நிறுவனம்:திரு/ செண்பக நாச்சியம்மன் கோவில்

நூலகம் இல் இருந்து
Thanujah (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:18, 10 சூலை 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{நிறுவனம்| பெயர்=செண்பக ந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் செண்பக நாச்சியம்மன் கோவில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் திருகோணமலை
ஊர் இலங்கைத்துறை, மூதூர்
முகவரி செண்பக நாச்சியம்மன் கோவில், இலங்கைத்துறை, மூதூர், திருகோணமலை
தொலைபேசி -
மின்னஞ்சல் -
வலைத்தளம் -


திருக்கோணேஸ்வரத்திற்குத் திருப்பணிசெய்த குளக்கோட்ட மன்னன் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட சிந்து நாட்டவர்களை குடியமர்த்திய இடம் இலங்கைத்துறை. கொட்டியாபுரப்பற்றிலுள்ள மூதூரிலிருந்து இருபத்தொன்பது கிலோமீற்றர் தூரத்தில் ஈச்சிலம்பத்தைக் கிராமத்திற்கூடாகச் சென்று இவ்வூரை அடையலாம். இலங்கையின் கிழக்குக் கரையோரப் பிரதேசங்களைத் தமிழ் மன்னர்கள் ஆண்ட காலத்தில் இது துறைமுகமாயிருந்து வந்தது. இதனால் இவ்வூர் இலங்கைத்துறை எனப் பெயர் பெற்றது. இப்போது இது ஒரு சிறிய கிராமமாக இருக்கின்றது.

இந்தியாவிலிருந்து கிழக்கு மாகாணத்திற்குக் கொண்டு வரப்பட்ட மூன்று அம்மன் விக்கிரகங்களில் செண்பக நாச்சியம்மன் விக்கிரகமும் ஒன்று. செண்பகப்பூப் போல அழகுப் பொலிவோடு இருந்ததால் செண்பகநாச்சி எனப் பெயரிட்டார்களாம். இந்த அம்மனை இலங்கைத்துறையில் இறக்கியபோது அங்கு வாழ்ந்த சிந்து நாட்டவர்கள் கோவில் கட்டிப் பிரதிஷ்டை செய்தார்கள். மற்ற இரண்டு விக்கிரகங்களில் ஒன்று சம்பூரிலும், மற்றது மட்டக்களப்பிலுள்ள தம்பிலுவில் என்ற இடத்திலிருப்பதாகவும் கூறுகின்றார்கள்.

இலங்கைத்துறையில் கல்லினால் கோவில் கட்டிச் செண்பக நாச்சியம்மையாரைத் தாபித்திருந்தார்கள். அக்கோவிலுக்கு எதிரே ஏழு குளங்கள் வெட்டப்பட்டனவாம். அங்கு வாழ்ந்து வந்த சக்கரவர்த்தி குடி, வீரப்பணிக்கன்குடி, படையாண்டகுடி, கவுத்தன்குடி, பாட்டுவாளியார்குடி, வண்ணார்குடி, பறையர்குடி என்னும் ஏழு குடிமக்களுக்கும் அந்தக் குளங்கள் தனித்தனியே உரிமையுடையதாயிருந்ததாம். ஒரு குடிக்குரிய குளத்தை மற்றக் குடியினர் பாவிப்பதில்லை. தொழில்வகையால் அன்று இனம் பிரிக்கப்பட்ட குடிமக்கள் காலக்கிரமத்தில் உயர்வு தாழ்வு தடிப்பில் கூறியிருந்தார்கள். இன்று அந்த வழமைகள் மறைந்துகொண்டு வந்தபோதிலும், வாழ்வு தாழ்வுச் சம்பவ சந்தர்ப்பங்களில் தலைதூக்கி அடக்குகின்றது.

களுவன்கேணியில் வாழ்ந்துவந்த வேடர்கள் சீர்திருந்தி வேறு கிராமங்களுக்குச் சென்று குடியேறியபோது, அவர்களில் ஒருசாரார் இலங்கைத்துறையிலும் குடியேறினார்கள். அக்காலத்தில் இலங்கைத்துறையில் ஏற்பட்ட இயற்கைத் தாக்கங்களால் அங்குவாழ்ந்த சிந்துநாட்டு மக்கள் செண்பக நாச்சி அம்மனை எடுத்து வந்து ஈச்சிலம்பத்தைக் கிராமத்தில் புதிதாக ஆலயம் அமைத்து ஸ்தாபித்து வழிபட்டு வந்தார்கள். இப்போதும் அந்த அம்மன் ஈச்சிலம்பத்தையில் இருக்கின்றது. தினமும் பூசைசெய்து வழிபாடு நடைபெறுகின்றது.

முன்னர் செண்பகநாச்சியம்மன் ஆலயம் இருந்த இடத்தில் இப்போது ஒரு அம்மனை வைத்து செண்பகநாச்சியம்மன் என்ற பெயரில் வேடர்பரம்பரையில் வந்த சீர்திருந்திய மக்கள் வழிபட்டு ஆதரித்து வருகின்றார்கள். முன்னே கூறப்பட்ட குளங்களிலிருந்து தாமரைப்பூ எடுத்து அம்பாளுக்குப் பூசைசெய்து வருகின்றார்கள்.