ஆளுமை:தங்கராசா, கந்தையா

நூலகம் இல் இருந்து
Thanujah (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 21:51, 11 சூன் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=கந்தையா தங்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கந்தையா தங்கராசா
தந்தை கந்தையா
தாய் செல்லம்மா
பிறப்பு 1940.07.01
இறப்பு 2005.11.02
ஊர் ஆலங்கேணி
வகை இலக்கிய ஆளுமை
புனை பெயர் ஆலையூரன்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


கந்தையா தங்கராசா ஒரு பெருந்தகையாளர். கல்விமான், நல்லதொரு ஆசிரியர், சிறந்ததொரு அதிபர், கண்ணியமான கல்விப்பணிப்பாளர்.

திருகோணமலை கிண்ணியா, ஆலங்கேணியைச் சேர்ந்த கந்தையா, செல்லம்மா தம்பதியினருக்கு தங்கராசா அவர்கள் 01.07.1940 இல் பிறந்தவர். ஆலங்கேணி விநாயகர் மகா வித்தியாலயத்திலும், பின்னர் வந்தாறுமூலை மத்திய கல்லூரியில் உயர் கல்வியைக் கற்றவர்.

மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சியினை முடித்து மலையகப் பாடசாலைகளில் கல்வித்தொண்டாற்றியவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் B.A பட்டத்தைப் பெற்றவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் கல்வி டிப்ளோமாவை முடித்தவர் ஆசிரியராகவும் அதிபராகவும் கடமையாற்றியுள்ளார். இலங்கை கல்வி நிர்வாக சேவையில் SLEASல் இணைந்து வலயக் கல்விப் பணிப்பாளராய் மூதூர், திருகோணமலை, வவுனியா ஆகிய பிரதேசங்களில் கடமையாற்றியவர்.

தினகரன் பத்திரிகையில் வெளிவந்த 'வந்தது வசந்தம்' என்ற கவிதை மூலம் இலக்கிய உலகுக்கு அறிமுகமானார். 'ஆலையூரன்' என்ற புனைபெயரில் கவிதைகள் எழுதியுள்ளார். 'தங்கமாமா' என்ற புனைபெயரில் சிறுவர் இலக்கியம் படைத்துள்ளார். வீரகேசரி, தினகரன், சுதந்திரன், சிந்தாமணி, மித்திரன் வாரமலர், ஆதவன், தினக்குரல் போன்ற பத்திரிகைகளில் இவரது ஆக்கங்கள் வெளிவந்துள்ளன.

கவிஞர் தாமரைத்தீவான் தலைமையில் கவிஞர் கேணிப்பித்தன், ஈச்சையூர் தவா, திருகோணமலைக்கவிராயர் போன்றோருடன் திருகோணமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற கவியரங்குகளில் கலந்து கொண்டுள்ளார்.

கந்தையா தங்கராசா 'பொங்கினாள் மீனாச்சி' நூலினை நூலாக்கம் செய்வதில் ஈடுபட்டிருந்தார். தட்டச்சு செய்தவண்ணம் இருந்தது. 'சங்கீதன்' என்ற சிறுவர் நாவலையும் வெளியிட ஏற்பாடு செய்து கொண்டிருக்கையில் 02.11.2005இல் காலமானார்.

அவரது குடும்பத்தவர்களும், இலக்கிய நட்புகளும் அச்சிலிருந்த அவரது இந்த நூல்களையும் பின்னர் வெளியிட்டு வைத்தனர். பொங்கினாள் மீனாச்சி 39 கவிதைகளைக் கொண்டது. முதலாவது கவிதையின் தலைப்பு தான் பொங்கினாள் மீனாச்சி. 39வது கவிதை 'ஓயமாட்டோம்' என்பதாகும்.

சங்கீதன் சுனாமியால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் மனத்துடிப்பை வெளிப்படுத்துவதாக உள்ளது. மிகவும் விறுவிறுப்பான நெடுங்கதை இது. அவரது நினைவுமலர் வெளியீட்டுடன் அவரது சிறுவர் பாடல்கள் சில தொகுக்கப்பட்டு “குழந்தை உலகம்’’ எனும் பெயரில் வெளியிட்டு வைக்கப்பட்டது. கவிஞர் கேணிப்பித்தன் இதனை ஒழுங்குபடுத்தியிருந்தார். கவிஞர் அண்ணலின் நட்பு, பண்புமிக்க அவரது வழிகாட்டல் என்பன தனது கவிதை உணர்வுகளுக்கு உரமிட்டன என்பதையிட்டு தான் பெருமையும், பெருமிதமும் அடைவதாக பொங்கினாள் மீனாட்சி வெளியீட்டுரையில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

இலங்கை கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தரான தங்கராசா அவர்கள் கற்பித்தல் மூலம் மாணவர்களை வசீகரிக்கும் தன்மை கொண்டவர். அவரது கற்பித்தல் பாணி, சொற்களை கையாளும் விதம் மிகவும் அலாதியானது.

கந்தையா தங்கராசா 02.11.2005 இல் அகால மரணமடைந்தார்.