ஆளுமை:தேவகடாட்சம், கனகசபை

நூலகம் இல் இருந்து
Thanujah (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:25, 24 செப்டம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=கனகசபை தேவக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கனகசபை தேவகடாட்சம்
தந்தை கனகசபை
தாய் தங்கரெத்தினம்
பிறப்பு 1953.12.10
ஊர் மூதூர், திருகோணமலை
வகை இலக்கிய ஆளுமை
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


கனகசபை தேவகடாட்சம் அவர்கள் மூதூர் மல்லிகைத்தீவில் கனகசபை, தங்கரெத்தினம் ஆகியோருக்கு மகனாக 1953.12.10 இல் பிறந்தார். மல்லிகைத்தீவு தமிழ் மகாவித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வி கற்றவர். பின்னர், பெருந்தெரு மெதடிஸ்த மிசன் பாடசாலை, பொரளை உவெஸ்லி கல்லூரி, புனித சூசையப்பர் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றவர்.

இலங்கைப் போக்குவரத்துச் சபையில் ரிக்கட் பரிசோதகராக அரச சேவையுள் நுழைந்த இவர் சிறிது காலம் அத்தொழிலைச் செய்த பின்னர் கிராம உத்தியோகத்தராக நியமனம் பெற்றார். 1986 முதல் 2007 வரை கிராம உத்தியோகத்தராகப் பணிபுரிந்துள்ளார்.

இவரது முதல் சிறுகதை 'மதில் மேல்' 1996 இல் தினமுரசுப் பத்திரிகையில் வெளியானதன் மூலம் இலக்கிய உலகுக்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து தினகரன், வீரகேசரி, தினக்குரல் போன்ற பத்திரிகைகளில் இவரது சிறுகதைகள் பிரசுரமாகி உள்ளன. அதேபோல பல வெளிநாட்டுப் பத்திரிகைகள், சஞ்சிகைகளிலும் இவரது கதைகள் பிரசுரமாகியுள்ளன.

இதனைவிட இலக்கியம், வரலாறு, அரசியல் தொடர்பான பல கட்டுரைகளும் இவர் எழுதியுள்ளார். அவை பல பத்திரிகை, சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன. காலக்கீறல்கள் என்பது இவரது முதலாவது சிறுகதைத் தொகுதியாகும். 1998 இல் இது வெளிவந்தது. இச் சிறுகதைத் தொகுதியின் வெளியீட்டு விழாவில் 1 இலட்சத்து 32 ஆயிரம் ரூபா சேர்ந்தது. இத்தொகை முழுவதையும் பேராசிரியர் க. சிவத்தம்பி அவர்கள் மூலம் மட்டக்களப்பில் இயங்கும் விசேட தேவை உடைய பிள்ளைகள் கற்கும் தரிசனம் பாடசாலைக்கு அன்பளிப்புச் செய்தார்.

ஒரு பிடி மண், குமுறல்கள், குருதிமண் என்பன இவரது அடுத்த சிறுகதைத் தொகுதிகளாகும். இந்தகப் புத்தக வெளியீடுகள் மூலம் கிடைக்கும் சகல வருமானங்களும் பாதிக்கப்பட்ட மாணவர் நிதியத்துக்காக இவரால் அன்பளிப்புச் செய்யப்பட்டு வருகின்றன. கிராமங் கிராமமாகச் சென்று பாதிக்கப்பட்ட மாணவர் முன்னேற்றத்துக்கு இவர் பங்களிப்புச் செய்து வருகின்றார்.

இதுவரை 500 க்கு மேற்பட்ட சிறுகதைகள் இவர் எழுதியுள்ளார். உளரீதியாக இவருக்கு ஏற்படுத்தப்பட்ட பாதிப்புகளை பேனா மூலம் வெளிக்கொணரும் முயற்சியாக தான் எழுதத் தூண்டப்பட்டதாக இவர் குறிப்பிடுகின்றார்.

இரட்டை மாட்டு வண்டில் என்ற இவரது சிறுகதை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஒரு அடையாளச் சிறுகதையாக தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு பெற்றது. பேராசிரியர் எம். ஏ. நுஹ்மான் இவரது இச்சிறுகதை தொடர்பாக நல்லதொரு விமர்சனத்தை முன்வைத்திருந்தார். இந்த விமர்சனம் தனக்கு பெரும் உந்துதலை தந்ததாக இவர் குறிப்பிடுகின்றார்.

இதனைவிட இவரது பல சிறுகதைகள் சர்வதேச மட்டத்தில் பல பரிசுகளைப் பெற்றுள்ளன. ஒருமுறை சர்வதேச ரீதியில் நடந்த சிறுகதைப் போட்டியில் வ. அ. இரசாரத்தினம், இவர் மற்றும் எம். எஸ். அமானுல்லா ஆகியோர் முதல் மூன்று இடங்களையும் பெற்றிருந்தனர். இவர்கள் மூவரும் மூதூரைச் சேர்ந்தவர்கள்.

மூதூர்த் தொகுதியின் முன்னாள் முதல்வர் மர்ஹூம் ஏ. எல். அப்துல் மஜீது அவர்களின் இலக்கிய முயற்சிகள் வெகுவாக இவரை ஈர்த்திருந்தது. இதனால் வருடாவருடம் அவரது நினைவு தின நூல்களை இவரே முன்னின்று தயாரித்து வெளியிட ஒழுங்கு செய்தார்.

இவரது சிறுகதைகள் மிகவும் கனதியானவை. சில யதார்த்தமானவை. மண்வாசனையைப் பிரதிபலிப்பவை. உள்ளத்தில் ஏற்பட்ட நெருடல்கள் பலவற்றை இவரது இவரது சிறுகதைகளில் காணலாம்.

பல்துறை ஆளுமை மிக்க ஒருவர் இவர். மிகவும் நெருக்கடியான காலகட்டத்திலும் தனது அரச தொழிலுக்கு அப்பால் கிடைக்கும் நேரங்களை ஒதுக்கி இலக்கியம் படைத்தவர்.

இலக்கிய விருதுகளுக்காக இவர் விண்ணப்பிப்பதில்லை. எனினும், கலாசார உத்தியோகத்தர் ஒருவரது முயற்சியால் கிழக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் வித்தகர் விருது இவருக்கு கிடைத்துள்ளது.