ஆளுமை:சம்பந்தன், இராஜவரோதயம்

நூலகம் இல் இருந்து
Thanujah (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:32, 27 ஆகத்து 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=இராஜவரோதயம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இராஜவரோதயம் சம்பந்தன்
தந்தை அருணாசலம் இராஜவரோதயம்
தாய் பூரண சௌந்தரம் யோகாம்பிகை
பிறப்பு 1933.02.05
இறப்பு 2024.06.30
ஊர் திருகோணமலை
வகை அரசியல்வாதி
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


திருக்கோணமலை மண்ணில் உயர் சைவ வேளான் குலோத்துங்க முதலியார் மரபில் வந்த கல்லோயா திட்டத்தின் (Superintendent of stores at Gal Oya project) களஞ்சியங்கள் அத்தியட்சகராக கடமையாற்றிய திரு. அருணாசலம் இராஜவரோதயம், பூரண சௌந்தரம் யோகாம்பிகை தம்பதிகளுக்கு மகனாக 1933 ஆண்டு மாசி மாதம் ஐந்தாம் திகதி பிறந்தார்.

திருக்கோணேச்சரம் சைவஞானி திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலமான படியால் பெற்றோர் இக்குழந்தைக்கு சம்பந்தன் என்று பெயர் வைத்து மகிழ்ந்தனர். மிகவும் செல்லமாக வளர்ந்த சம்பந்தன் "வாழும் பிள்ளையை மண் விளையாட்டில் தெரியும்" என்ற முதுமொழிக்கேற்ப கல்வியிலும் விளையாட்டிலும் கண்ணும் கருத்துமாயிருந்தார் இராஜவரோதயம் சம்பந்தன். தனது ஆரம்பக் கல்வியை திருகோணமலை புனித மரியாள் கல்லூரி, சென்யோசப் கல்லூரியிலும் கற்று உயர் கல்வியை யாழ் சென் பற்றிக் கல்லூரி, குருணாகல் சென் ஆன் கல்லூரி, மொறட்டுவ சென் செபஸ்ரியார் கல்லூரியிலும் கல்வி கற்று கொழும்பு சட்டக்கல்லூரியில் (Ceylon law college) சிறப்புச் சித்தி பெற்று 1954ஆம் ஆண்டு தனது 21வது வயதில் இலங்கையிலேயே அவ் ஆண்டிற்கான இளம் வயதுச் சட்டத்தரணியாக திருகோணமலைக்கு வந்த பொழுது புகையிரத நிலையத்தில் வரவேற்பளித்தனர் என முதியவர் ஒருவர் கூறினார். ஆங்கிலம். தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளில் பேசக்கூடிய ஆற்றல் கொண்டவர். ஆங்கிலத்தில் சிறப்பாக பேச எழுதக் கூடியவர். இதற்கு காரணமாய் அமைந்தது ஆங்கில பாதிரிமார்களே.

இளம் சட்டத்தரணியாக ஆரம்ப நாட்களில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவர் ஜீ.ஜீ. பொன்னம்பலம் கி.யூ.ஸி யிடம் சட்டப் பயிற்சி பெற்ற பொழுது திறமையான மாணவனாக அவரால் மதிக்கப்பெற்றார். ஆரம்ப நாட்களிலேயே வழக்குப் பேசுவதிலும் வாதாடுவதிலும் குறுக்கு விசாரணை (Cross Examination) செய்வதிலும் தனது திறமையை காட்டினார்.

யாழ்ப்பாணம், கொழும்பு போன்ற இடங்களில் இருந்து வந்த சட்டத்தரணிகளுடன் தனது கட்சிக்காரர்களுக்காக நீதிமன்றில் வாதம் விவாதம் செய்து பல வழக்குகள் வெற்றி பெற்றுக் கொடுத்துள்ளார். இவருடன் கூடிப்பிறந்த சகோதரங்களான லக்ஷ்மிதேவி, சாரதாதேவி, நிர்மலாதேவி, விக்னேஸ்வரன், இராஜ மகேந்திரன், ராஜயோகினி என்போராவார். திருமண வயதில் தொழில்நுட்பவியலாளர் பி.கே உருத்ரா மனோன்மணி தம்பதிகளின் மூன்றாவது மகள் லீலாதேவியை மணம் முடித்து முறையே கிரிசாந்தினி, சஞ்ஜீவன், செந்தூரன் என்போரை பெற்றனர்.

இவர்கள் எல்லோரும் உயர்கல்வி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பல தடவைகள் மந்திரிப் பதவிகள் தேடி வந்த பொழுது அவற்றை தூக்கி எறிந்து தமிழ்பேசும் மக்களின் உரிமைகள் தான் வேண்டும் மந்திரிப்பதவி முக்கியமில்லை என்று கூறியவர். இவரின் தாய்மாமனான சு. சிவபாலன வன்னியனார் என்றால் திருகோணமலை மாவட்டத்தில் தெரியாதவர்கள் கிடையாது. அந்தக் காலத்தில் கட்டுக்குளப் பற்று என்று அழைக்கப்படும் திரியாய் குச்சவெளி, நிலாவெளி, சாம்பல்தீவு போன்றவற்றின் வன்னியனாராக கடமையாற்றியவர். அப்பொழுது இளம் சட்டத்தரணியான சம்பந்தன் ஐயாவை அவர் கிராமங்களுக்கு கூட்டிச் சென்று எனது தங்கச்சியின் மகன் சட்டத்தரணியாக வந்துள்ளான் நீங்கள் உங்கள் வழக்குகள், உறுதிகள் போன்றவற்றை அவரிடம் செய்து பெற்றுக் கொள்ளலாம் என்று மக்களுக்கு அறிமுகப்படுத்தியவர்.

1977ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஐக்கிய தேசியக்கட்சி வேட்பாளரை விட (15144 - 51.76%) வாக்குகளால் வெற்றிபெற்றார். 1977ஆம் ஆண்டு, 1997ஆம் ஆண்டு, 2001ஆம் ஆண்டு, 2004 ஆம் ஆண்டு. 2010 ஆம் ஆண்டு, 2015 ஆம் ஆண்டு, 2020 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற ஏழு பாராளுமன்ற தேர்தல்களிலும் வெற்றி பெற்று திருகோணமலை மக்களின் பிரதிநிதியாக முப்பத்தி நான்கு ஆண்டுகள் கடமையாற்றி முடிசூடா மன்னனாக விளங்கினார். ஆனால் அவரது அரசியல் வாழ்க்கை நாற்பத்தி ஏழு வருடங்கள்.

இரா. சம்பந்தன் ஐயா அவர்கள் சட்டத்தரணி தொழிலிலேயே ஏராளமாக உழைத்து வாழ முடியும். தமிழ் பேசும் மக்களின் உரிமை கருதி தந்தை செல்வாவின் அழைப்பை ஏற்றே அரசியலுக்குள் நுழைந்ததினால் சட்டத் தொழிலை முழுமையாக செய்யமுடியவில்லை. தமிழர் பிரச்சினை தொடர்பாக சர்வதேசத்திற்கு இலங்கை அரசு கொடுத்த வாக்குறுதிகளில் இருந்து தப்ப முடியாது என்பதை சம்பந்தன் ஐயா அடிக்கடி வலியுறுத்தி வந்துள்ளார்.

1963ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராக விளங்கிய என். ஆர். இராஜவரோதயம் அவர்கள் இறந்த பொழுதும் 1970 ஆம் ஆண்டுத் தேர்தலிலும் அவரை இலங்கை தமிழரசுக் கட்சியினர் அழைத்தும் அவர் எம்.பி பதவிக்காக ஓடித்திரிந்தவரல்ல, தன்னை விட வயதில் மூத்தவர்களுக்கு இடமளித்து ஒதுங்கியவர், இவரது நெருங்கிய உறவினர்களான சிவபாலன் வன்னியனாரும், என்.ஆர். இராஜவரோதயமும் திருகோணமலை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள்.

1956ஆம் ஆண்டு ஆவணி மாதம் இலங்கை தமிழரசுக் கட்சியின் பாத யாத்திரையும், மாநாடும் தான் தமிழ் பேசும் மக்கள் மத்தியில் மட்டுமல்ல பண்டாரநாயக்காவின் அரசையே கதிகலங்கச் செய்து பண்டா - செல்வா ஒப்பந்தத்திற்கு வழி வகுத்தது. 1961 ஆம் ஆண்டு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் சம்பந்தன் ஐயாவின் பங்களிப்பு மறக்க முடியாத ஒன்றாகும். சிறையில் அடைப்பட்ட இளைஞர்களை ஒரு சதம் கூட வாங்காமல் இலவசமாக வாதாடி விடுவித்தார்.

2015ஆம் ஆண்டு அனைத்து தேசியத் தலைவர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு இரண்டாவது தமிழ் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பெருமையை பெற்றார். "நீங்களும் வாழுங்கள் எங்களையும் வாழ விடுங்கள்" என்ற தந்தை செல்வாவின் கூற்றுப்படி எல்லா இன மக்களின் உரிமைகளையும் மதித்து வாழ்ந்தவர். எல்லா மக்களும் உரிமை பெற்று வாழ வேண்டுமென்று விரும்பியவர். இந்நாட்டின் ஜனாதிபதியாக இருந்த ஜே. ஆர். ஜயவர்த்தன, ஆர். பிரேமதாச, டி. பி. விஜயதுங்க, சந்திரிகா பண்டாரநாயக்க, மகிந்த ராஜபக்ஷ, மைத்திரி பால சிறிசேன இன்றைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வரை இவர் மீது தனிமதிப்பும் மரியாதையும் வைத்துள்ளார்கள்.

காலத்திற்கு காலம் ஆட்சிக்கு வரும் அரசுகளுடன் இணைந்து அமைச்சர் பதவிகளை அலங்கரித்ததுடன் மட்டுமல்லாது அரச தூதுக்குழுக்களுடன் வெளிநாட்டு வைபவங்களில் கலந்து கொண்டு உண்மையான தமிழ் மக்களின் விடுதலைக்காக பாடுபடும் கட்சியை காட்டிக் கொடுத்ததுடன் மட்டுமல்லாது கிடைக்க இருக்கும் உரிமைகளைக் கூட கிடைக்காமல் செய்தவர்கள்தான் அன்றும் இன்றும் அரசுக்குப் பின்னால் நிற்பவர்கள் இப்படியானவர்களை எதிர்த்து பாராளுமன்றத்திலேயே "நீ வாயை மூடு" என்று கூட பகிரங்கமாக சொன்னவர் சம்பந்தன் ஐயா.

இலங்கை வாழ் தமிழ் மக்களின் பிரச்சினை பற்றி உலகத் தலைவர்களான இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, வி.பி. சிங் குஜ்ரால், மன்மோகன் சிங், நரேந்திர மோடி, தென்னாபிரிக்க ஜனாதிபதி நெல்சன் மண்டேலா மற்றும் நோர்வே வெளிநாட்டு மந்திரி, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகமாக விளங்கியவர்களான கொபிஆனான், பான் கீன் மூன், பிரித்தானிய, கனேடிய, அமெரிக்க, நாட்டுத் தலைவர்கள், ராஜதந்திரிகள் கூட அவர் மீது மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தில் ஓலைக் குடிசையாக இருந்த பாடசாலைகள், வழிபாட்டுத் தலங்கள். வீதிகள், வேலை வாய்ப்புக்கள். பல்வேறு உதவிகள் எல்லாம் தன்னால் இயன்ற அளவுக்குச் செய்துள்ளார்.