ஆளுமை:முகைதீன், ஏ. எம்.

நூலகம் இல் இருந்து
Thanujah (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:36, 23 செப்டம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=ஜனாப் அபூசா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஜனாப் அபூசாலிகு மீரா முகைதீன்
தந்தை அபூசாலிகு
தாய் -
பிறப்பு 1951.01.10
ஊர் திருகோணமலை
வகை எழுத்தாளர், கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


அபூசாலிகு மீரா முகைதீன் அவர்கள் 1951.01.10 இல் மூதூரில் பிறந்தவர். மூதூர் மத்திய கல்லூரி, திருகோணமலை இந்துக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றவர்.

1970யில் தினபதிப் பத்திரிகையில் வெளியான 'தியாகிகளின் வரிசையில்' என்ற சிறுகதை மூலம் இலக்கிய உலகுக்கு அறிமுகமானார். மூதூர் முகைதீன், தொன்மையூர்க் கவிராயர், மாவலி மைந்தன் என்பன இவரது புனைப் பெயர்கள். இருப்பினும் "மூதூர் முகைதீன்" என்ற புனை பெயர் மூலமே பெரிதும் அறியப்பட்டவர்.

சுமார் 50 வருடங்களாக எழுத்துத் துறையில் வலம் வருகின்றார். கவிதை, உருவகக்கதை, பாடலாக்கம், விமர்சனம், இலக்கியக் கட்டுரை என்பன இவரது இலக்கியப் படைப்புகள். இவரது ஆக்கங்கள் தினகரன், சிந்தாமணி, வீரகேசரி போன்ற பத்திரிகைளிலும், கதம்பம், மாணிக்கம், சிரித்திரன், மல்லிகை போன்ற சஞ்சிகைகளிலும் வெளிந்துள்ளன.

முத்து (1976) , பிட்டும் தேங்காய்ப்பூவும் (1997), இழந்து விட்ட இன்பங்கள் (2003), ஒரு காலம் இருந்தது (2010), ஒரு வானில் இருநிலவுகள் (2018) என்பன இவரது கவிதை நூல்களாகும். ஆசிரியர் பணியை அழகுறச் செய்வோம் (2005) என்பது ஆசிரியர்களுக்காக இவரால் எழுதப்பட்ட கட்டுரை நூல். இவற்றை விட அபோதம் (2016) என்ற உருவகக் கதைத்தொகுதியும், கனாக்கண்டேன் (2020), என்ற பெயரிலான மெல்லிசைப் பாடல்கள் தொகுதியும் ,சங்கமம் (2021) கவிதை தொகுப்பும், கடலோரப் பாதை (2021) சிறுகதை தொகுதியும் , வண்டில் மாமா (2023) சிறுவர் பாடல்கள் நூலும் இவரது ஏனைய படைப்புகளாகும்.

முத்து என்ற இவரது கவிதைத் தொகுப்பு 1976 இல் வெளியானது. இலங்கையில் கவிதைத் தொகுப்புகள் வெளிவந்த ஆரம்ப காலம் அது என்ற வகையில் அத்தொகுப்பு வரலாற்றுப் பதிவாக மாறியுள்ளது.

இவர் ஆசிரியராகக் கடமை புரிந்த பாடசாலைகளில் கையெழுத்துச் சஞ்சிகைகளை உருவாக்கி மாணவர்களின் இலக்கிய ஆற்றலை வெளிக் கொணர்ந்திருக்கின்றார். இந்த வழிகாட்டல் மூலம் இலக்கிய உலகில் பிரவேசித்தோர் பலர்.

ஓசை என்கின்ற காலாண்டு கவிதைச் சிற்றிதழின் சொந்தக்காரர் இவர். இதுவரை ஓசையின் 28 இதழ்கள் வெளிவந்துள்ளன. உள்நாட்டு யுத்தத்தினால் மூதூர் வெகுவாகப் பாதிக்கப்பட்ட சந்தர்ப்பங்களிலும், காலம் தப்பினாலும் ஓசை வெளிவந்தமை குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய விடயமாகும்.

பல்வேறு இலக்கியப் போட்டிகளில் பங்கு பற்றி இவர் பரிசுகள் பெற்றுள்ளார். மாகாண மட்ட 3 போட்டிகளில் இவரது ஆக்கங்கள் பரிசு பெற்றுள்ளன. அதேபோல தேசிய மட்டப் போட்டிகள் 18 இல் இவர் பரிசு பெற்றுள்ளார். 2017 இல் அவுஸ்திரேலிய வானமுதம் இலக்கிய அமைப்பு நடத்திய சர்வதேச ரீதியிலான கவிதைப் போட்டியில் முதலாம் பரிசு பெற்றுள்ளார். மூதூர்ப் பிரதேச சாகித்திய விழா, மூதூர் வலயக்கல்வி அலுவலக தமிழ்மொழித் தினவிழா, திருகோணமலை மாவட்ட நூலக அபிவிருத்திச் சபையின் வாசிப்பு மாத நிகழ்வு ஆகியவற்றில் இவர் கௌரவிக்கப்பட்டுள்ளார். மூதூர் சமூக கலை இலக்கிய ஆர்வலர் அமைப்பினால் 'கவிச்சுடர்' பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

2011 நவம்பர் மாத 'மல்லிகை' சஞ்சிகை இவரது புகைப்படத்தை அட்டைப்படமாகப் பிரசுரித்து இவரைக் கௌரவித்தது. கலாசார அலுவல்கள் திணைக்களம் 2007 இல் இவருக்கு கலாபூஷணம் விருது வழங்கியது. 2008 இல் அகில இலங்கை சமாதானப் பேரவை தேசகீர்த்தி விருது வழங்கியது. இதே ஆண்டு அகில இலங்கை இன நல்லுறவு ஒன்றியம் சாமஸ்ரீ காவிய ஜோதி விருது வழங்கியது.

கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் 2011 இல் இவருக்கு முதலமைச்சர் விருது வழங்கியது. 2012 இல் அகில இலங்கை தேசிய கவிஞர் சம்மேளனம் காவிய சுவர்ண விருது வழங்கியது. இவை இவரது இலக்கியப் பங்களிப்புகளுக்காக கிடைக்கப்பெற்ற விருதுகளாகும்.

வெலிகம ரிம்ஸா முஹம்மத் தனது கற்கை நெறியொன்றுக்காக இவரது கவிதைகள் தொடர்பான ஆய்வினை மேற்கொண்டார். அது 'விடியல்' என்ற பெயரில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இது இவரது காத்திரமான இலக்கியப் படைப்புகளுக்கு கிடைத்த பெருங் கௌரவமாகும்.

இவரது கவிதைகளில் எளிமைத் தன்மையைக் காணலாம். இதனால் எவரும் படித்து இலகுவில் அதன் ஆழத்தைப் புரிந்து கொள்ள முடியும். சமூகங்களிடையேயான பிளவுகளும், மனித அவலங்களும் இவரைப் பெரிதும் வாட்டியது. இவற்றைக் கருப்பொருளாக வைத்து கவிதைகள் பல வடித்துள்ளார். இதன் மூலம் சமூக ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

இலக்கியம் என்பது காலக்கண்ணாடி என்பதை மெய்ப்பிக்கும் வகையில் இவரது ஆக்கங்கள் பல அமைந்துள்ளன. எதிர்கால சந்ததியினர் சமகால சமூக அமைப்பை விளங்கிக் கொள்ளும் வகையில் அவை அமைந்துள்ளமை சிறப்பம்சமாகும்.

இனிமையாகப் பழகக் கூடியவர் இவர். வயதில் மூத்தவராயினும் இளையோருடனும் மரியாதையாக நடந்து கொள்ளும் தன்மை கொண்டவர். இவரது இப்பண்பு எல்லோரையும் கவரக் கூடியது. இவர் ஆசிரியராக மற்றும் அதிபராக சுமார் 40 வருடங்கள் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:முகைதீன்,_ஏ._எம்.&oldid=620733" இருந்து மீள்விக்கப்பட்டது