ஆளுமை:ஹனீபா, எஸ். எல். எம்.
பெயர் | எஸ்.எல்.எம். ஹனீபா |
தந்தை | தம்பி சாய்வு சின்னலெவ்வை |
தாய் | முகைதீன் பாவா கலந்தர் உம்மா |
பிறப்பு | 1946.04.01 |
ஊர் | ஓட்டமாவடி, மட்டக்களப்பு |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
எஸ். எல். எம். ஹனீபா கிழக்கிலங்கை மட்டக்களப்பு மாவட்டம் ஓட்டமாவடியை சேர்ந்த ஆளுமை மிக்க எழுத்தாளர் ஆவார். இவர் தம்பி சாய்வு சின்னலெவ்வைக்கும், முகைதீன் பாவா கலந்தர் உம்மாவுக்கும் மூன்றாவது குழந்தையாக இலங்கை, மீராவோடை மண்ணின் சட்டிப்பானைத்தெருவில் 1946 ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி பிறந்தார். இவரோடு உடன் பிறந்தவர்கள் ஐந்து பேர்.
இவர் தனது ஆரம்பக்கல்வியை 1951 ஆம் ஆண்டு மீராவோடை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கற்றார். ஹிதாயதுல்லாஹ் மௌலவியிடம் இஸ்லாம் சமயப்பாடங்களைக் கற்றார். துரைராஜா, பொன்னுசாமி, கிருஷ்ணப்பிள்ளை போன்ற நண்பர்கள் மூலம் பாடல்கள் கற்றார். ஐந்தாம் ஆண்டு ஓட்டமாவடி அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் பயின்றார். அங்கு கட்டாய பாடமாக சங்கீதமும், பரதநாட்டியமும் கற்றார். 1966, 1967 ஆம் ஆண்டுகளில் கிளிநொச்சி விவசாயப் பாடசாலையில் இணைந்து கல்வி கற்றார்.
விவசாயப்பாடசாலையில் பயின்ற பின் மலேரியா பிரிவில் வேலை கிடைத்தது. (அன்டி மலேரியா சூப்பவைசர்). அவர் காலத்தில்தான் கல்குடா தொகுதியில் மூன்று கிராமங்களுக்கும் முழுமையாக மலேரியா ஒழிப்பு எண்ணெய் அடிக்கப்பட்டது. 1968 இல் கால்நடை அபிவிருத்தி போதனாசிரியராக பேராதனை பல்கலைக்கழகத்தில் இணைந்தார்.
1969 இல் அக்கரைப்பற்று நகரில் விவசாய அபிவிருத்தி போதனாசிரியராகப் பணி செய்தார். இவர் கண்டி வத்தேகம, வாழைச்சேனை, கெகிராவ, புத்தளம், மட்டக்களப்பு, பொலனறுவை, வெளிக்கந்தை, திருக்கோணமடு ஆகிய இடங்களில் பணியாற்றினார். இருபத்தியொரு வருட ஆசிரியப் பணிக்குப்பின் விடுதலைப் புலிகளின் கெடுபிடிகள் மேலோங்கியிருந்த காலத்தில் டிசம்பர் 31 1990 இல் ஓய்வு பெற்றார். தாவரவியல், விலங்கியல் தொடர்பான ஆலோசனைகளையும், வழிகாட்டல்களையும் செய்கிறார்.
நவம்பர் 26, 1968 இல் அஹமது உசன் முஹம்மது பாத்து என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். மகள்கள் ஜனூபா, மாஜிதா. மகன் நௌபல். அகில இலங்கை மட்டத்தில் குறுந்தூர ஓட்டக்காரராக பந்தயத்தில் விருதுகள் பெற்றார். 1965 இல் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு ஆதரவாக றகுமானின் அரசியல் மேடையில் ஏறினார். 1963 இல் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கிளையை கல்குடா பிரதேசத்தில் நிறுவினார். இளமையில் இடதுசாரி அரசியல் கருத்துக்களாலும், அக்கட்சியின் கொள்கைத் திட்டங்களாலும், அந்த அரசாங்கத்தில் கல்வி அமைச்சராக இருந்த பதியுதீன் மஹ்மூத் அவர்களின் கல்வித் திட்டத்தாலும் ஈர்க்கபட்டு அதில் இணைந்து பணி செய்தார்.
பண்டாரநாயக்க அம்மையாரின் பொதுக்கூட்டத்தில் அவர் மேடையில் ஏறி உரையாற்றினார். 1969 இல் அக்கரைப்பற்றில் சென்ற தருணம் தான் ஆர். ஆ. அஸ்ரஃப் அவர்களின் அறிமுகம் கிடைத்தது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் அஸ்ரஃப் சேகு இஸ், ஸதீன் இவர்களுக்கு அடுத்த நிலையில் எஸ். எல். எம் ஹனீபா முதன்மை பெற்றார். 1988 இல் மாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு 1989 இல் வடகிழக்கு மாகாணசபையின் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த வை. அஹமத்தின் உதவியுடன் மாகாண கல்விப்பணிப்பாளரின் ஒத்துழைப்புடன் மாவடிச்சேனை, கேணி நகர், மாஞ்சோலை ஆகிய பிரதேசங்களில் ஆரம்ப பாடசாலைகளையும் ஆரம்பித்து வைத்தார். ஓட்டமாவடி பாதிமா பாளிகா பெண்கள் பாடசாலையை தனியாக ஆரம்பிப்பதில் பங்கு வகித்தார். ஓட்டமாவடி பல நோக்கு கூட்டுறவு சங்க வளாகத்தில் இயங்கிக்கொண்டிருந்த தாய் சேய் பராமரிப்பு நிலையத்தினையும் நிறுவினார். ஏறாவூர் நகரில் தொழிலற்ற நான்கு இளைஞர்களுக்கு பல நோக்கு கூட்டுறவு சங்க மேற்பார்வை அதிகாரி நியமனங்களையும் பெற்றுக்கொடுத்தார்.
ஏறாவூர் அல்முனீரா வித்தியாலயத்தில் க.பொ.த. உயர்தர வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கான அனுமதியையும் பெற்றுக்கொடுத்தார். ஸ்.எல்.எம் ஹனீபா மட்டக்களப்பு வாசிகசாலை மூலம் இலக்கிய வாசிப்பில் ஈடுபட்டார். சிறுகதைகள் எழுதத் துவங்கி ஐம்பது கதைகள் எழுதியுள்ளார். எஸ். எல். எம் ஹனீபாவின் முதல் சிறுகதை 'நெஞ்சின் நினைவினிலே' 1962 இல் ராதா சஞ்சிகையில் வெளியானது. அதன் பின்னர் இன்சான், இளம்பிறை, வீரகேசரி போன்றவற்றில் கதைகளை எழுதினார். பணத்திரை, அவள் அல்லவோ அன்னை ஆகிய கதைகள் ராதாவில் வெளியானது. சன்மார்க்கம், ஊக்கு, ஆத்மாவின் ராகங்கள் போன்ற கதைகள் இன்சானில் வெளியானது.
1970 இல் இளம்பிறையில் வேலி, குளிர்கன்று உட்பட நான்கு சிறுகதைகள் வெளியானது. அதில் சில கதைகள் இரு தொகுதிகளாக 'மக்கத்துச் சால்வை' (1992), 'அவளும் ஒரு பாற்கடல்' (2007) பிரசுரம் பெற்றிருக்கின்றன. சில கதைகளை பத்திரப்படுத்த முடியவில்லை. 1992 இல் வெளியான மக்கத்துச்சால்வை அரச பாடத்திட்டத்தில் சாதாரண தரவகுப்பு மாணவர்களுக்கான தமிழ் இலக்கியத்தொகுப்பில் சேர்க்கப்பட்டது. 15 ஆண்டுகாலம் அந்தச்சிறுகதை பாடத்திட்டத்தில் இருந்தது. 'மக்கத்துச்சால்வை' தொகுதியிலுள்ள சிறுகதைகள் உள்ளிட்ட பிற்காலத்தில் எழுதிய சில கதைகளையும் தொகுத்து ‘அவளும் ஒரு பாற்கடல்’ தொகுதி டிசம்பர் 2007 இல் காலச்சுவடு பதிப்பகத்தினரால் வெளியிடப்பட்டது.
1992 இல் ஆண்டில் மக்கத்துச்சால்வை தொகுதிக்கு தமிழ்நாடு கோவை லில்லி தேவசிகாமணி விருது பெற்றது. 1994 ஆம் ஆண்டு சந்திரிகா அரசாங்கத்தில் மக்கத்துசால்வை தொகுதி சிறந்த சிறுகதைத்தொகுதிக்கான இலங்கை சாகித்ய மண்டல பரிசைப்பெற்றது. 2000 ஆம் ஆண்டு இலக்கியப்பணிகளுக்காக கிழக்கு மாகாண ஆளுநர் விருது வழங்கப்பட்டது. 2005 ஆம் ஆண்டு கலாபூசணம் கௌரவத்தை இலங்கை அரசு அளித்தது. மட்டக்களப்பு மாவட்ட கலாசாரப்பேரவையின் விருது பெற்றார். 2010 இல் ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் கலாசாரப்பேரவையின் விருது & மக்கத்துச் சால்வை விருது என்பன பெற்றுள்ளார்.