நிறுவனம்:சின்னத்தொடுவாய் சித்திவிநாயகர் கோவில்

நூலகம் இல் இருந்து
Thanujah (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:15, 6 மே 2024 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{நிறுவனம்| பெயர்=சின்னத்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சின்னத்தொடுவாய் சித்திவிநாயகர் கோவில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் திருகோணமலை
ஊர் திருகோணமலை
முகவரி சின்னத்தொடுவாய் சித்திவிநாயகர் கோவில், திருகோணமலை
தொலைபேசி -
மின்னஞ்சல் -
வலைத்தளம் -


இந்த ஆலயம் திருகோணமலைப் நகரில், புகையிரத நிலையத்திற்குச் சமீபமாக இருக்கின்றது. பாடல்பெற்ற திருக்கோணேஸ்வரத்தோடு இவ்வாலய வரலாறு சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது.

திருக்கோணாசல புராணத்தில் பின்வருமாறு கூறப்பட்டிருக்கின்றது. "அனுராதபுரத்தை அரசாண்ட கஜபாகு மன்னன் திருக்கோணேஸ்வரத்தை இடித்து அழிக்கப்போவதாகக் கூறிக்கொண்டு, அனுராதபுரத்திலிருந்து படையுடன் வந்தானாம். வழியில் இரண்டு கண்களும் பார்வை இழந்துவிட்டன. தனது அகங்காரத்தினால்தான் இப்படி நேர்ந்ததென்று உணர்ந்தான். இப்போது கந்தளாய் என்று கூறப்படும் இடத்தில் ஒரு அந்தணன் எதிர்ப்பட்டு, விபூதிகொடுத்து ஆசீர்வதிக்க ஒரு கண் பார்வை பெற்றான். கண் தளைத்த இடமாதலால் அந்த இடம் கந்தளாய் என்று பெயரிடப்பட்டது. தனது அகங்காரத்திற்குப் பரிகாரம் தேடும் ஆவலோடு கஜபாகு மன்னன் கோணேஸ்வரத்தை நோக்கி வந்துகொண்டிருந்தான். திருக்கோணேஸ்வரத்திற்குச் சமீபமாக வரும்போது கோணேசர் அருளால் மற்றைய கண்ணும் பார்வை பெற்றதாம். இதனால் இந்த இடத்திற்குச் சின்னக் கந்தளாய் என்று பெயரிடப்பட்டதாகக் கூறப்படுகின்றது'’. திருக்கோணாசல வைபவமாலையும் இவ் வரலாற்றைக் கூறுகின்றது.

இந்தச் சின்னக் கந்தளாய் என்னுமிடத்தில்தான் சின்னத் தொடுவாய்ப் பிள்ளையார் கோவில் இருக்கின்றது. இவ்விடத்தில் ஆறுகள் வந்து கடலில் "படுக்கை" எனும் இடத்தில கலப்பதாலும், இப்பெயர் பெற்றது. சின்னத்தொடு வாய் ஆறு சங்கமமாகும் இடத்தில் கடற்கரையோரமாக இவ்வாலயம் கட்டப்பட்டதால் இதற்குச் சின்னத்தொடுவாய்ப் பிள்ளையார் கோவில் என்று பெயர் சூட்டப்பட்டது.

திருகோணமலையில் தெட்சணகயிலாயம் எனப்படும் கோணேஸ்வரம் தான் பெரிய கோவில். ஆதலால் கோணமாமலையிலுள்ள ஏனைய கோவில்கள் அக்காலத்தில் சிறியனவாகவே கட்டப்பட்டிருந்தன. இவ்வாலயம் கல்லால் கட்டப்பட்ட சிறிய கோவில்தான். கோவில் வாசலில் நின்றபடியே கோணமாமலை அமர்ந்த கோணேசப்பெருமானையும் தரிசிக்கலாம். இடையில் கடல்தான் பிரித்து நிற்கின்றது. இவ்வாலயத்திற்கருகில் ஒரு திருமடம் இருக்கின்றது. பக்கத்திலே கேணியும், சுமைதாங்கியும், ஆவரிஞ்சு தூணும் உண்டு.

அக்காலத்தில் சாம்பல்தீவு, நிலாவெளி முதலிய கிராமங்களிலிருந்து வருபவர்கள் இவ்வாலயத்தின் அருகிலுள்ள சுமை தாங்கியில் தாம் கொண்டுவந்த வியாபாரப் பொதிகளை இறக்கி வைத்து கேணியில் நீர்பருகி, திருமடத்தில் இளைப்பாறிச் செல்வார்களாம். ஆவுரிஞ்சு தூணில் மாடுகள் முதுகு தேய்த்துத் தினவு நீக்கிக் கொள்ளுமாம்.

இந்தத் திருமடம் திருகோணமலையில் ஒரு ஆதீனமாக இருந்து தமிழையும், சைவத்தையும் வளர்த்து வந்ததாகக் காலஞ்சென்ற பெரியார் திரு. அ. அழகைக்கோன் அவர்கள் பல வருடங்களுக்கு முன் கூறியுள்ளார். இதில் உண்மையிருக்கின்றது என்பதை, திரு. விஸ்வலிங்கம் சின்னப்பு ஐயர் மூலம் அறியக் கிடைத்துள்ளது.

சின்னத்தொடுவாய்ப் பிள்ளையார் கோவிலோடு தொடர்புபட்டிருந்த இந்தத் திருமடம் சுமார் நானூற்றைம்பது வருடங்களுக்கு முன் ஆதீனமாயிருந்தது. இந்த ஆதீன பரம்பரையினர் நூல்களை இயற்றியும், தமிழாராய்ந்தும், புராணங்களை ஏடுகளில் எழுதியும், சமயப்பணியாற்றி வந்துள்ளார்கள். ஆறுமுகப்புலவரால் பிரதி செய்யப்பட்ட கந்தபுராண ஏடொன்று திரியாயிலுள்ள திரு. க. கந்தையா ஐயரிடம் இருந்துள்ளது.

பண்டைக்காலத்தில் சிறியதாயிருந்த இவ்வாலயம் பின்னர் கற்பக்கிரகம், அர்த்தமண்டபம், மகாமண்டபம், தரிசன மண்டபங்களைக் கொண்டதாகக் கல்லால் கட்டப்பட்டது. ஆலயத்திற்குச் சொந்தமாக எட்டு ஏக்கர் காணி நன்கொடையாக வழங்கப்பட்டிருக்கின்றது. திரு. கதிரவேல் முதலியாரும் அவருடைய சந்ததியினரும் காணிகளை நன்கொடையாகக் கொடுத்து ஆதரித்து வந்துள்ளார்கள்.

கருவறையில் பிள்ளையார் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றது. மகாமண்டபத்தில் மூஷிகம், பலிபீடம் உண்டு. சுவாமி தீர்த்தமாடுவதற்கு அருகிலே கேணியிருக்கின்றது. காலைச்சந்தி, மாலைச்சந்தி ஆகிய இரண்டுகாலப் பூசைகளும், ஆனி உத்தரத்தைத் தீர்த்த தினமாகக் கொண்டு முதற் பத்து நாட்களும் அலங்கார உற்சவம் நடைபெற்று வருகின்றது. பிள்ளையார்கதை, திருவெம்பாவை, சித்திரா பூரணை போன்ற நாட்களில் விசேட பூசைகள் நடைபெறுகின்றன.

இரண்டாவது உலக மகாயுத்தத்தின் பின்னர் ஆலயச் சூழல் மாற்றமடைந்திருக்கின்றது. இதனை உணர்ந்த உணர்ச்சியும், பயபக்தியும், விசுவாசமும் உடைய இளைஞர்கள் ஆலய பரிபாலன சபையை அமைத்து பரிபாலனம் செய்து வந்தார்கள். 1981.11.09 இல் பாலஸ்தாபனம் செய்து, கும்பாபிஷேகம் நடைபெற்று உள்ளது.

இவ்வாறு புகழ்பெற்ற ஆலயம் தற்பொழுது முறையற்ற நிர்வாக செயற்பாடுகளாலும் ஆக்கிரமிப்புகளாலும் சீரழிவுற்றுள்ளது. ஆலயத்தின் வாயிலை பின்னால் வசிக்கும் மாற்று மதத்தவர்கள் பயன்படுத்தி வருவதுடன், கேணியையும் ஆக்கிரமித்துள்ளனர். ஆலயத்திற்கு சொந்தமான காணிகளும் அடாத்தாக உடைமை கொள்ளப்பட்டுள்ளது.

இவ்விடயங்களை சீர் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும், உரிய பயன் கிட்டவில்லை.