ஆளுமை:சிவகுமார், சஞ்சீவி
பெயர் | சஞ்சீவி சிவகுமார் |
தந்தை | சஞ்சீவி |
தாய் | அழகுநேசம் |
பிறப்பு | 1969.08.22 |
ஊர் | நற்பிட்டிமுனை, அம்பாறை |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சஞ்சீவி சிவகுமார் அவர்கள் அம்பாறை மாவட்டம் நற்பிட்டிமுனை கிராமத்தில் வசிக்கும் எழுத்தாளர் ஆவார். இவர் 1969.08.22 இல் சஞ்சீவி மற்றும் அழகுநேசம் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். இவருக்கு இரண்டு சகோதரர்களும், ஒரு சகோதரியும் உண்டு.
இவர் தனது ஆரம்பக் கல்வியை 1976 – 1982 வரை நற்பிட்டிமுனை கமு/சிவசக்தி வித்தியாலயத்திலும் இரண்டாம் நிலைக்கல்வியை கமு/கார்மேல் பாத்திமா கல்லூரியிலும் அதன் பின்னர் விஞ்ஞான துறையில் பயின்று விவசாய இளமாணி பட்டம் கற்பதற்கான வாய்ப்பு கிழக்கு பல்கலைக்கழகத்தில் கிடைத்தது. அங்கு பயின்று விவசாய பட்டத்தை பெற்றதுடன் பின்னர் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தற்காலிக உதவி விரிவுரையாளராக 2000 ஏப்ரல் வரை பணியாற்றினார். தொடர்ந்து இலங்கை விவசாயச் சேவையில் சில காலம் சேவையாற்றியதுடன் 2002 இல் பல்கலைக்கழக அமைப்பில் உதவிப் பதிவாளர் பதவியைப் பெற்றார்.
அதன் பின் பட்டப்பின் படிப்பான முகாமைத்துவ டிப்ளோமா பாடநெறியை கற்று முடித்தார். பொது நிர்வாக முகாமைத்துவ முதுமாணி கற்கைநெறியை கொழும்பு பல்கலைக்கழகத்தில் கற்றார். 1980 களில் இருந்து கலை இலக்கிய செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார். ஆரம்ப காலங்களில் இலங்கை வானொலியில் பாவளம், வாலிப வட்டம் போன்ற நிகழ்ச்சிகளில் அவரது கவிதை ஆக்கங்கள் ஒலிபரப்பானது. அதனைத் தொடர்ந்து வானொலி மற்றும் தொலைக்காட்சியில் மெல்லிசைப் பாடல்கள் ஒலிபரப்பானது.
1985 இல் குன்றின் குரல் சஞ்சிகை நடாத்திய மலையக கவிதைப் போட்டிகளிலே மூன்றாம் இடத்தினைப் பெற்றுக்கொண்டார். 1992 இல் பேராதனை பல்கலைக்கழகம் நடாத்திய சாகித்திய விழாவில் சிறுகதைப் போட்டிகளிலே முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார். 1998 இல் கலாசார முக்கோணத் திட்டத்தின் கீழான கட்டுரைப் போட்டிகளில் பரிசில் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து சார்க் போட்டி, துறவி ஞாபகார்த்த கட்டுரைப் போட்டி, தமிழ்ச்சங்கத்தின் தங்கம்மா அப்பாக்குட்டி இலக்கண கட்டுரை போன்றன குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய போட்டிகளாகும்.
பிரதேச கலை இலக்கிய செயற்பாடுகளில் பல்வேறுபட்ட விமர்சனக் கட்டுரைகள், நூல் ஆய்வு முதலானவற்றை நிகழ்த்தியுள்ளார். பொது செயற்பாடுகளாக நற்பிட்டிமுனை இந்து இளைஞர் மன்றம் மற்றும் அதனோடு கூடிய அறநெறி பாடசாலை வகுப்புக்கள் போன்றவற்றை ஆரம்பித்துள்ளார். மற்றும் பிரதேச கலை இலக்கிய ஆன்மீக அமைப்புக்களிலும் பங்களிப்புச் செய்கின்றார். இவர் ஆவணங்களை பாதுகாக்கும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான நூலக நிறுவனத்தின் உறுப்பினர் சபையில் பணியாற்றியுள்ளார். 2009 இல் இருந்து விக்கிபீடியாவில் பங்களிப்பு செய்து வருகிறார். கிழக்கு மாகாணத்தில் தினக்குரல் பத்திரிகை இயங்கிய காலத்தில் அப்பத்திரிகையின் இந்துசமய குரல் எனும் பக்கத்திற்கான பக்க ஆசிரியராக ஒரு வருட காலம் பணியாற்றியுள்ளார்.
Earth Lanka எனப்படும் சுற்றாடல் சார்ந்த இணையவழி சஞ்சிகையின் தமிழ் பிரிவின் ஆசிரியராக கடமையாற்றியுள்ளார். கல்முனை நெற் பரிணாமம் எனப்படும் சஞ்சிகையின் சரித்திர ஆசிரியர் பார்வை பகுதியின் ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார். இது வரையில் ரோசா செய்கை விவசாய செய்கை நூலும் கிழக்கு பல்கழைக்கழகத்தில் வெளியிடப்பட்ட முகங்கள் எனும் சஞ்சிகையில் எழுவரில் ஒருவராக சிறுகதைத் தொகுதியும் கிழக்கு 100 சிறுகதைகள் தொகுப்பில் ஒரு தொகுதியும் Montreal யில் வைக்கப்பட்டுள்ள Cartagena Protocol on Biosafety technology உடன்படிக்கையின் தமிழாக்கத்தை சுற்றாடல் அமைச்சின் வேண்டுகோளுக்கமைய மொழி பெயர்த்துள்ளார். கமநலம் சஞ்சிகையில் தொடர்ச்சியாக எழுதி வருகிறார். இவருக்கு துறவி ஞாபகார்த்த விருதும் சிலாஸ் எனப்படும் விஞ்ஞான முன்னேற்ற சங்கம் விஞ்ஞானத்தை விருத்தி செய்தமைக்காக தேசிய வாழ்நாள் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பிரதிப் பதிவாளராகப் பணியாற்றி வருகின்றார்.