ஆளுமை:இப்றாஹீம், ஏ. சீ. எம்.

நூலகம் இல் இருந்து
Thanujah (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:54, 30 மே 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=அப்துல் காத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அப்துல் காதர் லெப்பை முகம்மது இப்றாஹீம்
தந்தை அப்துல் காதர் லெப்பை
தாய் -
பிறப்பு 1948.09.08
ஊர் கிண்ணியா, திருகோணமலை
வகை எழுத்தாளர், பல்துறை சார் ஆளுமை
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இவர் ஒரு பல்துறை சார் ஆளுமை ஆவார். இவர் 1948.09.08 ஆம் திகதி கிண்ணியா முனைச்சேனையில் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். கந்தளாய்க் குடியேற்றத் திட்டத்தின் கீழ் இவரது தகப்பனாருக்கு முள்ளிப்பொத்தானையில் காணி கிடைத்ததால் இவரது குடும்பம் 1954 இல் அங்கு குடிபெயர்ந்தது.

முள்ளிப்பொத்தனை மத்திய கல்லூரி, கிண்ணியா மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றார். 1968 இல் கிண்ணியா மத்திய கல்லூரியில் சிறந்த பெறுபேறு பெற்றார்.

1972 இல் திருகோணமலை கச்சேரியில் எழுதுவினைஞராக நியமனம் பெற்றார். கிண்ணியாவிலிருந்து கச்சேரியில் பணிபுரிந்த முதலாமவர் இவர். இதன் பின்னர் முன்னாள் இராஜாங்க அமைச்சர் மர்ஹூம் எம். ஈ. எச். மகரூப் அவர்களின் பிரத்தியேகச் செயலாளராக சில ஆண்டுகள் பணிபுரிந்தார்.

1979 இலிருந்து 1987 வரை கணக்காய்வாளர் திணைக்களத்தில் பணிபுரிந்தார். 1988 இல் இலங்கை வெளிநாட்டுச் சேவையுள் நுழைந்த இவர் சீனா, தாய்லாந்து, சவூதி அரேபியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களில் உயர் அதிகாரியாகப் பணிபுரிந்து 2008 இல் சேவையிலிருந்த ஓய்வு பெற்றார்.

ஓய்வுக்குப் பின்னர் கற்று சட்டத்தரணியானார். கிண்ணியா பிரிவின் காதி நீதிபதியாகவும் சில ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். 1968 இல் இவர் இலக்கிய உலகிற் புகுந்தார். 'தங்கப்பாவை' எனும் தலைப்பிலான மரபுக்கவிதை இவரது கன்னிக் கவிதையாக தினபதி கவிதா மண்டலத்தில் பிரசுரமானது. இதனைத் தொடர்ந்து இன்னும் பல கவிதைகள் வெளிவந்தன. சிறுகதை, கட்டுரை என இவரது ஆக்கங்கள் விரிவடைந்தன.

தினகரன், வீரகேசரி, தினக்குரல். நவமணி, தமிழ்த்தந்தி போன்ற பத்திரிகைகளும் ஜீவநதி பொன்ற சஞ்சிகைகளும் இவரது ஆக்கங்களுக்கு களமமைத்துக் கொடுத்தன.

இவரது முதல் நூல் 'சீனாவுக்கான அமைதி வழி அபிவிருத்தியும் அதன் இரகசியமும்' எனும் கட்டுரைத் தொகுதியாகும். 2014 இல் இது வெளியானது. அடுத்து 'என் இதயம் பேசுகின்றது' என்ற கவிதைத்தொகுப்பு 2015இல் வெளியானது. இவரது வாழ்க்கை வரலாற்றைக் கூறும் 'இப்றாஹீமின் இலட்சியக்கனவுகள்' என்ற நூல் 2017 இல் வெளியானது. கலாபூசணம் ஏ.எம்.எம்.அலி இதன் தொகுப்பாசிரியர். 'பொத்தானை வயல்' சிறுகதைத் தொகுப்பு, 'பழுத்தோலை' கவிதைத் தொகுப்பு என்பனவும் இவரது ஏனைய வெளியீடுகளாகும். அரபு நாட்டில் கற்றறிந்த பாடங்கள், நேற்றைய ஞாபகங்கள் (ஆங்கிலம்), கடிதம் தயாரிப்பதிலுள்ள நுட்பங்கள் (ஆங்கிலம்) என்பன ஏனைய நூல்களாகும்.

2016 இல் கொழும்பில் நடைபெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டுள்ளார். இவரது என் இதயம் பேசுகின்றது என்ற கவிதைத் தொகுப்புக்கு கௌரவ விருது கிடைத்தது. காத்தான்குடி பள்ளிவாயல்கள், முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளன கலை கலாசாரப் பிரிவு இந்த விருதை வழங்கியது. கிண்ணியாப் பிரதேச செயலக கலாசாரப் பேரவை, முள்ளிப்பொத்தானை பொதுநல அமைப்புகள் என்பனவும் இவரது கலை கலாசாரச் செயற்பாடுகளைக் கௌரவித்துள்ளன.

2016 இல் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இவருக்கு வித்தகர் விருது வழங்கிக் கௌரவித்தது. 2017 இல் கலாசார அலுவல்கள் திணைக்களம் கலாபூஷணம் விருது வழங்கிக் கௌரவித்தது.