நிறுவனம்:ஸ்ரீ முருகன் கோவில்

நூலகம் இல் இருந்து
Thanujah (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:10, 28 மே 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{நிறுவனம்| பெயர்= ஸ்ரீ மு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஸ்ரீ முருகன் கோவில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் திருகோணமலை
ஊர் திருகோணமலை
முகவரி ஸ்ரீ முருகன் கோவில், திருகோணமலை
தொலைபேசி -
மின்னஞ்சல் -
வலைத்தளம் -


திருகோணமலை நகரில் பத்தாம் குறிச்சி என்ற இடத்தில் இந்தக் கோவில் இருக்கின்றது. குருகுலமக்கள் நெருக்கமாகக் குடியிருக்கும் பத்தாம் குறிச்சியில் கடல் அலைகள் தவழ்ந்து வந்து முருகன் கோவிலைத் தொட்டுச்செல்லும் அளவுக்குக் கடற்கரை ஓரமாக இந்தக் கோவில் அமைந்திருக்கின்ற போதிலும், கோவிலுக்குக் கடலால் எந்தவிதமான சேதமும் ஏற்படுவதில்லை. இதுவும் அதிசயந்தான். இந்தக் கோவிலில் இருந்து அரைக்கிலோமீற்றர் தூரத்தில் கடலால் பிரிக்கப்பட்டுக் கோணேசர் கோவில் காட்சியளிக்கின்றது.

இன்று கற்கோவிலாகக் கட்டப்பட்டிருக்கும் இவ்வாலயம் சுமார் நூறு வருடங்களுக்கு முன் ஓலைக்கொட்டிலாக இருந்தது. அக்காலத்தில் இந்த இடத்தில் தொழில் செய்த மீனவர்கள் தங்களின் தொழிற் பாதுகாப்பிற்காகவும், கடலில் சென்று தொழில் செய்யும் போது ஆபத்துக்கள் ஏற்படாதிருப்பதற்காகவும் முருகனை நினைத்து இந்த இடத்தில் ஒரு கொட்டில் கோவில் கட்டி அதில் வேல் ஒன்றை வைத்து பூசை, பிரார்த்தனை செய்து தொழிலுக்குச் சென்று வந்தார்கள். தொழிலினால் நல்ல ஊதியம் கிடைத்ததால், வருடத்தில் ஒரு நாள் இந்த இடத்தில் பெரிய மண்டபம் அமைத்து மக்களுக்குச் சிறந்தமுறையில் அன்னதானம் செய்து வந்தார்கள். இதனைப் பேரமுது என்று கூறுவார்கள். காலஞ் செல்லச் செல்ல தாங்கள் வைத்து வழிபடும் வேல்தான் தங்களுக்கு எல்லா நன்மைகளையும் செய்கின்றது என்ற நம்பிக்கை வலுப்பெற்றதால் அந்த வேலுக்கு நித்திய பூசையை செய்ய வல்லிபுரம் என்பவரைப் பூசகராக நியமித்தார்கள். மக்களுக்குப் பக்தியும், விஸ்வாசமும் வளர வளரக் கொட்டில் கோவிலைப் பெரிதாகக் கட்டிச் சைவக் குருக்களைக் கொண்டு நித்திய பூசை செய்வித்து வந்தார்கள். வருடா வருடம் நடைபெற்று வந்த அன்னதானமும் மிகச் சிறப்பாகப் பெருவிழாபோல் நடைபெற்றது. இந்த அன்னதானத்தின் போது திருகோணமலையிலுள்ள பிராமணர்களையெல்லாம் அழைத்துத் தானம் வழங்கி அன்னதானத்தை விரிவாகவும், விசேஷமாகவும் செய்து வந்தார்கள்.

மேலும் மேலும் இந்த வேல்முருகன் மீது மக்களுக்குப் பக்தி பெருகிய காரணத்தினால் கற்கோவில் கட்டவேண்டுமென்ற எண்ணமும் உறுதிப்பட்டு வந்தது. இதனால் இந்த இடத்தில் குடியிருக்கும் மக்கள் ஸ்ரீமுருகன் ஆலய பரிபாலன சபையை அமைத்து நிதி திரட்டி 1952 ஆம் ஆண்டு கோவில் திருப்பணியை ஆரம்பித்து நிறைவேற்றி 1956 ஆம் ஆண்டு கும்பாபிஷேகத்தைச் செய்வித்தார்கள். கும்பாபிஷேகத்தின் பின் பிராமணக் குருக்களை பூசைசெய்ய ஏற்பாடு செய்தார்கள். இப்போதும் அவ்வாறே நடைபெற்று வருகின்றது.

அழகிய தூபியையுடைய கருவறையில் வேல் ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றது. வள்ளி தெய்வயானை சமேத சண்முகப் பெருமானும், முத்துலிங்கசுவாமி, நந்தகோபாலர், மகா மண்டபத்தில் எழுந்தருளியுள்ளார்கள். பிள்ளையார் சிலா விக்கிரகமும் அங்கு வைக்கப்பட்டிருக்கின்றது. காலை, மாலை இரண்டு கால நித்திய பூசைகள் நடைபெற்று வருகின்றன. கும்பாபிஷேக தினத்தை முதல் நாளாகக் கொண்டு வைகாசி மாதத்தில் பத்து நாட்கள் அலங்கார உற்சவம் நடைபெறுகின்றது. உற்சவ முடிவின் மறுநாள் அன்னதானம் நடைபெறுகின்றது. அன்னதானத்தினால் உருவாகிய ஆலயத்தில் தொடர்ந்தும் அன்னதானம் நடைபெற்று வருவது போற்றத்தக்கதே. திருவெம்பாவை, நவராத்திரி, திருக்கார்த்திகை, சித்திரா பூரணை போன்ற காலங்களில் விசேட பூசை விழாக்களும் நடைபெற்று வருகின்றன. மகாமகத்தின் போது திருகோணமலையிலுள்ள பல ஆலயங்களிலுமிருந்து சுவாமிகள் எழுந்தருளிச் சென்று தீர்த்த கடற்கரையில் எல்லாச் சுவாமிகளோடும் நின்று மக்கள் திரளாக வந்து தீர்த்தமாடுவார்கள். இத்தினத்தில் ஸ்ரீமுருகனும் சென்று தீர்த்தமாடுவார். இதுவும் திருகோணமலையில் நடைபெற்று வருகின்ற பக்திபூர்வமான சமயப் பெருவிழாவாகும்.