோர் இவரது பிள்ளைகள்.

இவர் தனது 58 வது வயதில் 2019.07.30 இல் காலமானார். எனினும் அவரது கலைகள், மாணவர்கள் இன்றும் அவரைப் பறைசாற்றுகின்றனர். அவரது நற்பண்புகள் அவரது மாணாக்கர் ஊடாக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.