ஆளுமை:தனபாலசிங்கம், எஸ். ஆர்.

நூலகம் இல் இருந்து
Thanujah (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:46, 17 சூலை 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சின்னப்பொட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சின்னப்பொடி ராமன் தனபாலசிங்கம்
தந்தை சின்னப்பொடி ராமன்
தாய் தங்கம்
பிறப்பு 1961.05.24
ஊர் திருகோணமலை
வகை இலக்கியத்துறை செயற்பாட்டாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


சின்னப்பொடி ராமன் தனபாலசிங்கம் அவர்கள் திருகோணமலையைச் சேர்ந்த இலக்கியத்துறை செயற்பாட்டாளர் ஆவார்.

இவர் யாழ்ப்பாணத்தின் வடமராட்சி அல்வாய் மேற்கு பகுதியில் 1961 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 24 ஆம் திகதி சின்னப்பொடி ராமன் மற்றும் தங்கம் தம்பதியினருக்கு நான்காவது பிள்ளையாக பிறந்தார். இவருக்கு மூன்று சகோதரிகள். சாதாரண தொழிலாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

இவர் சிறுவயதில் 1967ஆம் ஆண்டு யாழ் தேவரையாளி இந்துக் கல்லூரியில் தனது ஆரம்பக் கல்வியை கற்றார். உயர்தரக் கல்வியை நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் கற்று 1980 ஆம் ஆண்டு உயர்தரத்தில் சித்தி அடைந்து பேராதனைப் பல்கலைக்கழக கலைப்பீடத்திற்கு தெரிவாகினார்.

1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற வன்செயல் காரணமாக தனது பட்டத்தை பேராதனை பல்கலைக்கழகத்திலிருந்து யாழ் பல்கலைக்கழகத்திற்கு மாற்றி யாழ் பல்கலைக்கழகத்தில் கற்று கலைத்துறைப் பட்டத்தை பெற்றார். பின்னர் இரு வருடங்கள் ஆங்கில ஆசிரியராக தனியார் துறையில் பணியாற்றியதுடன், 1987 ஆம் ஆண்டு திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார். 1989 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆசிரியர் நியமனத்தில் தெரிவுசெய்யப்பட்டு கண்டி மாவட்டத்தின் கலகா தமிழ் மகாவித்தியாலயத்தில் 14 ஆண்டுகள் ஆசிரியராக பணிபுரிந்தார். இந்த சந்தர்ப்பத்தில் பொருளியல் பாடத்தில் பிரதான ஆசிரியராக செயல்பட்டார்.

பின்னர் 2003 ஆம் ஆண்டு திருகோணமலை செல்வநாயகபுரம் இந்து மகா வித்தியாலயத்திற்கு இடமாற்றம் பெற்று வந்தடைந்தார். 2011 மே மாதம் செல்வநாயகபுரம் இந்து மகா வித்தியாலயத்தில் இருந்து அல்பதா மகா வித்தியாலயத்திற்கு தமிழ் பாட ஆசிரியராக இடமாற்றம் பெற்றுச் சென்றார். அங்கு மூன்றரை வருடங்கள் பணியாற்றிய பின் 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முகமதியா வித்தியாலயத்திற்கு இடமாற்றம் பெற்றார். பின்னர் 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் தனது உரிய வயதுக்கு முன்னரே ஓய்வு பெற்று கொண்டார்.

இவரது மனைவியின் பெயர் மேனகா. இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவருக்கு சிறுவயது முதலிலேயே இவரது தந்தையார் ஊடாக நாடகம், பத்திரிகை வாசிப்பு போன்றவற்றில் ஏற்பட்ட ஆர்வம் இவரை இலக்கியத் துறை சார்ந்த செயற்பாட்டாளராக செயல்படுவதற்கு தூண்டியது. மேலும் இவரது ஆரம்பக் கல்வி ஆசிரியராகிய செண்பகம் அவர்களின் ஊக்கமும் இவரது இலக்கிய ஆர்வத்திற்கு காரணமாகிறது. குறிப்பாக தரம் ஐந்தில் கல்வி கற்கும் பொழுது பேச்சுப்போட்டியில் சிறந்த திறமை வெளிப்படுத்துபவர்களுக்கு புத்தகங்களை பரிசாக அளிக்கும் செயற்பாடு இவருக்கு மேலும் பல புத்தகங்களை வாசிக்கவும், இலக்கிய ஆர்வத்தையும் தூண்டியது. இதில் எம். எஸ். சீனித்தம்பி என்னும் ஆசிரியரும் இவரது ஆர்வத்திற்கு ஒரு காரணமாக அமைந்தார்.

மேலும் இவரது வாசிப்பு பழக்கம் காரணமாக இலக்கியத்தில் பல் வேறுபட்ட ஆர்வத்தை பெற்றுக் கொண்டார். இவரது உறவினராகிய தெனியான் அவர்களின் வீட்டு நூலகமும் இவரது வாசிப்புக்கு உதவியது. மேலும் நெல்லியடி பட்டின சபை நூலகமும் காரணமாகியது. ஆரம்பகாலம் முதலே பாடசாலை கவிதை போட்டிகளில் தனது ஆற்றலை வெளிப்படுத்தி வந்த இவர் ஈழநாடு பத்திரிகையிலும் தனது ஆக்கங்களை வெளியிட ஆரம்பித்தார்.

மேலும் இடதுசாரி சிந்தனையுடன் செயல்பட்டு வந்த இவர் தனது ஆக்கங்களை மல்லிகை, வீரகேசரி, தினகரன், சுடரொளி போன்றவற்றில் வெளியீடு செய்தார். 1979 ஆம் ஆண்டு இவர் செவ்வந்தி கையெழுத்து சஞ்சிகை ஊடாக தனது ஆக்கங்களை வெளிப்படுத்தினார். மேலும் வசந்தம் ஆண்டு மலரில் ஆசிரியராக செயல்பட்டு தனது ஆற்றலை வெளிப்படுத்தினார். இவர் 2003 திருகோணமலைக்கு வருகை தந்த போது நந்தினி சேவியர், ஜதீந்திரா, சத்தியதேவன், தில்லைமுகிலன் போன்றோரின் தொடர்பு காரணமாக இலக்கியத் துறையில் ஒரு செயற்பாட்டாளராக செயல்படுவதற்கான வாய்ப்பு இவருக்கு மீள கிடைத்தது.

இவர் 2007 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 'நீங்களும் எழுதலாம்' என்ற சஞ்சிகையை ஆரம்பித்து இருவாரங்களுக்கு ஒரு முறை வெளியீடு செய்ததுடன், திருகோணமலையை சேர்ந்த பல எழுத்தாளர்களுக்கு தங்களது ஆக்கங்களை வெளியிடுவதற்கான இடத்தையும் வழங்கினார். மேலும் நீங்களும் எழுதலாம் வாசகர் வட்டத்தை அமைத்து அதன் ஊடாக பல நிகழ்வுகளை முன் நின்று நடத்தினார். குறிப்பாக பௌர்ணமி நிகழ்வுகள், அஞ்சலி கூட்டங்கள், கவியரங்கு என பல விடயங்களை நடத்திக் காட்டினார். 'நீங்களும் எழுதலாம்' இதுவரை 34 பிரதிகள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ஆடுகளும் ஓநாய்களும் எனும் கவிதை நூலை வெளியிட்டார். அத்துடன் நீங்களும் எழுதலாம் ஊடாக ஆகக் குறைந்தபட்சம், செம்மாதுளம் பூ போன்ற நூல்களை வெளியீடு செய்தார். இவர் திருகோணமலையில் நீண்ட காலமாக நீங்களும் எழுதலாம் வாசகர் வட்டம் ஊடாக பல்வேறுபட்ட செயற்பாடுகளை புரிந்து வருகின்ற ஒரு இலக்கியத் துறை சார் செயற்பாட்டாளர் ஆவார்.