ஆளுமை:துவாரகன், பாலசுப்ரமணியம்
பெயர் | பாலசுப்ரமணியம் துவாரகன் |
தந்தை | பாலசுப்ரமணியம் |
தாய் | சிவகாமிஅம்மை |
பிறப்பு | 1975.03.02 |
ஊர் | ஏழாலை |
வகை | கல்வியியல் செயற்பாட்டாளர், எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
இவர் யாழ்ப்பாணம் ஏழாலையை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு கல்வியியல் செயற்பாட்டாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் 1975 ஆண்டு மார்ச் மாதம் 02 ஆம் திகதி பாலசுப்ரமணியம், சிவகாமிஅம்மை தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார்.
இவர் தனது ஆரம்பக்கல்வியை ஏழாலை தெற்கு அமெரிக்கன் மிசன் தமிழ்க் கலவன் பாடசாலையிலும் உயர்கல்வியைதெல்லிப்பழை யூனியன் கல்லூரியிலும் கற்றார். அத்துடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கணிதத்துறையில் விஞ்ஞானமாணிப் பட்டம் பெற்றவர். கடந்த 18 வருடங்களாக சுகாதாரத் துறையில் கடமையாற்றியுள்ளார். 2005 - 2008 காலப்பகுதியில் சுகாதார அமைச்சில் கடமையாற்றியுள்ளார். ஆனாலும் கூட இவர் தனது கல்வி செயற்பாட்டையும் திறம்பட மேற்கொண்டார். இக்காலப்பகுதியில் 10 இற்கும் மேற்பட்ட பல்வேறு துறைசார் ஆளுமைகளை நேர்காணல் செய்து கனடாவிலிருந்து வெளிவரும் 'வைகறை' வாரப்பத்திரிகையிலும் 'காலம்' சஞ்சிகையிலும் பிரசுரித்துள்ளார். அத்துடன் இவர் கலாநிதி. சிவத்திரு க. வைத்தீசுவரக்குருக்கள் நூற்றாண்டு மலரின் பதிப்பாசிரியரும் ஆவார்.
கடந்த 15 வருடங்களாக யாழ். போதனா மருத்துவமனையில் அபிவிருத்தி உத்தியோகத்தராகப் பணியாற்றிய துவாரகன் 2018 இல் யாழ். போதனா மருத்துவமனையில் உருவாக்கப்பட்ட யாழ்ப்பாண மருத்துவ அருங்காட்சியகத்தில் மேலைத்தேச மருத்துவ வரலாற்றை ஆவணப்படுத்தியுள்ளார். இவர் மருத்துவ அருங்காட்சியகத்துக்குப் பொறுப்பு அலுவலராக விளங்குவதுடன் மருத்துவமனைப் பணிப்பாளர் மருத்துவர் த. சத்தியமூர்த்தி அவர்களது வழிகாட்டலில் யாழ்ப்பாணத்தில் தனித்துவமான மருத்துவ அருங்காட்சியகம் உருவாகக் காரணமானவர். இங்குள்ள தொலைமருத்துவப் பிரிவில் பன்னாட்டு மருத்துவ வல்லுநர்கள், பேராசிரியர்கள் வாரந்தோறும் கலந்துகொள்ளும் இணையவழி தொலைமருத்துவக் கருத்தமர்வுகளின் இணைப்பாளராகவும் செயற்படுகின்றார். இலங்கை ஊடகங்களில் யாழ்ப்பாண மருத்துவ வரலாறு தொடர்பான தொடர்களை எழுதி வருகிறார். அதாவது யாழ்ப்பாணத்தில் மேலைத்தேச மருத்துவத்தின் வருகையும் அதன் வளர்ச்சி தொடர்பான தொடரை "எழுநா" இதழில் எழுதியுள்ளார்.